நம்பிக்கை மனுஷிகள்!Sponsoredவானவன் மாதேவி, இயல் இசை வல்லபி- இவர்கள் இருவரும் தன்னம்பிக்கையின் சிகரங்கள். 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்ற தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களைப் பற்றி ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.

தங்களைப் போல நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் இருப்பவர்களுக்காக, இவர்கள் ஆற்றி வரும் சேவைகளைப் பற்றி, ஊடகவியலாளர் கீதா இளங்கோவன் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இவர் 'மாதவிடாய்' என்ற ஆவணப்படம் மூலம் பரவலான கவனத்தைக் குவித்தவர்.

Sponsored


முகநூலில் அதிகம் ஷேரிங் ஆகும் `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படத்தில், சகோதரிகள் இருவரும் தங்கள் வாழ்க்கையின் கடுமையான நாட்களையும், அதை எதிர்கொண்டு ஜெயித்த கதையையும் தோழமையோடு விளக்குகிறார்கள். பார்ப்பவர்களுக்கு உத்வேகம் கொள்ளும் வகையில், மகிழ்ச்சி ததும்ப பாசாங்கின்றி காட்சியாக்கப்பட்டிருப்பதால், மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது இந்தக் குறும்படம்.

`நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் வியாபார நோக்கம் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமான மக்களின் பார்வைக்குக் கொண்டுபோய் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு வாழ்வின் நல்ல சங்கதிகளின் மீது நம்பிக்கை மிகுதிப்படும். நோயினால் படிப்படியாக உறுப்புகள் செயல் இழந்து போனாலும், இவர்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. நல்ல நண்பர்களின் ஆதரவு , பிசியோதெரபி பயிற்சி என நோயை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.

Sponsored


அதோடு விடவில்லை. நமக்கு கிடைத்தது, தம்மைப் போல பாதிப்புக்குள்ளானோருக்கும் கிடைக்க வேண்டும் என முடிவெடுத்து “ஆதவ் டிரஸ்ட்“ என்ற பெயரில் சேலத்தில் சிகிச்சை இல்லம் ஒன்றைத் தொடங்கி, அவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்துவருகிறார்கள். அதை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது உள்ள அவர்கள், உங்களிடம் எதிர்பார்ப்பது பரிதாபமோ, கருணையோ அல்ல. அன்பும், அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவும் மட்டுமே. குறும்படம் பார்ப்பவர்களுக்கு அது நன்கு விளங்கும்.

'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்றால்  தமிழில் 'தசைச்சிதைவு' நோய். இது ஒரு மரபணு நோயாகும். தசை கட்டுப்பாட்டுக்குத் தேவையான ஒரு புரதத்துக்கு அடிப்படையான மரபணு குறைபாடே நோயின் ஆரம்பம்.  அடிப்படையான புரதக் குறைபாட்டால் தசை நார்களின் சக்தி குறைகிறது. மேலும் இவை தசையை இறுகும் தன்மைக்குக் கொண்டு செல்கிறது. இறுகிய தசைகளால் மனித எலும்பு மண்டலம்,  மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தைப் பாதிக்கிறது. அதுதான் தசைச்சிதைவுக்கு வழிவகுக்கிறது.

பொதுவாக மனித உடல் இரு வேறு வகையான தசைகளால் ஆனது. தன்னிச்சையாக இயங்கும் தசைகள் (நுரையீரல்,இதயம்). இரண்டாவது நாம் அசைக்க நினைக்கும் போது அசையும் தசைகள் (கை ,கால்கள் ). தசைசிதைவு நோய் முதலில் நாம் அசைக்க நினைக்கும்போது அசையும் தசைகளையே பாதிக்கிறது. இதன் விளைவாக நோய் தாக்கப்பட்ட குழந்தைக்கு, அடிக்கடி கீழே விழுதல், அமர்ந்த நிலையிலிருந்து எழுவதற்கு சிரமப்படுதல், படிகளில் ஏற இயலாமை போன்ற சிரமங்கள் ஏற்படும்.

நாளடைவில் தன்னிச்சையாக இயங்கும் தசைகளையும் அது பாதிக்கும் அளவுக்குக் கொண்டு செல்லும். தசைச்சிதைவு நோய் இந்தியாவில் பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தாக்குவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தசைச்சிதைவு நோயைப்பற்றி புரிதலும் விழிப்பு உணர்வும் நம்மிடையே இல்லை. இந்தத் தகவல்களை  குறும்படத்தில் சகோதரிகள் இருவரும் விளக்கி இருக்கிறார்கள்.

தசைச்சிதைவு நோய் பாதித்த ஒரு குழந்தையின் குடும்பத்தில், மீண்டும் இன்னொரு குழந்தையைத் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் உள்ளது. மரபணு ஆலோசனைகளின் மூலம் அதனைத் தடுத்திட முடியும். குழந்தை பாதிக்கப்பட்டு நடை இழந்தாலும், தன் நிலை மாறினாலும் மீண்டும் நடக்கவும், மற்ற குழந்தைகளிடம் பாகுபாடின்றி பழக்கவும் பிசியோதெரபி பயிற்சிகளால் முடியும்.

மொத்தத்தில் இப்படி ஒரு புரியாத புதுவித நோயால் தாக்குண்டால் உலகமே இருண்டுவிட்டதைப்போல வருத்தப்படாமல், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம். வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி போன்று அதை தன்னம்பிக்கையால் வெல்லும் யுக்தியை கையாண்டு, முன்மாதிரியாக திகழ்ந்தால் அதுவே மனிதகுலத்திற்கு அது பெரிய பாடமமாக இருக்கும்.

குறும்படத்தில் இந்த அனுபவங்கள் ஆலோசனைகளாக விரியும்போது தன்னம்பிக்கையால் நோயை வெல்லும் வழி தெரிகிறது.

தலை வணங்கலாம் இவர்களை!
 Trending Articles

Sponsored