மூன்றாவது அணிக்கான அச்சாரம்... சந்திரசேகரராவ் - ஸ்டாலின் சந்திப்பு பயன்தருமா?!



Sponsored



காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத மூன்றாவது அணி குறித்த கருத்து நாடுமுழுவதும் எழுந்துள்ள நிலையில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வருகை தர இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்தியில் பி.ஜே.பி அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சிகள் மத்தியிலும் ஆரம்பித்துவிட்டது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் செயல்பாடுகள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்ற குறை மாநில கட்சிகள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பல்வேறு கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன. அதே நேரம் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும் உள்ளது.

Sponsored


இந்த நிலையில்தான் காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத மூன்றாவது அணி அமைப்பதற்கான கருத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முதலில் வைத்தார். அவர் நாடு முழுவதும் உள்ள பிராந்தியக் கட்சிகளிடம் தனது எண்ணத்தை நேரடியாகவே வெளிப்படுத்தி வருகிறார். பி.ஜே.பிக்கு எதிராகவும், அதே நேரம் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி சேரமுடியாத நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. எனவே, தனது முதல் சாய்ஸாக மம்தாவை தேர்ந்தெடுத்து அவரை சந்தித்தார் சந்திரசேகரராவ். அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவாரையும் சந்தித்துள்ளார்.

Sponsored


மாநிலக் கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் இரண்டு தேசிய கட்சிகளையும் வீழ்த்திவிடலாம். மாநில உரிமைகளையும் பாதுகாக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார் சந்திரசேகராவ். இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.கவை குறிவைத்துள்ளார் அவர். ஏற்கெனவே டெல்லியில் மம்தா பானர்ஜி தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மூன்றாவது அணி குறித்து பேச்சு எழுந்தது. ஆனால், கனிமொழி கவனமாக “தலைமையிடம் உங்கள் கருத்தைச் சொல்கிறேன். தலைமைதான் இறுதி முடிவு எடுக்க முடியும்” என்று சொல்லிவிட்டார். இந்தத் தகவலை மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவிடம் சொல்லியுள்ளார்.

அதன்பிறகு தான் சந்திரசேகரராவ் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அ.தி.மு.க வலுவிழந்து இருக்கும் நிலையில் தி.மு.கவை தங்கள் அணிக்குள் கொண்டுவந்தால் கணிசமான அளவில் எம்.பிக்களை பெறலாம் என்ற கணக்கில் சந்திரசேகரராவ் இருக்கிறார். அவரின் எண்ண ஓட்டத்திற்கு ஒத்துப்போவது போல ஸ்டாலினும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க எப்போதும் ஆதரவளிக்கும். பா.ஜ.கவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தாவின் முயற்சியை பாராட்டுகிறேன்”, என்று பதிவிட்டது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.முகவை பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், ஸ்டாலின் இப்படி கருத்து தெரிவித்ததும் தி.மு.கவை தாஜா செய்யும்படி தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தான் சந்திரசேகரராவ் நாளை சென்னை வர உள்ளார். கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்து விட்டு, ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த மூன்றாவது அணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கொண்டுவரும் எண்ணத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார். ஆனால், மூன்றாவது அணி அமைந்தால் அது பி.ஜே.பிக்கு சாதகமாக போய்விடும் என்ற அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. எனவே, அதைத் தடுக்கும் முயற்சியில் அந்த கட்சியும் தீவிரம் காட்டியுள்ளது. ராகுல் காந்தி “மதவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்” என்று முழங்கி வருவதன் பின்னணி இதுதான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் 'காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை' என்று தெளிவாக சொல்லிவிட்டதால் மூன்றாவது அணி உருவாவது தவிற்க முடியாதது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். ஆனால், காங்கிரஸ் தரப்பிலோ “கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றாலே, மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வந்துவிடுவார்கள். அதனால் கர்நாடகத் தேர்தலை நாங்கள் கவனத்துடன் கையாண்டு வருகிறோம்” என்கிறார்கள் காங்கிரஸார். ஏற்கெனவே மூன்றாவது அணி நாட்டை ஆண்டபோது, ஒரு முறை கூட ஐந்து ஆண்டுகளை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாத வரலாறுகளை மூன்றாவது அணித் தலைவர்கள் உணரவேண்டும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.



Trending Articles

Sponsored