'நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி!’ - டெல்லி பேரணியில் சூளுரைத்த ராகுல்



Sponsored



'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மக்கள் முன்னால் வந்து நீதி கேட்கின்றனர். வங்கிக் கடன் மோசடி செய்த குற்றவாளி தப்பி ஓடுகின்றனர். இதுகுறித்தெல்லாம் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

வரவிருக்கும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து, ஆளும் மத்திய அரசுக்கு எதிராகக் காய் நகர்திவருகிறது காங்கிரஸ். முன்னதாக, பா.ஜ.கவிடம் இருந்து 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என்ற நாடு தழுவிய பேரணியைத் தொடங்கி இருக்கும் காங்கிரஸ், இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'ஜன் ஆக்ரோஷ்' (மக்களின் கோபம்) என்ற பெயரில் பேரணி ஒன்றை நடத்தியது. 
அதில், மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் சீர்கேடுகளையும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் ஊழல் அதிகரித்து இருப்பதையும் சுட்டிக்காட்டிய ராகுல், பிரதமர் மோடியையும் பா.ஜ.கவினரையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

Sponsored


Sponsored


பேரணியில் பேசிய ராகுல் காந்தி, 'எழுபது ஆண்டுக் கால நீதித் துறை வரலாற்றில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் மக்கள் முன்னால் வந்து நீதி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தரப்படுகிறது. நீதிபதி லோயா வழக்கில் நீதி கிடைக்கவில்லை என்று நீதித்துறை வல்லுனர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து எதுவும் பேசாமல் பிரதமர் மோடி மௌனம் காத்து வருகிறார். வங்கியில் கடன் மோசடி செய்த குற்றவாளியைத் தப்பவிட்டு, பணத்தை வங்கியில் செலுத்துங்கள் என்று மக்களிடம் கூறி வருகின்றனர் பா.ஜ.கவினர்’’ என்றார். 

மேலும், கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்வைத்துப் பேசிய ராகுல், ''பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக ஊழல் வழக்கில் சிறை சென்ற எடியூரப்பாவை நிறுத்தி இருக்கிறார்கள். மறுபுறம் நரேந்திர மோடி, ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி வருகிறார். காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியத்திற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். காங்கிரஸார் சிங்கக் குட்டிகள். கட்டாயம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். நரேந்திர மோடி இப்போது கவலைப்படுகிறார். அவர் அதிகாரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்' என்று கடுமையாக விமர்சித்தார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைக் காங்கிரஸ் கட்சி தற்போதே தொடங்கிவிட்டது. 



Trending Articles

Sponsored