`நீங்கள் என் தோழர்' - உறுப்பினர்களுக்கு கமல் கடிதம் #KamalPartyLaunch



Sponsored



தனது 'மையம்' உறுப்பினர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

கலாம் வீட்டில், காலை உணவுடன் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. இனி, முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகும் அவருக்கு, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர். இன்று மாலை கட்சிப் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிப்பதுடன், முதல் அரசியல் மாநாட்டையும் நடத்த உள்ளார். இது ஒருபுறம் இருக்க, அவரது மன்றத்தின்மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அதன் ஒருபகுதியாக, மன்றத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள maiam.com-ல் பெயரைப் பதிவுசெய்தவர்களுக்கு, கமல்ஹாசன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

Sponsored


மெயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "எங்கள் maiam.com -ல் தங்கள் பெயரைப் பதிவு செய்தமைக்கு நன்றி. நீங்களும், உங்களைப் போன்றோரும் எழுதிய கருத்துகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. சுயநலம் மட்டுமே கருதும் அரசியல்வாதிகளால், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இல்லை, தெருக்களும் சாலைகளும் சீராக இல்லை, தண்ணீர்ப் பஞ்சம், மின்சாரப் பற்றாக்குறை, விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் வளர்ச்சியோ பாதுகாப்போ இல்லை, திருட்டு பயம், காவல்துறை பயம், மாஃபியா பயம். மருத்துவமனைகளும் கல்விக்கூடங்களும் போதிய தரத்தில், போதிய அளவில் இல்லை. வேலை தரும் புது தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கே செல்கின்றன. தமிழரின் ஒற்றுமையும் சமத்துவமும் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் எதிர்கொள்ள, மக்கள் நலம் பேணும், நெறி தவறாத, யாருக்கும் பயப்படாத, அரசியல் தலைமை தேவை. அது இங்கு இல்லை.

Sponsored


தோழரே, இனியும் குறை கூறிப் பயனில்லை. செயலில் இறங்குவோம்! நம் கனவுத் தமிழ்நாட்டை நாமே உருவாக்குவோம்! நம் முதல் பணி, உங்களைப்போல தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, நாம் எடுத்துக்கொண்ட 8 கிராமங்களை உயர்த்துவதுதான். நம் அணியிலிருந்து ஒருவர் உங்களை இன்னும் ஓரிரு வாரங்களில் விரிவான திட்டத்துடன் தொடர்புகொள்வார். அதற்குமுன், உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால் அவற்றை #maiamideas என்ற ஹேஷ்டாக்-ஐ இணைத்து ட்வீட் செய்யுங்கள்.

கிராமியமே நம் தேசியம் என்றால், நாளை நமதே! இன்று ராமேஸ்வரத்தில் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வீட்டில் தொடங்கி முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நம் கட்சி அறிவிப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. நமது கட்சியின் ஆதாரக் கொள்கைகளின் அடிநாத விளக்கம் அங்கே அறிமுகமாகிறது. அவசியம் வந்து நம் நிகழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுகிறேன். இது ஒரு இனிய ஆரம்பம், நீங்கள் என் தோழர், ஒரு புதிய தமிழ் நாடு நம் முன்னே மலரவிருக்கிறது. நாம் அனைவரும் கூடித் தேரை இழுத்தால், நாளை நமதே!

நன்றி!

உங்கள்
கமல்ஹாசன்



Trending Articles

Sponsored