`இரவலாகப் பெற்ற இதயத்'துடன் போராடும் கருணாநிதி! - காவேரி நிலவரம்



Sponsored



``வயது மூப்பின் காரணமாகக் கருணாநிதியின் உடல் உறுப்புகளை இயங்கவைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று காவேரி மருத்துவமனை, தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது தொண்டர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கருணாநிதி கடந்த 28-ம் தேதி அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அன்று இரவு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. குறிப்பாக ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, இதயத்துடிப்பும் குறைவாக இருந்தது. ஆனால், உடலின் பிற உறுப்புகள் இயக்கத்தில் இருந்தன. இதையடுத்து, மருத்துவர்களின் அவசர சிகிச்சையால் மறுநாள் காலை அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பு அறிவித்தது.

அதன்தொடர்ச்சியாகக் கருணாநிதியின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற கல்லீரல் நிபுணர் முகமது ரேலா கடந்த வாரம் இரண்டு முறை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார். ஆனால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் தொய்வு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக, கல்லீரல் பாதிக்கப்பட்டதால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. அதன்வீரியம் அதிகமாக இருந்ததால், சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தியது. மஞ்சள் காமாலை நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளும் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை. இந்த நிலையில், நேற்று காலை முதல் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகிக் கொண்டே வந்தது. 

Sponsored


சிறுநீரகம் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, உடலுக்குள் செல்லும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் என அடுத்தடுத்த தொடர் பாதிப்புகளால் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. மருத்துவர்கள் குழுவும் உடல் உறுப்புகளில் இயக்கத்தைச் சீராக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமலே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கருணாநிதியின் வயது மூப்புதான் என்கிறார்கள். கருணாநிதிக்கு இதுவரை சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ இருந்ததில்லை. அந்த ஒரு காரணத்தினால்தான் கல்லீரல் பாதிக்கப்பட்ட பிறகும், அவர் உடல் உறுப்புகள் ஓரளவாவது இயங்கிவந்தன. ஆனால், நேற்று மாலை முதல் ஒவ்வோர் உறுப்பாக அதன் செயல்பாட்டை நிறுத்திவருவதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து கருணாநிதி உறவுகளிடம் தகவல் சொல்லியுள்ளார்கள். 

Sponsored


நான்காவது மாடியில் உள்ள ஐ.சி.யூ அறைக்குச் சென்றுவந்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர் நம்மிடம், ``கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புவரை ஐ.சி.யூ-வில் கருணாநிதியைப் பார்க்க முக்கிய நபர்களை அனுமதித்து வந்தார்கள். ஆனால், நேற்று காலை முதல் யாரையும் அனுமதிக்கவில்லை. அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால்தான் தயாளு அம்மாளை அழைத்துவந்து ஐ.சி.யூ அறையில் கருணாநிதியைக் காணச்செய்தார்கள். கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அவருடைய குடும்பத்தினரிடமும் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். கடைசியாக மாலையில் மருத்துவமனை அறிக்கைவிட்ட நேரத்தில் கருணாதியின் இதயத்துடிப்பு மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. ஆனால், அதுவும் இயல்புநிலையைவிட மெதுவாகவே துடித்துக்கொண்டிருந்தது. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரம் என்ற அளவீட்டைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். குறிப்பாக, கருணாநிதிக்குச் செயற்கை சுவாசம் அளிக்கலாம் என்று பேச்சு முதலில் எழுந்தது. அவருக்கு ஏற்கெனவே ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதால், செயற்கை  சுவாசம் அளிப்பது மேலும் சிக்கலாகிவிடும், அவர் இதயம் இயற்கையாகவே செயல்படட்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். `அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவர்' என்று கருணாநிதியைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள், அவரது உடன்பிறப்புகள். அண்ணாவிடம் இரவலாகப் பெற்ற அந்த இதயம்தான் இப்போது இயற்கையோடு இறுதிவரை போராடிக்கொண்டிருக்கிறது'' என்றார் அவர், மிகவும் உருக்கமாக.

இரவலாகப் பெற்ற இதயம்... இறுதிவரை போராடிக்கொண்டிருக்கிறது.



Trending Articles

Sponsored