கிரண்பேடிக்கு எதிராகச் செயல்படுகிறதா பி.ஜே.பி?



புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பி.ஜே.பி. போர்க்கொடி தூக்கியிருப்பது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதலே அவருக்கும், புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. மாநிலத்தின் நிர்வாகி என்ற முறையில் தனக்கு அதிகளவிலான அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துவரும் கிரண்பேடியை முதல்வர் நாராயணசாமி உள்பட ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல, தன்னுடைய அதிரடி செயல்பாடுகளால் அனைத்துத்தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்த கிரண்பேடியின் இமேஜ், மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்த விவகாரத்தில் சறுக்கியது. அதனால், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ-க்கள் நியமன விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறார் என்பதாலும் கிரண்பேடிக்கு ஆதரவாகப் புதுவை பி.ஜே.பி.-யும் களத்தில் நின்றது. 

Sponsored


Sponsored


ஆனால், சமீப காலமாக கிரண்பேடிக்கும், புதுச்சேரி மாநில பி.ஜே.பி-க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு நிகராக பி.ஜே.பி-யும் தற்போது கிரண்பேடியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் போலி ஏ.டி.எம். கார்டுகளைக் கொண்டு சுமார் 400 கோடி ரூபாய்வரை கொள்ளையடித்த வழக்கில் ஆளுநர் அமைதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய புதுச்சேரி பி.ஜே.பி. தலைவர் சாமிநாதன், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆளுநர் மற்றும் முதல்வர்மீது மத்திய உள்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக அதிரடியாகத் தெரிவித்தார்.

Sponsored


இந்நிலையில் புதுச்சேரி மாநில இந்து முன்னணி சார்பில் தேச ஒற்றுமை மாநில மாநாடு, சாரம் அவ்வை திடலில் நடந்தது. அதற்காகப் புதுச்சேரியின் பிரதான சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலை முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் கொடி மற்றும் பேனர்களைக் கட்டியிருந்தனர். நகர்ப்புறத்தில் பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பதற்கு ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாகவே நடவடிக்கை எடுத்து வருவதால், இந்து முன்னணியினர் பேனர்கள் வைத்திருப்பது குறித்து கிரண்பேடியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பேனர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கிரண்பேடி உத்தரவிட்டார். உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினரின் கொடி மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் இறங்கினர். தகவலறிந்த இந்து முன்னணி புதுச்சேரி மாநிலத் தலைவர் சுனில்குமார், பி.ஜே.பி. மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, கொடி மற்றும் பேனர்களை அகற்றிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் இதே இடத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டின்போது அந்தக் கட்சியின் கொடி மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. அதனை அகற்றாத நகராட்சி அதிகாரிகள் இந்து முன்னணியின் பேனர்களை மட்டும் அகற்றுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். ஆளுநர் உத்தரவுப்படிதான் தாங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் நகராட்சி ஊழியர்களில் சிலர், அங்கிருந்த கொடிகளை அகற்ற முயன்றனர். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பி.ஜே.பி மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், அவ்வைத் திடல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஜே.பி. மாநிலத் தலைவர் சாமிநாதன், ``கொடிகள் கட்டாமல் இந்தியாவில் கூட்டங்களை நடத்த முடியாது. ஆனால், ஆளுநர் கிரண்பேடிக்கு இந்த விதிகள் தெரியுமா எனத் தெரியவில்லை. ஆளுங்கட்சியின் குறைகளை அவர் தட்டிக் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளைத் தடுக்க ஆளுநருக்குத் தைரியமில்லை. கொடி கட்டாமல் பொதுக் கூட்டங்களை நடத்த முடியாது என்பதுகூட ஆளுநருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் தெரியவில்லை. ஆளும் கட்சியினர் பேனர் வைத்தால் அவற்றை அகற்றுவதில்லை. நாராயணசாமிக்குக் கிரண்பேடி துணை போகிறார். அதிகாரத்துக்குத் தலைவணங்கி ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுப்பதை பி.ஜே.பி. வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

இதற்கிடையே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ``போலீஸ் மற்றும் நகராட்சி அமைப்பினர் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி தரும்போது பேனர்கள், வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைப்பது தொடர்பான உத்தரவுகளைத் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல கூட்டம் முடிந்ததும் அந்த இடத்தில் குப்பைகள் எதுவும் இருக்கக் கூடாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

புதுச்சேரியில் இதுவரை ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் முதல்வருடன் மட்டுமே மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் கிரண்பேடி, தற்போது பி.ஜே.பி-யினருக்கு எதிராகவும் கொடி பிடித்திருப்பது, புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Trending Articles

Sponsored