'தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல' - மத்திய அரசை சாடும் திருநாவுக்கரசர்!



சென்னை ஐ.ஐ.டி-யில் இன்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக மாணவர்கள் மகா கணபதி என்ற சம்ஸ்கிருத பாடலைப் பாடினர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் ஐ.ஐ.டி. விழாவில் சம்ஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டதுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Sponsored


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்டவிதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது அவசியமில்லாமல் காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். கடந்த காலங்களில் பிரதமர் பொறுப்பில் இருந்தவர்கள் பின்பற்றிய அரசியல் நாகரிகத்தைக் கொஞ்சம் கூட பின்பற்றாமல் பேசியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அடுத்த ஜூன் மாதத்திற்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தை தவிர, காங்கிரஸ் ஆட்சி செய்கிற மாநிலம் எதுவும் இந்தியாவில் இருக்காது என்று பேசியிருக்கிறார். இவரது கனவு பகல் கனவாகத்தான் முடியுமே தவிர, அது நிச்சயம் நிறைவேறப் போவதில்லை.

Sponsored


கடந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததோடு, வாக்கு வங்கியும் பெருமளவில் சரிந்திருக்கிறது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த கலக்கத்தில் ஒரு மூன்றாம் தர பேச்சாளரைப் போல பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி கூறுவார் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுகுறித்து எதுவும் கூறாதது தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலத்தின் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற ஆணையின்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசு மறுபடியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்திவிடுமோ என்கிற அச்சம் தமிழக விவசாயிகளிடம் இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற வரை தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Sponsored


சம்ஸ்கிருதம், இந்தி மொழியைத் திணிப்பதை பா.ஜ.க. தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சம்ஸ்கிருதத்தில் கணபதி வந்தனம் பாடியிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்ஸ்கிருத மொழியை திட்டமிட்டு திணிக்க வேண்டுமென்கிற ஒரே நோக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தமிழ் மொழி அவமதிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து விளக்கம் கூறிய ஐ.ஐ.டி. இயக்குநர் தவறுக்கு வருத்தம் கூறாமல் மிக அலட்சியமாக பதில் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஒரு அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற நடைமுறையைத் திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, சம்ஸ்கிருதம் பாடியது ஏனென்று குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் உரிய விளக்கத்தைப் பெற வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.



Trending Articles

Sponsored