``தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மார்பை நிமிர்த்தி நடக்கலாம்!” - கருணாநிதியின் கடைசி உரை



Sponsored



தோல்வி என்ற படிக்கட்டில் நின்றுதான் வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும் - சொந்தத் தொகுதியில் சொந்த ஊரில் திமுக தலைவர் மு.கருணாநிதி ஆற்றிய இறுதி உரை...

திருவாரூரில் கருணாநிதியின் 93-வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வென்றதற்காகத் திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் 05.07.2016 நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது,

"திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. உடல் நிலை காரணமாகத்  தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது `தொண்டை' தொடர்ந்து செய்வேன்.

Sponsored


இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஸ்திவாரம். 1964 ம் ஆண்டு தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறிவர்களை, துரோகிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த காலங்களில், இதுபோன்ற சோகங்களைச் சமாளித்து திமுக வேக நடைபோட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். தற்போது ஏற்பட்டுள்ளது தோல்வி அல்ல. அதற்காக எந்தத் தொண்டரும் கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தைப் பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்துவருகிறது.

Sponsored


திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக மண்ணின் மைந்தர் என்ற உரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு, வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்தத் தேர்தலில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 473 ஓட்டுகள் அளித்து வெற்றி வாய்ப்பைக் கொடுத்துள்ளீர்கள். மத்திய அரசின் செல்வாக்கைப் பெற்று, பிரதமர் ஆதரவைப் பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 

தேர்தல் ஆணையம் நியாயமாகச் செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்துச் சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. கடந்த தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே பிரதமர், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்பியது ஏன்?

இந்தியாவில் நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தால் திராவிடன் மார்பை நிமிர்த்திக்கொண்டு நடப்பான். திராவிடர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதனாலே திமுகவுக்கு எதிரான வேலைகள் நடந்தேறின. திராவிடர்களுக்குப் பாதுகாப்பான இயக்கம் திமுக.

இப்போது தோல்விப் படிக்கட்டில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெற்றிப் படிக்கட்டை நாம் மிதிக்க வேண்டும். சில ஆண்டுகளில், சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தேர்தலையொட்டி ரூ. 570 கோடி கன்டெய்னர் லாரியில் சென்றது யாருடையது என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின், துரைமுருகன் போன்றவர்கள் கேட்டதற்கு, பதில் சொல்லாமல், சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். கட்சி வழக்குரைஞர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா கொலைக்கும் உரிய விசாரணை வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களும் நீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். 

அப்படியில்லையென்றால், ``நீதியே நீயும் இருக்கின்றாயா,...இல்லை கொலைக்களத்தில் இறந்து விட்டாயா" என்று கோவலன் இறந்தபோது கவுந்தியடிகள் பாடியது போன்றுதான் சொல்லத்தோன்றும்" என்று தனக்குரிய பாணியில் தன் உரையை நிறைவு செய்தார் கருணாநிதி.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு `கலைஞர்' எனப் பெயர் சூட்டினார். வெற்றிக்கு உழைத்த ஒன்றியச் செயலாளர்களுக்குத் தங்க மோதிரம் அணிவித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கம் அணிவித்துச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக கவிஞர்களின் கவியரங்கமும் பட்டிமன்றமும் நடைபெற்றது. கவியரங்கத்துக்குக் கவிதைப் பித்தன் தலைமை வகித்தார், பட்டிமன்றத்துக்கு திண்டுக்கல் லியோனி, நடுவராக இருந்தார். நிகழ்வு முடிந்து உணவருந்திய பின்பு, சென்னைக்குக் கம்பன் விரைவு வண்டி மூலம் கிளம்பினார்.



Trending Articles

Sponsored