தள்ளிப் போன உள்ளாட்சித் தேர்தல்...நீதிமன்றத்தின் கறார்... ஆணையத்தின் காரணம்!மிழகத்தில் 18 தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ-க்கள் இல்லை; உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை; ஆனால், அரசாங்கம் இருக்கிறது; ஆட்சி நடக்கிறது!  18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கிலாவது நீதிமன்றம் இன்னும் இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில், ஒவ்வொருமுறையும் ஒரு காலக்கெடுவை நீதிமன்றம் பிறப்பிக்கிறது. ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த மறுக்கிறது. இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்ற கடுமைகாட்டிய நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள், உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநிலத் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இனி அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் உள்ளாட்சித் தேர்தல் கதையில் புது ட்விஸ்ட்!

2011-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24-ம் தேதியோடு முடிந்துவிட்டது. அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு தரப்பில் இருந்து உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை விழுந்தது.

Sponsored


Sponsored


தி.மு.க போட்ட முட்டுக்கட்டை

Sponsored


உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அ.தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்த உடனேயே உள்ளாட்சித் தேர்தல் வருவதை தி.மு.க விரும்பவில்லை. மேலும், அப்போது ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அது அ.தி.மு.க-வுக்கு அனுதாபமாக மாறிவிடும் என்றும் தி.மு.க ஒரு கணக்குப் போட்டது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை ஒத்திப்போட முடிவு செய்த தி.மு.க நீதிமன்றங்களை நாடியது. “முதலில் தேர்தலுக்கு வாக்குச் சீட்டுக்களை பயன்படுத்தக்கூடாது. மின்னணு இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்” என்று வழக்குப்போட்டு அதை உச்ச நீதிமன்றம் வரை இழுத்துச் சென்றது. ஆனால், அதில் தி.மு.க தோல்வி அடைந்தது. ‘உள்ளாட்சித் தேர்தலை ஒத்திப்போட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அதன்பிறகு, ‘பழங்குடி இன மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், “தி.மு.க-வின் கோரிக்கை சரியானது. பழங்குடி இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த தாவா நடந்து கொண்டிருக்கும்போது, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்தது. அதனால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை மாநில அரசு நியமனம் செய்தது. அதே நேரத்தில் டிசம்பர் 5 ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அதனால் ஏற்பட்ட குளறுபடிகளில் அரசு நிர்வாகம் விழி பிதுங்கி நின்றது. இதில் உள்ளாட்சித் தேர்தலை அனைவரும் மறந்து போனார்கள்.

அ.தி.மு.க அரசு போட்ட முட்டுக்கட்டை

ஜெயலலிதா இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலுக்கு தி.மு.க முட்டுக்கட்டை போட்டது. ஜெயலலிதா இறந்தபிறகு, அந்த வேலையை அ.தி.மு.க கையில் எடுத்துக்கொண்டது. ஜெயலலிதா இறந்தபிறகு, கட்சி இரண்டு அணிகளாக உடைந்தன. ஆட்சியிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. இவை எல்லாம் அ.தி.மு.க-வுக்குச் பாதகமாகப் போனது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நினைத்து அ.தி.மு.க அஞ்சத் தொடங்கியது. மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஒத்துழைப்பையும், அதன் தலைமையில் அமைந்துள்ள அரசாங்கம் கொடுக்காமல் தேர்தலை ஒத்திப்போட்டது. 1991-96 காலகட்டத்தைப்போல  தனி அதிகாரிகளை வைத்தே உள்ளாட்சிளை மீதமுள்ள காலமும் ஓட்டி விடலாம் என்ற முடிவுக்கு வந்ததுபோல் அ.தி.மு.க அரசாங்கம் செயல்படுகிறது. 

தேர்தல் ஆணையத்தின் முட்டுக்கட்டை

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆணையத்தைப்போல தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிபதி கிருபாகரன் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவு போட்டதை மறுநாளே எதிர்த்து அப்பீலுக்குப்போனது மாநிலத் தேர்தல் ஆணையம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமமோகனராவ், எம்.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 21-ம் தேதி ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். அதில், தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்ட டிவிஷன் பெஞ்ச், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டது. அதன்பிறகு, தேர்தல் ஆணையம் அரசாங்க உத்தரவின்பேரில் பின்வாங்க ஆரம்பித்தது. நீதிமன்றத்தல்  வாய்தா மேல் வாய்தா வாங்கி உள்ளாட்சித் தேர்தலை இல்லாமல் ஆக்கும் வேலையில் இறங்கியது. 2016 அக்டோபர் மாதம் நடத்த வேண்டிய தேர்தலை 2017 மே மாதத்தையும் தாண்டித்தான் நடத்த முடியும் என்பது போல் நீதிமன்றத்தில் தற்போது அவகாசம் கேட்டது. இதற்கிடையில் மேல்முறையிட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வில், “வாக்காளர் பட்டியல் சரியாகவில்லை; பள்ளிக்கூடங்களில் தேர்வு நடக்கிறது; ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது” என்று விதவிதமாக பதில் மனுப்போட்டது. அவற்றை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், “மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கவேண்டி வரும்” என்று கண்டனம் தெரிவித்தது. ஆனால், அதன்பிறகும் அசையவில்லை மாநிலத் தேர்தல் ஆணையம்.   

தலைமை நீதிபதி அமர்வை அவமதித்த தேர்தல் ஆணையம்! 

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு ஒவ்வொரு அமர்வாக மாறி, இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வுக்கு வந்தது. அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், “உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வெளியிட வேண்டும். நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவின்படி 2017-ல் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தி.மு.க தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், “மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அக்டோபர் 6-ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்; இல்லையென்றால், மாநிலத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் செயலாளர் கடும் நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும்” என்று உத்தரவிட்டுள்ளனர். 

இப்போதாவது தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யுமா... அல்லது, சட்டத்தின் மாற்று வழிகளைத் தேடி, உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் ஒத்திப்போடுமா என்பதுதான் இந்தக் கதையில் அடுத்து வரப்போகும் புது ட்விஸ்ட்! Trending Articles

Sponsored