``அப்படி இருப்பாரோ?'' - கமல்மீது சந்தேகம் எழுப்பும் ஹெச்.ராஜாSponsoredமாமன்னன் ராஜராஜசோழன் குறித்து இழிவாகப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனப் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வந்திருந்தார். முன்னதாகப் பெரிய கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், "தஞ்சாவூருக்குப் பெருமையே பெரிய கோயில்தான். இந்தக் கோயிலை நிர்மாணித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். தெற்காசிய நாடுகள் முழுவதும் தன் அதிகாரத்தைச் செலுத்தி ஆட்சி செய்ததோடு மட்டும் இல்லாமல் முதன்முதலாக கப்பற்படையையும் நிறுவியவர். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கும் பெரிய அளவில் பெருமையை ஏற்படுத்தித்தந்தவர். 

Sponsored


ஆனால், மாமன்னன் ராஜாராஜ சோழனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முட்டாள் ராஜா என்றும், வெங்காயம் என்றும் விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது தமிழ் சமுதாயத்தை அசிங்கப்படுத்தும் விதமாக உள்ளது. இதற்கு வீரமணி மன்னிப்புக் கேட்க வேண்டும். திராவிட இயக்கத்தினர் கட்டிய சமத்துவபுரம் வீடுகள்கூட மூன்று வருடத்தில் சேதமடைந்துவிடுகின்றன. ஆனால், ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் 1,100 வருடங்களைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. எந்தத் தகுதியும் இல்லாத வீரமணி நாவடக்கத்தோடு பேச வேண்டும். வெளிநாட்டில் இருக்கக்கூடிய தமிழகத்தின் சிலைகள் பிரதமர் மோடியின் முயற்சியில் மீட்டுக் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல் குஜராத் மியூசியத்தில் ராஜராஜ சோழனின் ஒரிஜினல் சிலை இருப்பதாகத் தெரிவிக்கிறீர்கள். அப்படி இருக்குமானால் அதை மீட்பதற்கு முழு முயற்சியும் எடுக்கப்படும். கமல்ஹாசன் கட்சித் தொடங்கியதுக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். 

Sponsored


ஆனால், ராமேஸ்வரம் சென்றவருக்கு அங்கு சென்றால் என்ன நினைவு வர வேண்டியது ராமநாத ஸ்வாமி கோயில்தான். ஆனால் அந்த கோயிலுக்கு அவர்  செல்லவில்லை. அவர் நடித்த திரைப்படங்களில் இந்துக்களை இழிவாகப் பேசி, நையாண்டி செய்து நடித்துள்ளார். அதேபோல் அரசியலிலும் `இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் எதிராக இருப்பாரோ' எனச் சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு தமிழகத்தில் 38,635 கோயில்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், பல்லாயிரக் கணக்கான கோயில்கள் காணவில்லை. அதை மீட்பதோடு அதன் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்றார். முன்னதாக காவிரி விவகாரம் குறித்து கேட்டதற்கு கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே ஹெச்.ராஜா சென்றுவிட்டார்.Trending Articles

Sponsored