“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!” - ஹெச்.ராஜா ஆவேசம்Sponsored“சாரணர் இயக்கத்தின் மாநிலத் தலைவராக ஹெச்.ராஜாவைக் கொண்டுவரும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது பிஞ்சுகள் உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்றது" என தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதைக் கேட்டு கடும் ஆவேசம் அடைந்துள்ளார் பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. 

தமிழ்நாடு சாரண-சாரணியர் இயக்கத்தின் தமிழக தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரும் வாக்களிக்க உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டையில் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் ராஜா. இந்நிலையில் சாரணர் இயக்க தலைவர் பதவிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


இந்தத் தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மணி போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். இவர்கள் இருவருமே சாரணர் இயக்க தலைவர் பதவிக்கான போட்டியில் களத்தில் உள்ளார்கள். இந்நிலையில் சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு ஹெச்.ராஜா போட்டியிடுவதைக் கண்டித்து, தி.மு.க செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவியை பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவிற்குத் தாரைவார்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூட்டுசதி செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி, சாரண- சாரணியர் இயக்கத்தினர் இடையேயும், நடுநிலையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


இந்த இயக்கத்தின் புரவலராக ஆளுநரும், துணைப் புரவலராக கல்வி அமைச்சரும் இருக்கும் நிலையில், அதன் தலைவர் பதவியை பி.ஜே.பி-க்குக் கொடுப்பதன் மூலம், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க, இப்போது திரைமறைவில் அனைத்து முயற்சிகளும் நடைபெறுவதாகக் கல்வியாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹெச்.ராஜாவிற்கு எதிராக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியாற்றி, பள்ளிக் கல்வியில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள மணி போட்டியிட விரும்புகிறார் என்று தெரிந்ததும், அவர் ஆளுங்கட்சியின் சார்பில் மிரட்டப்பட்டுள்ளார். "நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது" என்று கல்வித்துறை அமைச்சர் தரப்பிலிருந்தே எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இப்போது முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஹெச்.ராஜாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சார்பில் மிரட்டப்படுகிறார்கள். அவருக்கு வாக்களிக்கவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்திற்கு எதிரான முறையில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். 

ஹெச்.ராஜாவைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நினைத்து, செயல்பட்ட கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இப்போது போட்டி என்ற வந்தவுடன் கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் மூலம் வாக்காளர்களை மிரட்டி, அ.தி.மு.க. நடத்தும் ஜனநாயகத்திற்குப் புறம்பான இடைத்தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. பி.ஜே.பி-யைச் சேர்ந்தவரை அரசுப் பதவியில் அமர்த்த, சாரணர் இயக்கத் தலைவர் தேர்தல் தொடர்பான விதிகள் எல்லாம் சர்வாதிகார ரீதியில் வளைக்கப்பட்டுள்ளன என்று வெளியாகும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் அகில இந்திய அளவில் காவிக் கொள்கையையும், மதவாதக் கொள்கைகளையும் மாணவர்கள் இதயத்தில் புகுத்திவிட முயற்சிக்கும் பி.ஜே.பி அரசு, தற்போது தமிழகத்தில் உள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்குள்ளும் புகுந்து, தமிழக மாணவர்கள் மனதில் காவிக் கொள்கையைப் புகுத்திக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது. 

ஊழல் நிறைந்த அ.தி.மு.க அரசாங்கத்தில் பதவி பெற, இப்போது பி.ஜே.பி. பகிரங்கமாகவே முயற்சி செய்வது இந்த சாரண, சாரணியர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் ஊரறிந்த செய்தியாகி விட்டது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஹெச்.ராஜாவை பதவியில் அமர்த்த, தேர்தல் விதிகளை உள்நோக்கத்துடன் மாற்றியமைத்துள்ள ஊழல் அதிமுக அரசுக்கும், அந்தப் பதவியைப் பெற அரசு இயந்திரத்தை வைத்து வாக்காளர்களை மிரட்டும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கும், ஹெச்.ராஜா ஆதரவாளர்களுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டாலினின் விமர்சனம் குறித்து ஹெச்.ராஜாவிடம் கேட்டபோது “சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவி என்பது அரசு நிர்வாகத்தினால் தன்னிச்சையாக நியமிக்கபடுவதல்ல. தேர்தல் மூலமே அந்தப் பதவி நிரப்பப்படுகிறது. நாட்டின் மீது தேசபக்தி உடையவன் என்ற முறையி்ல் சாரண இயக்கத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். பள்ளிக்காலத்திலேயே சாரணர் இயக்கத்தில் நான் பங்கெடுத்தவன். எனது தந்தையார் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் சாரணர் இயக்கத்தில் முக்கியப் பதவிகளை வகித்து வந்தவர். இயல்பாகவே சாரணர் இயக்கத்தின் மீது எங்களுக்கு பற்று அதிகம். அந்த அடிப்படையில் நான் போட்டியிடுகிறேன். ஆனால் தேசப்பற்றும், தெய்வீகப்பற்றும் இல்லாத திராவிட இயகத்தினர் நாட்டையே ஆளத் துடிப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியுமா?. ஒரு தேசப்பற்றுமிக்க இயக்கத்திற்கு தேசபக்தி உள்ள ஒருவன் தலைவராக வருவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'  என்ற கதையாக, ஸ்டாலினின் அறிக்கை உள்ளது. யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று ஆவேசமாக பதில் அளித்தார்.Trending Articles

Sponsored