``தனி ரூமுக்கு மிக்சர் சப்ளை.. கெட் அவுட் சொன்ன ஸ்டாலின்!" - காவேரி மருத்துவமனை அப்டேட்ஸ்!



Sponsored



காவேரி மருத்துவமனையில் தி.மு.க தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கமான கட்சிப் பணிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

உடல்நிலை குன்றியிருந்த கருணாநிதி கடந்த வாரம் வெள்ளிகிழமையன்று, அவசர சிகிச்சைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அங்கு அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பலனாக மறுதினம் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி காவேரியில் அனுமதிக்கப்பட்டது முதல் அதன் மருத்துவமனை வாயிலில் ஏராளமான தி.மு.க தொண்டர்கள் குவிந்து, `கருணாநிதி வாழ்க' என்று கோஷம் எழுப்பி வந்தனர். அதேநேரத்தில் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு வந்து சென்றனர். 

Sponsored


கருணாநிதியின்  மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, மற்றும் செல்வி, கனிமொழி உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு தினமும் வந்திருந்து கருணாநிதியின் உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர். கருணாநிதியின் மகள் செல்வி, மருத்துவமனையிலேயே பெரும்பாலான நேரம் இருந்து வருகிறார். மேலும், கட்சியினர் மற்றும் கருணாநிதியைப் பார்க்க வரும் நபர்களை ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். கருணாநிதி காவேரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள ஐ.சி.யூ அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நான்காவது மாடிக்கு, கட்சியின் முக்கியப் புள்ளிகள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கீழ்த்தளத்தில் நிறுத்தப்படுகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஸ்டாலின் மட்டும் கீழேவந்து, ``தலைவர் நன்றாக இருக்கிறார்” என்ற தகவலைச் சொல்லிச் செல்கிறார். மேலும், கருணாநிதியைக் காண வருபவர்களின் பெயர்கள் அங்கிருக்கும் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. 

Sponsored


தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலர் மருத்துவமனையில் இருக்கும் அழகிரியையும் தனியாகச் சந்தித்துப் பேசிவருகிறார்கள். குறிப்பாக, ஸ்டாலினால் பதவிப்பறிப்புக்கு உள்ளானவர்கள் அழகிரியைச் சந்தித்து வருகிறார்கள். அழகிரியைச் சந்தித்தால் சிக்கலாகிவிடும் என்று அவரைக் கண்டு ஒதுங்கிச் செல்லும் நிர்வாகிகளை அழகிரி வலிந்து சென்று, ``நான், அழகிரி தெரிகிறதா” என்று கேட்டு அவர்களைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறார். அதே சமயம், தன்னைச் சந்தித்துப் பேசுபவர்களிடம் மனம்விட்டுப் பேசியுள்ளார், அழகிரி. 

மருத்துவமனையின் நான்காவது தளத்தில் ஏ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டவர்களும் அறை எடுத்து தங்கியிருந்தனர். ஏ.வ.வேலு அறையில் அடிக்கடி மிக்சர் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் பொருள்கள் செல்வதைக் கருணாநிதியின் குடும்பத்தினர் பார்த்துவிட்டு, ஸ்டாலினிடம் புகார் சொல்லியுள்ளனர். இதனால், கோபமுற்ற ஸ்டாலின் நேற்று மாலை வேலு மற்றும் பொன்முடியை அழைத்து, ``தலைவர்தான் நன்றாக இருக்கிறாரே... நீங்கள் இங்கிருந்தது போதும், ரூமைக் காலி செய்துவிட்டுக் கிளம்புங்கள்” என்று சொல்லிவிட்டார். மேலும், கடந்த ஐந்து தினங்களுக்கும் மேலாக மருத்துவமனையிலேயே முகாமிட்டிருந்த ஸ்டாலின், நேற்று முதல் தனது வழக்கமான பணிகளுக்கும் நேரம் ஒதுக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று தி.மு.க நிர்வாகிகளால் தாக்குதலுக்குள்ளான பிரியாணி கடைக்குச் சென்றார். 

இன்று காலை காவேரி மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு கருணாநிதியைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு, சிலருக்கு அப்பாயின்மென்ட் வழங்கியிருந்ததால், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரம் அறிவாலயத்தில் வழக்கமான பணிகளைப் பார்த்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஸ்டாலின். கருணாநிதிக்கு இப்போது கொடுக்கப்படும் மருந்துகளால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், அவரை அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்பலாம் என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. அவருக்கு இன்பெக்‌ஷன் மட்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதேபோல் கருணாநிதியின் உடல்நிலை குன்றிய பிறகு  குடும்பத்துக்குள் இருந்த சிறுசிறு மனவருத்தங்களும் நீங்கி, அனைவரிடத்திலும் ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது. ``இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோபாலபுரம் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்ற நிலையை இப்போது காவேரி மருத்துவமனையில் பார்க்க முடிகிறது” என்று சொல்கிறார் மூத்த தி.மு.க நிர்வாகி ஒருவர். 

காவேரியில் கருணாநிதி ஒய்வெடுக்க, அறிவாலயத்தில் பணியாற்றக் கிளம்பிவிட்டார் ஸ்டாலின். 



Trending Articles

Sponsored