“எதிர்ப்பாளர்களுக்கு ஏராளமான கவனிப்பு” - தி.மு.க உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு கலாட்டா!



Sponsored



தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலினால் நடத்தப்பட்டுவரும் உடன்பிறப்புகளுடன் கூடிய கள ஆய்வு நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகளின் கவனிப்பால் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் திக்குமுக்காடிப் போகிறார்கள் என்ற தகவல் அறிவாலயத்தில் தீயாய்ப் பரவியுள்ளது. 

தி.மு.க-வினைப் பலப்படுத்தவும், உட்கட்சிப் பூசலைக் களைந்து மாவட்ட ரீதியாகக் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்  கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்துவருகிறார். மாவட்டச் செயலாளர் முதல் கீழ்நிலையில் உள்ள ஊராட்சிச் செயலாளர்கள்வரை அனைத்து நிர்வாகிகள், சார்பு அணியின் அனைத்துமட்ட நிர்வாகிகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளோடு இந்தக் கள ஆய்வை நடத்திவருகிறார். 

Sponsored


இந்தக் கள ஆய்வில் கலந்துகொண்டவர்களின் பட்டியல், ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட... பின், அதிலிருந்து இருபது நபர்களைப் பேசுவதற்காக ஸ்டாலின் அழைக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மேல்மட்டம் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை ஸ்டாலின் முன்னிலையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கீழ்மட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் நிர்வாகிகள் பலர் மாவட்டச் செயலாளர்கள் மீதும் மாவட்ட நிர்வாகிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிவிடுகிறார்கள். இந்தக் கள ஆய்வு முடிந்தபிறகு, குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை ஸ்டாலின் அழைத்து எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசுகிறார். “நான், உங்களுடன் சகஜமாகப் பழகுவது வேறு, கட்சியின் செயல் திட்டம் என்பது வேறு. எனது பழக்கத்தை வைத்துக்கொண்டு நீங்கள் தவறு செய்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஸ்டாலின் கடுமை காட்டியுள்ளார். இதனால் கள ஆய்வு நடக்கும் ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்களுமே கலக்கம் அடைந்து வருகிறார்கள்.

Sponsored


இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பிருந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் புதிய யுக்தி ஒன்றைக் கையாண்டு வருவதாக அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். நாளை எந்த மாவட்டத்தின் கள ஆய்வு நடைபெறுகிறதோ, அந்த மாவட்டத்தில் யார், யார் கள ஆய்வில் பங்கேற்கப் போகிறார்கள் என்ற பட்டியல்  முதல்நாளே தயார் செய்யப்பட்டுவிடுகிறது. மேலும், அந்தப் பட்டியல் ஸ்டாலினுக்குப் போகும்முன்பு யாரிடம் கேள்வி கேட்கலாம் என்பதையும் அந்தப் பட்டியலில் குறித்துவிடுகிறார்கள். இதைத்தான் மாவட்டச் செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்கிறார்களாம். 

எந்த நிர்வாகிகளுக்கு எல்லாம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறதோ, அவர்களை முதல்நாள் இரவே மாவட்டச் செயலாளர் தரப்பு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஸ்டாலின் முன்பு எந்தக் குறையும் தங்களைப் பற்றிக் கூறிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களிடம் டீலிங் நடத்தப்படுகிறது. நிர்வாகியின் பதவியைப் பொறுத்து தொகை இரவோடு இரவாக முடிவாகிவிடுகிறது. மேலும் அவர்களுக்கு, மாவட்டச் செயலாளர் செலவிலேயே ரூம் போட்டுக் கொடுத்து அறிவாலயம் வந்து செல்வதற்கான வாகனச்செலவுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

இதனால் ஸ்டாலின் முன்னிலையில் குறைகளைக் கொட்டித் தீர்க்கலாம் என்று ஊரில் இருந்து கிளம்பிவந்தவர்கள் கமுக்கமாக இருந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஒவ்வொரு விதத்தில் இந்தக் கவனிப்பை நடத்திவருகிறார்கள் என்கிறார்கள். ஒரு மாவட்டச் செயலாளர், தனக்கு சிக்கலைக் கள ஆய்வில் ஏற்படுத்திவிடுவார் என்று கருதிய சிலருக்கு இரவோடு இரவாக புது செல்போன் வாங்கிக் கொடுத்து அவர்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொல்லியுள்ளார். இந்த யுக்தியை இப்போது பல மாவட்டச் செயலாளர்களும் செய்ய ஆரம்பித்துவிட்டதால், கள ஆய்வில் ஆரம்பத்தில் இருந்த காரசாரம் இப்போது இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள். இந்த ஐடியாவை மாவட்டச் செயலாளர்களுக்குக் கொடுத்ததே ஸ்டாலினுக்கு நெருக்கமான ஒரு பிரமுகர்தானாம். அவரை முதலில் மாவட்டச் செயலாளர்கள் கவனித்துவிடுவதால், இந்த லிஸ்ட் விவகாரத்தை அவர்களிடம் கொடுத்துவிடுகிறார் முக்கியப் பிரமுகர். இது எல்லாம் ஸ்டாலினுக்குத் தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா என்று புலம்புகிறது ஒரு டீம். 

அதேநேரம், தீர்வுகாணும் பெட்டியில் வழக்கம்போல் புகார்கள் குவியத்தான் செய்கின்றன. அந்தப் பெட்டியில் குவியும் புகார்களுக்கு இன்னும் ஸ்டாலின் தரப்பில் இருந்து பெரிய அளவில் ரியாக்‌ஷன் இல்லாமல் இருப்பதால், அதுவரை மாவட்டச் செயலாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். 

கள ஆய்விலும் இப்படி ஒரு கலாட்டாவா?



Trending Articles

Sponsored