``என் நிலம்...என் உரிமை..!'' மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைப்பயணம்!



Sponsored



சேலத்துக்கும் சென்னைக்கும் இடையே எட்டுவழி பசுமைச் சாலை என்கிற பெயரில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாக, தமிழக அரசு அறிவித்து, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இந்த எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி., மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசுகள் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனால், தி.மு.க, பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், எட்டு வழிச் சாலை அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. 

இந்த நிலையில், திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆகஸ்ட் 1-ம் தேதி, ``என் நிலம், என் உரிமை” என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் தொடங்குகிறது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த நடைப் பயணத்துக்குத் தலைமை தாங்குகிறார். நடைப் பயணத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

Sponsored


இந்த நடைப் பயணம் குறித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ``எட்டு வழிச் சாலை திட்டத்தால் நான்காயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 1,000 ஏக்கர் அளவிலான வனப்பகுதி நிலங்களும் அழிக்கப்படும். இதனால், சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள், தங்களின் வசிப்பிடங்களை விட்டு வேறுஇடங்களுக்குப் பெயர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். சுமார் 159 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழப்பதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு சொந்த கிராமங்களை விட்டுவெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சாலை அமையவிருக்கும் பகுதிகளில் உள்ள நீராதாரங்களும் அழிக்கப்படும் என்பதால், நிலத்தடி நீரும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும். இதன் காரணமாகவே, பசுமை வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sponsored


சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு இப்போதுள்ள மூன்று சாலைகளே போதுமானது. நான்காவதாக அமைக்கப்படும் இந்தச் சாலை தேவையற்றது. உளுந்தூர்பேட்டை - சேலம் இடையேயான நான்கு வழிச் சாலை என்பது பல இடங்களில் இரண்டு வழிச் சாலையாகத்தான் உள்ளது. அந்தச் சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மாற்றினாலே போதுமானது. இதற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால், இன்னமும் இருவழிச் சாலையாகவே தொடர்கிறது.

தற்போது, எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக, அதிகாரிகளும், காவல்துறையினரும் நூற்றுக்கணக்கில் கிராமங்களில் முகாமிட்டு விவசாயிகளை ஆயுதங்களுடன் மிரட்டி, அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளோ, இதர அரசியல் கட்சிகளோ, சமூக அமைப்புகளோ துண்டுபிரசுரம் விநியோகிப்பது, ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடத்துவது போன்ற எந்தவொரு ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கும் காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தமிழக அரசு, காலில் போட்டு மிதித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே பாதிப்படைந்துள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளைத் திறக்க முடியாத இந்த அரசு, எட்டு வழிச் சாலை அமைக்கப்பட்டால் தொழில்வளர்ச்சி அடையும் என்று தவறான தகவல்களைத் தருகிறது.

இதுபோன்ற அறிப்புகள், பொதுமக்களை ஏமாற்றுவதற்கான வாய்ச்சவடாலே தவிர வேறல்ல. மேலும், எட்டு வழிச் சாலையானது விரைவுச் சாலை என்பதால் 900 அடி அகலமுள்ள சாலை என்பதால், சாலையின் ஒருபக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குச் செல்ல வேண்டுமானால் சுமார் 15 கிலோமீட்டர் பயணம் செய்தபின்னரே மறுபக்கத்தை அடைய முடியும். இதனால் சாலையின் இருபக்கங்களிலும் வர்த்தக நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ அமைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வெளிவந்துகொண்டிருக்கும் நேரத்தில் பெருமளவு தொகை ஒதுக்கி சாலை போடுவது என்பது தேவையற்றது. தவிர, எட்டுச் சுங்கச் சாவடிகள் அமைப்பதன் மூலம் இந்தச் சாலையானது விரைவுச் சாலையாக இல்லாமல், சுங்கச் சாலையாகவே இருக்கும்'' என்றார்.

மீண்டும் சூடு பிடித்துள்ளது எட்டு வழிச் சாலை போராட்டம்..!



Trending Articles

Sponsored