"விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகியதா?" - மோடிக்கு சித்தராமையா கேள்வி



Sponsored



ர்நாடக முதல்வர் சித்தராமையா, தோல்வி பயம் காரணமாகவே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த கருத்துக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விவசாயிகள் வருவாய் தொடர்பாக மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது ஏன் என சித்தராமையா பதில் கேள்வி எழுப்பி பரபரப்பை அதிகரித்துள்ளார்.

Sponsored


கர்நாடகத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சிகளைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளன.

Sponsored


காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலின் கர்நாடகப் பிரிவு போன்று சித்தராமையா இரண்டு தொகுதிகளிலும், அவர் மகன் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதாக பிரதமர் மோடி, தேர்தல் பிரசார பேரணியில் குறைகூறியிருந்தார். அதுகுறித்து மோடி குறிப்பிடுகையில் இரண்டு +1 அரசியல் என்னும் வகையில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சித்தராமையா தன்னுடைய ட்விட்டரில், கர்நாடக மாநிலத்தில் 2 ரெட்டிகளும், ஒரு எட்டியும் (எடியூரப்பா) பி.ஜே.பி. சார்பில் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாரணாசி, வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமவள குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரெட்டி சகோதரர்களுக்கு பி.ஜே.பி. சார்பில் போட்டியிட சீட் வழங்கியது ஏன்? என்றும், ரெட்டி சகோதரர்கள் இரண்டு பேரும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப்பாவையும் சேர்த்து, 2 ரெட்டி + ஒரு எட்டி ஃபார்முலாவை பி.ஜே.பி. கடைப்பிடிப்பதாக மற்றொரு ட்விட்டர் பதிவில் சித்தராமையா குறிப்பிட்டிருப்பது, கர்நாடக தேர்தல் களத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

"பி.ஜே.பி-யைப் பொறுத்தமட்டில் வரும் தேர்தலில் 60 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே தங்கள் கட்சி வெற்றி பெறும் என்று மோடி இப்போதே அச்சப்பட்டுக் கொண்டுள்ளார். மாநிலத்தில் குற்ற விகிதங்கள் அதிகரித்து வருவதாக அரசியலுக்காக பிரதமர் மோடி கூறி வருகிறார். அவரிடம் நான் சவாலாகவேக் கேட்கிறேன். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும், கர்நாடகத்திலும் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதிக்க பிரதமர் தயாரா?" என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள மக்கள்தொகையில் 12 சதவிகிதம் அளவுக்கு உள்ள கவுடா அல்லது ஒக்கலிகா சமுதாயத்தினரின் பிரதிநிதியாகத் திகழும் தேவேகவுடா குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்ததாக மோடி தனது உரையில் குற்றம்சாட்டியிருந்தார். 

ஆனால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, மோடியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தேவேகவுடாவை ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை என்று தெரிவித்துள்ள சித்தராமையா, பி.ஜே.பி. மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானியை மோடி அவமரியாதை செய்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய பிரதமர் மோடி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சித்தராமையா குறிப்பிட்டார். "பிரதமர் மோடி இத்துடன் தன்னுடைய நாடகத்தை முடித்துக்கொள்ள வேண்டும். கர்நாடக மாநில மக்களுக்கு நல்லது செய்யாத மோடியின் செயல்களை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். ஊழல் குற்றசாட்டில் சிக்கியுள்ள ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு 15 தொகுதிகளில் போட்டியிட பி.ஜே.பி. வாய்ப்பளித்துள்ளது. ரெட்டி சகோதரர்களை மேடையில் வைத்துக்கொண்டு பிரசார மேடையில் பேசும் பி.ஜே.பி. தலைவர்களும், பிரதமர் மோடியும் ஊழல் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிய பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவாயிற்று? மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்த உறுதிமொழியும் என்னாச்சு?

கார்ப்பரேட் நிறுவனங்களின் 2.71 லட்சம் கோடி கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. ஆனால், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது விவசாயிகளின் வருவாய் எப்படி அதிகரிக்கும். உண்மையிலேயே பிரதமர் மோடி, விவசாயிகள் பற்றி கவலை கொண்டுள்ளாரா?" என்றும் சித்தராமையா வினவினார்.



Trending Articles

Sponsored