‘ஸ்டாலினை வைத்து அரசியல் மார்க்கெட் தேடும் விஜயகாந்த்’ - கொந்தளித்த வாகை சந்திரசேகர்



Sponsored



ஸ்டாலின் குறித்து விஜயகாந்த் அளித்த பேட்டியை வன்மையாகக் கண்டிப்பதாக தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஓர் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் தமிழக அரசியல் குறித்தும் தி.மு.க மற்றும் ஸ்டாலின் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “கருணாநிதியைப் பார்க்க ஸ்டாலின் என்னை அனுமதிக்கவில்லை” எனக் கூறியிருந்தார். அதற்கு தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sponsored


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதியை பார்க்கவிடாமல் என்னைத் தடுத்தார் மு.க.ஸ்டாலின் என்ற அபாண்டமான பழியை, பச்சைப் பொய்யை ஓர் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இந்தப் பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா அல்லது வேறு ஒருவருடைய காழ்ப்பு உணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா. உங்கள் இயலாமையைப் பயன்படுத்தி ஸ்டாலின் மேல் உள்ள காழ்ப்பு உணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய் கக்கியது யார். கருணாநிதியைப் பார்க்கவிடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என நா கூசாமல் பேசியுள்ளீர்களே! கருணாநிதியைச் சந்திக்க எத்தனையோ பேர் காத்திருந்தாலும் நீங்கள் வந்திருப்பதை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உடனே தலைவரிடம் சென்று ‘விஜி வந்திருக்கிறார்’ என்று எத்தனையோ தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் போன்றோரைத் தாண்டி உங்களை கருணாநிதியிடம் பேச வைத்து, வாசல் வரை வந்து, உங்களை வழி அனுப்பி வைத்த காட்சியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Sponsored


நீங்கள், “என்னுடைய மனசாட்சி ஸ்டாலினை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை” என்று கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாக இருக்கிறீர்கள். மு.க.ஸ்டாலின் எப்போதும் உங்களை விரும்பியதும் இல்லை வெறுத்ததும் இல்லை. அவரின் பொது வாழ்வின் அரசியல் பயணத்தில் புலிகளையும் புல்லுருவிகளையும் கடந்து செல்கிறார். காவிரி பிரச்னை தொடர்பாகத் தி.மு.க கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு நீங்கள், `ஸ்டாலினைத் துதி பாடுவதைத் தவிர வேறு எதுவும் அங்கே நடக்கப்போவதில்லை. அவர் என்ன கருணாநிதியா, ஸ்டாலின் வேண்டுமானால் தன்னை கருணாநிதி என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அது உண்மை அல்ல’ என்று உளறிக்கொட்டியுள்ளீர்கள். ஆனால், ஸ்டாலினுக்கு புகழ்ச்சி என்பது பிடிக்காத ஒன்று.

`அப்பனைப் போலவே மகனும் எடுத்த காரியத்தை முடிப்பதில் அடம்பிடிக்கிறான்’ என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் மு.க.ஸ்டாலின். வரலாறு தெரியாமல் உளறாதீர்கள். நீங்கள் ஆரம்ப காலங்களில் மேடையில் பேசும்போது கருணாநிதியின் வைர வரிகளான, `வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ எனப் பேசி கைதட்டல் பெறுவீர்கள்.’  உங்கள் இயலாமையை உங்கள் குடும்பத்தாரே பயன்படுத்தி, உங்களுக்கே உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம். சினிமாவில் கதாநாயகனுக்கு மார்க்கெட் போனால் மார்க்கெட்டில் உள்ள கதாநாயகியையும் இசை அமைப்பாளரையும் இயக்குநரையும் இணைத்து மீண்டும் வெற்றி பெறுவது சினிமா பாணி. அதைப்போலவே, அரசியலில் மார்க்கெட் போகாமல் இருக்க மக்களின் மனதில் நிலைத்திருக்கும் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தி இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைக்காதீர்கள். சினிமா வேறு அரசியல் வேறு. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.”  இவ்வாறு வாகை சந்திர சேகர் கூறியுள்ளார்.



Trending Articles

Sponsored