காங்கிரஸைக் கூட்டணிக்கு அழைப்பது ஏன்? தினகரன் பேட்டியின் பின்னணி...!



Sponsored



``அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வலுவான காரணம் இருக்கிறது'' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதத்துக்கு முன்பாக நடைபெறும் என்பதால், இப்போதிருந்தே எல்லாக் கட்சிகளும் தேர்தலை நோக்கிய தங்களின் பயணத்தைத் தொடங்கிவிட்டன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பணியாற்றத் தொடங்கிவிட்டது. பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வாக்குச்சாவடி ஏஜென்டுகளை அவர் சந்தித்து வருவதுடன், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பாகவும் அந்தந்த மாநிலங்களின் பி.ஜே.பி. நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். அண்மையில், தமிழகம் வந்த அமித் ஷா, தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகளைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பணிகளை முடுக்கிவிட்டுச் சென்றார். இதேபோல், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நான்காண்டுகளில் பி.ஜே.பி. அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்து வருவதுடன், மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களையும் சந்தித்து உரையாடி வருகிறார். இதன்மூலம் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே மோடியும் ஆயத்தமாகி வருகிறார்.

Sponsored


இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்கத் தயாராக இருக்கிறது காங்கிரஸ். இதற்காக, அந்தக் கட்சி தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. பி.ஜே.பி-யை வீழ்த்துவதற்காகக் காங்கிரஸ் கட்சி, பிரதமர் பதவியையும் மாநிலக் கட்சிகளுக்கு விட்டுத்தரும் என்று கூறப்படுகிறது. என்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே அதுபற்றி அதிகாரபூர்வமாகத் தெரியவரும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

Sponsored


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இப்போதே காங்கிரஸும், பி.ஜே.பி-யும் வியூகங்களை வகுத்துவரும் இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள மாநிலக் கட்சிகளும் அதற்கேற்றாற்போல் ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தபோதிலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டும், அந்தக் கட்சி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் வாக்குச் சதவிகிதம் இல்லை என்பதால், அந்தக் கட்சியுடன் கூட்டணியைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். என்றாலும், தேசிய அளவில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க முடியாத சூழலில் காங்கிரஸின் தயவு அவசியம் என்று கருதியே தி.மு.க., காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தி.மு.க.-வைப் பொறுத்தவரை அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தல் பற்றியோ, கூட்டணி பற்றியோ இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை. தமிழகத்தில் உள்ள இதரக் கட்சிகளைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்ட வரலாறு இருக்கிறது. 

இந்தச் சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் அ.தி.மு.க-விலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அமைப்பைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளையும், அரசின் திட்டங்களையும் மக்கள் மத்தியில் அவர் விமர்சித்து வருகிறார். தினகரன் சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களிலும், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் பெருந்திரளான தொண்டர்கள் கூடுகிறார்கள். ஒருபுறம், `அ.தி.மு.க-வையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவோம்' என்று தினகரன் கூறினாலும், மறுபுறம் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் சேர்ந்து, தன்னுடைய அ.ம.மு.க. அமைப்பைப் போட்டியிட வைக்கவும் தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தேசிய அளவில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவே தினகரன் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் பெங்களூரு சென்ற தினகரன், சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசியபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்தும், ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ``தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி, எங்களை அணுகினால், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்'' என்றார். அதேநேரத்தில், ``பி.ஜே.பி.-யுடன் ஒருபோதும் கூட்டணியில்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.

தினகரனின் இந்தப் பேட்டி குறித்து அவருடைய ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்தது, காங்கிரஸ் கட்சியினரை யோசிக்கவைத்துள்ளது. அத்துடன், அங்கு வெற்றிபெற்ற எங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தது, தி.மு.க-வினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் திருநாவுக்கரசருடன், தினகரன் எப்போதுமே நட்புடன் பழகி வருகிறார். மேலும், தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அல்லாத கட்சிகளில் மாநிலம் முழுவதும் வலுவாக விளங்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு, தினகரன் செயல்படுகிறார். இதுபற்றி அ.ம.மு.க. நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்குக் காரணம், பி.ஜே.பி.-தான். தமிழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் பி.ஜே.பி. என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டுத்தான், தமிழகத்தில் ஆட்சி நடத்திவருகிறார்கள். இதனால், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்குத் தற்போது கெட்டபெயர் நிலவுகிறது. மக்களின் இந்தக் கோபம் எதிர்வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதாலேயே தினகரன் இதுபோன்ற வியூகத்தை இப்போதே வகுத்துக் கொண்டிருக்கிறார்.  

மத்திய பி.ஜே.பி. அரசு, சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரிச் சோதனை, பொய்யான வழக்குப் பதிவு செய்வது போன்ற பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கும், அ.ம.மு.க-வுக்கும் பொது எதிரி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை தினகரன் தேர்வு செய்ய முடிவெடுத்திருக்கலாம். அதேநேரத்தில், `தி.மு.க.- கூட்டணியைவிட்டு காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும்' என்று அவர் அளித்த பேட்டியிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், எந்தெந்தக் கட்சிகளுன் யார், யார் கூட்டணி அமைப்பார்கள் என்பதெல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தெரியவரும். அதன்பிறகுதான் கூட்டணியை உறுதிசெய்ய முடியும்'' என்றனர் மிகத் தெளிவாக. 

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``டி.டி.வி.தினகரன் அவருடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதைப் பொறுத்து மாநிலக் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இருக்கும். இப்போதைக்கு தினகரனுடன் கூட்டணி என்பதெல்லாம் உறுதிசெய்யப்படாத தகவல்தான். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேலிடத் தலைவர்களிடம் எடுத்துக்கூறுவார்கள். மேலிடத் தலைவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதற்கு தமிழக காங்கிரஸ் கட்டுப்படும். மற்றபடி, தினகரனின் கருத்து பற்றி இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது" என்றனர். 

தேசிய அளவில், பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே களமிறங்கிவிட்டார். தமிழகத்தைப் பொறுத்தவரை, தினகரன் இப்போது பிள்ளையார்சுழி போட்டுள்ளார். தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள், தங்களின் கூட்டணி தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தினால் மட்டுமே, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.



Trending Articles

Sponsored