`10,000 வண்டி... 50,000 பேர்... ஆன்லைன் ட்ரெண்டிங்..!’ - அழகிரிக்காக துரை தயாநிதியின் ஸ்கெட்ச் #VikatanExclusive



ருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணியை நடத்துவதற்கான பணிகளில் ஆயத்தமாகி வருகிறார் மு.க.அழகிரி. 'அறிவாலயத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அழகிரியை ட்ரெண்டாக்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் துரை தயாநிதி' என்கின்றனர் மதுரை வட்டாரத்தில். 

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, மீண்டும் கட்சிக்குள் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருந்தார் அழகிரி. அவரது வருகைக்கு செயல் தலைவர் ஸ்டாலினும் பொதுச் செயலாளர் அன்பழகனும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, கருணாநிதி சமாதிக்கு வந்த அழகிரி, `கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். என்னுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கவே வந்தேன்' என்றார். அவரது இந்தப் பேட்டி தி.மு.க வட்டாரத்தைக் கொதிக்க வைத்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மதுரை சென்ற அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். முடிவில், வரும் செப்டம்பர் 5-ம் தேதி அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்துவது என்றும் இந்தப் பேரணியில் மாநிலம் முழுவதுமிருந்து 25,000 பேரைப் பங்கேற்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Sponsored


இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர் ஒருவர், "சென்னையை மிரள வைக்கும் அளவுக்குப் பேரணியை நடத்த வேண்டும் என்பதில் அழகிரி உறுதியாக இருக்கிறார். மொத்தமாக 25,000 பேரைத் திரட்ட முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்குள் இருந்தது. ஆனால், 10,000 வாகனங்களில் 50,000 பேரைக் கொண்டு வரும் அளவுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. புதுக்கோட்டையில் பெரியண்ணன் அரசுவுக்கு எதிராக அரசியல் செய்பவர்கள், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள், ஈரோட்டில் ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகள் எனப் பாதிக்கப்பட்டவர்களை மாவட்டவாரியாகத் திரட்டி வருகிறோம். இதில், எங்கள் முயற்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள். மாவட்டவாரியாக அதிருப்தியாளர்களை எல்லாம் ஓரணியில் திரட்டிக்கொண்டு வரும் பணியில் சிலரை நியமித்திருக்கிறார் அழகிரி. பேரணிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே, இவர்களை சென்னைக்கு அழைத்து வருவதில் உறுதியாக இருக்கிறோம். இவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளன" என விவரித்தவர், 

Sponsored


``அமைதிப் பேரணியின் மூலம் தங்களுடைய வலுவைக் காட்ட வேண்டும் என்பதில் அழகிரியைவிட அவரின் மகன் துரை தயாநிதி உறுதியாக இருக்கிறார். `தொடர்ந்து தங்களுடைய குடும்பத்தை அறிவாலயத்தில் உள்ளவர்கள் புறக்கணிக்கிறார்கள்' என்ற கோபம் அவருக்குள் இருக்கிறது. பேரணியின்போது அழகிரியே ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்களை அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். பேரணிக்கு முன்பும் பின்பும் அனைத்திலும் அழகிரியே எங்கும் நிறைந்திருக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதற்கும் அவர் தயாராக இருக்கிறார். இதுநாள் வரையில் தென்மண்டலத்தில் செல்வாக்கைக் காட்டிக்கொண்டிருந்த அழகிரி, கருணாநிதி மறைவுக்குப் பிறகு சென்னையில் வலுவைக் காட்ட நினைக்கிறார். அதன் தொடக்கமாக இந்தப் பேரணி அமையும் எனவும் அவர் நம்புகிறார்" என்றார் விரிவாக. 

Sponsored




Trending Articles

Sponsored