"டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்கவே பெயர் மாற்றம்!" - ஸ்டாலின் விமர்சனம்



Sponsored



தலைநகர் டெல்லியில், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கு, ஒவ்வொரு மாநில அரசின் சார்பிலும் தனி இல்லங்கள் உள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் டெல்லியில் இரண்டு இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. ஒன்று, கெளடியா மார்க் பகுதியில் உள்ள மூன்றடுக்கு மாடிகள் கொண்ட பழைய தமிழ்நாடு இல்லம், மற்றொன்று, பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் உள்ள  நான்கடுக்கு மாடிகள் கொண்ட கூடுதல் தமிழ்நாடு விருந்தினர் இல்லம். இந்த இல்லங்களின் பெயர்களை மாற்றி, சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  அதன்படி, கெளடியா மார்க் பகுதியில் உள்ள இல்லத்துக்கு,  'வைகைத் தமிழ்நாடு இல்லம்' என்றும், பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் உள்ள  இல்லத்துக்கு, 'பொதிகைத் தமிழ்நாடு இல்லம்' என்றும் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தப் பெயர் மாற்றத்துக்கு ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினும் இந்தப் பெயர் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்க தமிழ்நாடு இல்லம் பெயரை மாற்ற முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. திராவிட இயக்கத்தில் சாதனையாக இருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றவோ, அழிக்கவோ கூடாது. டெல்லியில் கேரளா இல்லம், பீகார் இல்லம் போன்றவை செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மட்டும் ஏன் மாற்றப்பட்டுள்ளது. பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றம் செய்ய தமிழக அரசு துணை போகக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.  

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored