``கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தாமதத்துக்கு என்ன காரணம்?" - மதுசூதனனின் விளக்கம்!



அ.தி.மு.க-வில் புதிய உறுப்பினர் சேர்ப்பு, ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்போர் தங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேராததால், சீனியர் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனர். இதனால், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் திரும்ப அளிப்பதற்கு காலவரையற்ற `நீட்டிப்பு' செய்துவிட்டு கட்சித்தலைமை காத்திருப்பதாகக் கூறப்படுகிறது...

`அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு, ஸ்மார்ட் (பிளாஸ்டிக்) கார்டு வழங்கப்படும்' என்று அறிவித்தும்கூட, கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தலைமைக் கழகத்துக்கு அவற்றைத் திருப்பி அளிக்கவில்லை. `பல மாவட்டங்களில் தொண்டர்கள், விண்ணப்பம் வாங்க வரவே இல்லை' என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


Sponsored


அ.தி.மு.க. சட்டதிட்ட விதி-30 பிரிவு 2-ன் படி, கட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். முன்னதாக, உறுப்பினர் சேர்ப்புப் படிவம் தலைமைக் கழகத்தில் வழங்கப்படும். படிவம் ஒன்றில் 25 பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க முடியும். படிவத்தின் விலை தமிழகத்தில் 10 ரூபாய், பிற மாநிலங்களில் 5 ரூபாய்.  உறுப்பினர் உரிமைச் சீட்டு (1 கார்டு) தமிழ்நாட்டில் 10 ரூபாய், பிற மாநிலங்களில் 5 ரூபாய் என்ற அடிப்படையில் கடந்த ஜனவரி 29-ம் தேதி படிவங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களை 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2013, ஜூன் 13- ம் தேதியன்று,அப்போதைய கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சார்பில் கட்சியின் நிர்வாகிகள் தலைமைக்கழகத்தில் வழங்கினர்.

Sponsored


அப்போது ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், ``ஜூலை, 7- ம் தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் தலைமைக்கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். உறுப்பினர் படிவத்தை தலைமைக்கழகத்தில் திரும்ப அளிப்பதற்கு ஜெயலலிதா அளித்திருந்த அவகாசம் ஒரு மாதம் மட்டுமே. தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க-வில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், தற்போது உறுப்பினர்கள் புதுப்பிப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முடித்து, தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்வு உள்பட உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுக்குத்தான் இருக்கிறது. 

அந்த வகையில் கடந்த ஜனவரி 29-ம் தேதியன்று உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அந்த நடவடிக்கையைத் தொடங்கி வைத்தனர். ஆனால், 2013- ம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்ததைப் போன்று, `ஒருமாத காலத்துக்குள் படிவங்களை ஒப்படைக்க வேண்டும்' என்ற விதிமுறைகள் ஏதும் இப்போது விதிக்கப்படவில்லை. உறுப்பினர் புதுப்பிப்பும், சேர்ப்பும் முழுமையடையாமல் அதற்கான படிவங்கள் கடந்த பிப்ரவரி 20-ம் தேதிவரை தலைமைக்கழகத்திலேயே தேங்கி நின்றன. இதையடுத்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். ஆகியோர் பிப்ரவரி 22- ம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில், ``அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்க, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க 29.1.2018 முதல் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 1.3.2018 முதல் 31.3.2018 வரை தலைமைக் கழகத்தில் பெறப்படும். இந்தத் தேதிகளில் பெறப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்" என்று முடிந்தவரை `கண்டிப்பு' காட்டியிருந்தனர். கால நீட்டிப்பை நேரடியாகச் சொல்லாமல் இரண்டு மாதத்துக்கு உறுப்பினர் சேர்ப்பைத் தள்ளிப் போட்டிருந்தனர். அதன்பின்னரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சித் தலைமைக்கு வந்து சேரவில்லை. வேறு வழியின்றி கடந்த 1- ம் தேதி (மே), ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், ``அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் பதிவைப் புதுப்பிக்க, உறுப்பினர்களைச் சேர்க்க 29-1-2018 முதல் தலைமைக் கழகத்தில், விண்ணப்பப் படிவங்கள்  வழங்கப்பட்டு வருகின்றன. கட்சியினர் பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து 1-3-2018 முதல் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து (?) வருகிறார்கள். கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இப்பணியில் கவனம் செலுத்தவேண்டி இருப்பதால், உறுப்பினர் பதிவைப் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று புதிய உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பிப்புக்குக் காலக் கெடு 31-5-2018 வரை நீட்டிக்கப்படுகிறது" என்று மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்திருந்தனர்.

உறுப்பினர் சேர்க்கை, புதுப்பிப்புக்கான காலநீட்டிப்பு குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசியபோது, ``கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என ஜெயலலிதா எப்படிச் சொன்னாரோ தெரியவில்லை. அவருக்குப் பின்னால், பொதுச்செயலாளர் பதவியே கட்சியில் இல்லாமல் போய்விட்டது. தற்போது கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை வகிப்பதுதான் மிச்சம். ஜெயலலிதாவின் நிழலாக அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த சசிகலாவிடம் இப்போது கட்சி இல்லை. `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று அதற்கு மாற்றாக ஒரு கட்சியை டி.டி.வி. தினகரன் தொடங்கி, அதற்கு சசிகலா பொதுச்செயலாளராக உள்ளார். 

2013- ம் ஆண்டு கணக்குப்படி அ.தி.மு.க.வில் ஒரு கோடியே 63 லட்சம் பேர் அடிப்படை  உறுப்பினர்களாக இருந்தனர். கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாதான், உறுப்பினர் அடையாள அட்டையில், பச்சை நிறத்தில் கையெழுத்துப் போடுவார். இப்போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவரும் கையெழுத்துப் போடுவார்கள் என்று தெரிகிறது. உறுப்பினர்  அடையாள அட்டையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய நான்குபேரின்  படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், கட்சிதான் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. எடப்பாடி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து துணை முதல்வர் ஆகி விட்டபோதிலும்,

ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ் அணி என்ற பாகுபாடு கட்சியின் அடிமட்டம்வரை இன்னமும் நீடிக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அணிதான் பலவீனமாக உள்ளது. இது போதாது என்று டி.டி.வி. ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்களும் உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தலிலிருந்து ஒதுங்கிக்கொண்டதால், உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள், கட்சித் தலைமைக்கழகத்தை விட்டு நகராமலும், வாங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படாமலும் தொடரும் நிலை நீடிக்கிறது.

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுவதால், அந்த வேலைகளில் பிஸியாக இருப்பதாலேயே மனுக்கள் நகராததற்குக் காரணம் என்று இப்போது சொல்கிறார்கள். இன்னும் இரண்டு மாதம் கழித்து, `உள்ளாட்சித் தேர்தல் காரணமாகத்தான் உறுப்பினர் சேர்க்கைக்கான மனுக்கள் நகரவில்லை' என்பார்கள். மொத்தத்தில் கட்சிதான் நகராமல் அதே இடத்தில் நிற்கிறது" என்றனர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் இ. மதுசூதனன், ``நீங்கள் சொல்வதுபோல், கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. உறுப்பினர் சேர்க்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருவதால், விண்ணப்ப மனுக்களைப் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். அம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ, அதைவிட வலுவாகக் கட்சியை மாற்றிக் காட்டுவதுதான், இப்போது எங்களின் ஒரே லட்சியமாக இருக்கிறது" என்றார்.



Trending Articles

Sponsored