"சாட்டையைச் சுழற்றவா... சம்பிரதாயத்திற்கா?" - ஸ்டாலின் நேர்காணலும் பின்னணியும்



Sponsored



"இனி சாட்டையைச் சுழற்றப் போகிறார் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். அதற்கான முதல்படிதான், மாவட்ட வாரியாக நடைபெற உள்ள நிர்வாகிகளின் நேர்காணல்கள்” என்று பூடகமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள் தி.மு.க முன்னணியினர். 

கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டைக் கடந்த நிலையில், தி.மு.க-வின் செயல்பாடுகள் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்ற குற்றச்சாட்டு, தி.மு.கவினர் மத்தியிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக, ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வான பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழந்தது அந்தக் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கும் தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டிய தி.மு.க, அதையும் செய்யவில்லை. ஜெயலலிதா இடம்பெறாத சட்டசபையிலும் தி.மு.க-வின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை எனக் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

Sponsored


இதனால், தி.மு.க-வின் தலைமை குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கவிஞர் வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சை தொடர்பான விவகாரத்திலும் ஸ்டாலினின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்ற வருத்தம் தமிழ் ஆர்வலர்களிடையே இருந்தது. இந்த நிலையில், தி.மு.க. கட்சிக்குள்ளும் பல்வேறு குழப்பங்கள் மாவட்டவாரியாக இருந்துவருகின்றன. 

Sponsored


தி.மு.க. தலைவர் கருணாநிதி முழுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மாவட்ட வாரியாக உள்கட்சி பிரச்னைகளை, அவ்வப்போது நிர்வாகிகளை அழைத்துப்பேசி சரிசெய்து விடுவார். குறிப்பாக கோஷ்டி தலைவர்களை அறிவாலயத்திற்கு வரவழைத்து, அனைத்துப் பிரச்னைகளையும்முடித்துவைக்கும் சாமர்த்தியம் கருணாநிதியிடம் இருந்தது. ஆனால், இப்போது தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள், ஸ்டாலினிடம் எதையும் வெளிப்படையாகப் பேசமுடிவில்லை. 'அவரைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கிறது. அவர்கள்தான் ஸ்டாலினை இயக்குகிறார்கள்' என்று ஓப்பனாகவே புலம்ப ஆரம்பித்தனர் பல மாவட்டச் செயலாளர்கள்.

அவர்கள், "செயல் தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை, மாவட்டச் செயலாளர்களை அழைத்து தனித்தனியாகப் பேசி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள கட்சியின் பிரச்னைகள், உள்கட்சி நிலவரம் என்று எதையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. தலைமைக்கும், கீழே உள்ள நிர்வாகிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவரும் நிலையும் உள்ளது. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தவரை, இந்த இடைவெளி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். ஆனால், இந்த ஓராண்டில் கட்சிக்குள் தொய்வு ஏற்பட்டதாக வெளிப்படையாகவே தெரிய வந்தது. பேருந்துக் கட்டண உயர்வினைத் தொடர்ந்து, தி.மு.க சார்பில் முதலில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வராவிட்டால் போராட்டம் பிசுபிசுத்து விடும் என்ற சந்தேகம் தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டதாலேயே அனைத்துக் கட்சிகளுடனும் அவசர ஆலோசனை நடத்தி, மறியல் போராட்ட அறிவிப்பினை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற தி.மு.க. மறியல் போராட்டத்தில் 87 ஆயிரம் பேர் மட்டுமே கைது செய்யபட்டனர். அதிலும் ஸ்டாலின் பங்கேற்ற கொளத்துார் பகுதியில் 600 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதை தி.மு.க-வினரே ரசிக்கவில்லை. தி.மு.க-வின் தொண்டர்கள் மத்தியில் தலைமை மீதான பிடிப்பு குறைந்து வருவதையே இது காட்டுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், தி.மு.க-வை பலப்படுத்தும் திட்டத்தில் மாவட்டவாரியாக நேர்காணல் நடத்தும் முடிவுக்கு செயல் தலைவர் வந்துவிட்டார்" என்கிறார்கள்.

"இதேபோன்ற மாவட்ட வாரியான நேர்காணல், கடந்த 2005-ம் ஆண்டு கருணாநிதியால் நடத்தப்பட்டது. அப்போது பல மாவட்டங்களில் இருந்த உள்கட்சி பூசலுக்கு முடிவு கட்டப்பட்டது. அதேபோல், இந்தமுறை நேர்காணலை நடத்தி உள்கட்சிப் பூசலுக்கு முடிவுகட்டும் திட்டத்தில் உள்ளார் ஸ்டாலின். பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக கோஷ்டிகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கட்டுப்பாடு இல்லாத நிலை உள்ளதால், இந்த நேர்காணலில் இருதரப்பையும் கண்டிக்கும் முடிவில் ஸ்டாலின் உள்ளார். சில மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டாமல் இருப்பதால், அவர்களைக் கழற்றிவிடும் முடிவிலும் ஸ்டாலின் உள்ளார்" என்கிறார்கள் தி.மு.க. முக்கியத் தலைவர்கள். மேலும் கட்சித்  தொண்டர்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக, அறிவாலயத்தின் வாயிலில் பெட்டி வைக்கப்பட உள்ளது. அந்தப் பெட்டியில் 'தொண்டர்கள் தங்களின் கருத்துகளை எழுதிப் போடலாம்' என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு, அந்தப் பகுதியில் கட்சியின் நிர்வாகிகளைக் கூண்டோடு கலைத்து விட்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பொறுப்புகளையும் பறித்தார் ஸ்டாலின். அதேபோல் 'இனி மாவட்டவாரியாக சாட்டையைச் சுழற்றினால் மட்டுமே, தி.மு.க-வைப் பலப்படுத்த முடியும்' என்று ஸ்டாலின் கருதுகிறார்.

மேலும், "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்துவிடும்' என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதால், ஏற்கெனவே கோட்டை விட்டதுபோன்று, இனிவரும் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்து விடக்கூடாது என்ற உறுதியுடன் செயல்தலைவர் செயல்படப் போகிறார். அதற்காக இனி சாட்டையைச் சுழற்றுவதற்கு அவர் தயங்க மாட்டார்" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

"சாட்டையைச் சுழற்றும்முன் தன்னைச் சுற்றியுள்ள முகஸ்துதிகளை ஸ்டாலின் கழற்றிவிட்டாலே போதும்” என்று கமென்ட் அடிக்கிறார் தி.மு.க மாவட்ட நிர்வாகி ஒருவர்.

எதை முதலில் செய்யப் போகிறார் ஸ்டாலின் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 



Trending Articles

Sponsored