'‘ஏழை மக்களின் வலிமையான குரலாக இருந்தவர்'’- சோம்நாத் சாட்டர்ஜிக்கு தலைவர்கள் புகழாரம்



முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Sponsored


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பினால், கடந்த 40 நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். மூன்று நாள்களுக்கு முன்னர் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று ஏற்பட்ட மாரடைப்பினால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 

Sponsored


Sponsored


இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இந்திய அரசியலில் மிகவும் வல்லமை பொருந்தியவர். அவர், இந்திய ஜனநாயகத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசென்றவர். ஏழைகளின் நலனுக்கு வலிமை மிக்க குரலாக இருந்தவர். சாட்டர்ஜியின் மறைவு எனக்கு கவலையைத் தந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், “ சோம்நாத் சாட்டர்ஜியின் இறப்பு மிகவும் வருத்தமாக உள்ளது. நாடாளுமன்றத்தை முன்னிறுத்துவதில் வலிமை மிக்கவராக இருந்தார். அவரின் மறைவு, மேற்கு வங்கம் மற்றும் இந்திய மக்களுக்குப் பெரும் இழப்பு. சாட்டர்ஜியின் குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

``சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. எங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாங்கள் சிறந்த நண்பர்களாகவே இருந்தோம். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்” என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

“முன்னாள் மக்களவை சபாநாயகர் சோநாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நாமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இடதுசாரி இயக்கங்களின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவையின் முன்னாள் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி உடல் நலக்குறைவால்  இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு இடதுசாரி அரசியலுக்கும்,  நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இடதுசாரியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.



Trending Articles

Sponsored