தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூக்கு மாற்றமா?!Sponsoredஅ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், புரட்சித் தலைவி அ.தி.மு.க அணி என்ற பெயரில் தனியாகச் செயல்பட்டார். அதன்பிறகு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்குச் சென்றதும், அந்தக் கட்சியின் அறிவிக்கப்படாத தலைவராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே இருந்தார். அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனையே கட்சியைவிட்டு ஓரம் கட்டினார். இதனால், தினகரன் தனியாகச் செயல்படத் தொடங்கினார். இதனால், அ.தி.மு.க-வில் மூன்று அணிகள் உருவாகி இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தக் குளறுபடிகள் 6 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்தன. இந்நிலையில், தினகரனை வெளியேற்றிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் அணியைத் தன் தலைமையில் செயல்படும் ஆட்சி அதிகாரத்தில் இணைத்துக்கொண்டார். கடந்த 21-ம் தேதி தலைமைக் கழகத்தில் அந்த இணைப்பு நடந்தது. அதன்பிறகு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில், ஓ.பி.எஸ்-க்கு நிதியமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அவரோடு வெளியேறிய மாஃபா.பாண்டியராஜன் அமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும் பல கட்சிப் பொறுப்புகளும் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சசிகலா குடும்பம் அதிர்ச்சியடைந்தது. குறிப்பாக சசிகலாவின் சகோதரர் திவாகரன், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை உடைத்து வெளியில் கொண்டுவரும் வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கினர். ஆட்சியைக் கலைப்பதற்கான ஆயத்த வேலைகள் தீவிரம் அடைந்ததைப் போல் அரசியல் நிலவரம் தென்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்குக் குடைச்சல் கொடுக்கும் அத்தனை வழிகளிலும்

அந்தக் குடும்பம் இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், நேற்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கேட்டு கடிதம் கொடுத்தனர். அதன்பிறகு, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் ப்ஃளவர் என்ற தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்தார் தினகரன். தினகரனின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணியினரும் காய் நகர்த்தி வருகின்றனர். அதன் தொடக்கமாக, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளரான ஓம்.சக்தி சேகர் அவருடைய ஆதரவாளர்களுடன் போய், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் விடுதி முன்பு போராட்டம் நடத்தினார்.  

Sponsored


அதில் அதிர்ச்சி அடைந்த தினகரன், “மற்றவர்களும் இதுபோல் தொடர்ந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தால்,  தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். மேலும், பாண்டிச்சேரியில் பா.ஜ.க ஆதரவாளரான கிரண்பேடி ஆளுநராக இருப்பதால் அவரும் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குவார். அதனால், வேறு மாநிலத்துக்கு நமது எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிடுவது நல்லது என தன் ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தங்க வைக்க சரியான இடம் பெங்களூருதான் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குடைச்சல் கொடுக்க முடியாது. மேலும், அங்கு பி.ஜே.பி ஆட்சி இல்லை. பெங்களூரு அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், பி.ஜே.பி-யின் தொந்தரவுகளும் குறைவாக இருக்கும் என்றும் தினகரன் நினைக்கிறார். அதனால், இன்று இரவு அல்லது நாளை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்படுவார்கள் என தினகரன் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Sponsored
Trending Articles

Sponsored