``தமிழக மக்களை மீண்டும் போராட்டக் களத்துக்கு அழைக்காதீர்கள்!" - எச்சரிக்கும் ஸ்டாலின்Sponsoredதமிழக மக்களை மீண்டும் மீண்டும் போராட்டக் களத்துக்கு அழைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குப் பெறப்படும் லைசென்ஸ் விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்பு இத்திட்டங்களுக்குத் தனித்தனியாக லைசென்ஸ் பெறவேண்டிய முறை மாற்றப்பட்டு, தற்போது இவை அனைத்துக்கும் ஒரே லைசென்ஸ் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது, "தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி விவகாரத்தில் தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் மத்திய அரசு, இப்போது மேலும் ஒரு தாக்குதலை நடத்த முனைந்துள்ளது. புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப் படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மத்திய அரசு அனுமதி அளிக்க முன்வந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ‘ஹெல்ப்’ (HELP- Hydrocarbon Exploration and Licencing Policy) என்ற ஒற்றை உரிமம் வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, எண்ணெய்க் கிணறுகள் தோண்ட தேவைப்படும் இடங்களை மத்திய அரசு நிறுவனம் ஆய்வு செய்து கண்டறிவதற்குப் பதில், தனியார் நிறுவனங்களே அதனைத் தேர்ந்தெடுக்க, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

Sponsored


இதற்கு முன்பு, கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல்ஆயில் மற்றும் காஸ் எடுக்க தனித்தனியாக லைசென்ஸ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டு, ஒரே உரிமம் பெற்றாலே போதும், அதைவைத்து எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில் இந்தப் புதிய திருத்தத்தில் விபரீதமான வழி வகை செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் விவசாய அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு நேர்மாறாக, விவசாயப் பெருமக்களை நடுத்தெருவில் நிறுத்தும் வகையில், மத்திய அரசு அனுமதி அளிப்பது, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க நினைக்கும் பயங்கரமாகும்.

Sponsored


இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிடுமாறு மாநில அரசு அழுத்தம் தரவேண்டும். ஹெல்ப் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உதவி என்று பெயர். ஆனால், மத்திய அரசு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஹெல்ப் என்ற திட்டத்தின் மூலம் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து வலிமையாக எழுந்துவரும் எதிர்க்குரலுக்குச் செவிமடுத்து, காவிரிப் படுகை விவசாயிகளையும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் நலனையும் காக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக மக்களை மீண்டும் மீண்டும் போராட்டக் களத்துக்கு அழைக்க வேண்டாம். அவர்களது பொறுமையைச் சோதித்துப் பார்க்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored