`கேக்கை அரிவாளால் வெட்டுவதுதான் அமைதிப் பூங்காவா?' - ஓ.பி.எஸ்ஸை சாடிய தமிழிசை'அமைதிப் பூங்காவான தமிழகத்தில், கேக்கை அரிவாளால் வெட்டும் நிலைமை உள்ளது' என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

Sponsored


ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கும், தமிழக பா.ஜ.க-வுக்குமான மோதல் சமீபத்தில் அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் ரகசிய கூட்டணி வைத்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், இவர்களிடையே அடிக்கடி வார்த்தைப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, அரசு சரியாகச் செயல்படவில்லை, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் தடுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தெரிவித்ததை உறுதிப்படுத்துகிறது. சில தினங்களுக்கு முன், தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது என்றும், இதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில்  தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்.ராதாகிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். 

Sponsored


இந்த நிலையில், 'ஓ.பி.எஸ் கூறும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில்தான் கேக்கை அரிவாளால் வெட்டும் நிலைமை உள்ளது' என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கிறது என்று ஓ.பி.எஸ் கூறினாலும், இங்குதான் கேக்கை அரிவாள் வைத்து வெட்டும் நிலைமை உள்ளது. இதனால், பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறிவிடக்கூடாது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழைக் காப்பாற்ற பா.ஜ.க-வால் மாட்டும்தான் முடியும். காவிரி நதிநீர் உரிமையைப் பெற சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும். காவிரி நீர் வழக்கில் தமிழகத்திற்காக தண்ணீர் அளவு குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை தருகிறது" என்றார். இதன்மூலம் அ.தி.மு.க-வுக்கும் தமிழக பா.ஜ.க-வுக்கும் இடையேயான மோதல் மேலும் முற்றிவருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored