'ஆட்சியைவிட கட்சியே பெரிது!'  - ஏன் இப்படிப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம்? #VikatanExclusive



Sponsored



தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரவிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. 'தேசியக் கட்சிகளுடன் கூட்டணி என பன்னீர்செல்வம் கூறியதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கின்றனர். கூட்டணிக்கான கதவுகளையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, லாயிட்ஸ் காலனியில் உள்ள அண்ணா தி.மு.க தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 'ஆட்சியில் இருப்பதைவிட கட்சியே பெரிது. நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா. 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.கவை வெற்றி பெறச் செய்து, வரலாற்று சாதனையை அவர் படைத்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அதற்காக நான் உள்பட மூத்த நிர்வாகிகள் பதவியைத் துறக்க தயார்' எனப் பன்னீர்செல்வம் பேசியதாகத் தகவல் வெளியானது. 

Sponsored


கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், 'பல்வேறு அரசியல் பணிகள், கட்சி பணிகள், எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் சந்தித்து வெற்றி பெறும் வியூகம், ஜெயலலிதா வகுத்து தந்த அந்த வெற்றிப் பாதையில் பயணிப்பது ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம்' என்றவரிடம், 'நாடாளுமன்ற தேர்தல் வியூகம்' குறித்துக் கேட்டபோது, 'ஜெயலலிதாவின் நல்லாட்சிதான் தற்போதும் தொடருகிறது. மக்களுக்காக அவரது திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்களோடு இணைந்து வருகிற தேசிய கட்சிகள் என்றாலும் சரி, மாநில கட்சிகள் என்றாலும் சரி, அவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை சந்திப்போம்' எனக் கூறினார். 

Sponsored


'தேசியக் கட்சிகளுடன் கூட்டணி' எனப் பன்னீர்செல்வம் பேசியிருப்பது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியைத்தான் ராகுல்காந்தி விரும்புகிறார். ஆனால், 'ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க நிராகரித்துவிட்டால், அ.தி.மு.க ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் ப.சிதம்பரம். தி.மு.கவுடன் சிதம்பரத்துக்கு இணக்கமான உறவு இல்லை. எனவேதான், அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாகவும் தகவல் வெளியானது. 'மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை' என்பதுதான் அ.தி.மு.க நிர்வாகிகளின் மனநிலையாக இருக்கிறது. இதற்குக் காரணம், 'ஆட்சிக்கு சிக்கல் வந்தால் காங்கிரஸின் எட்டு எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி அரசை ஆதரிப்பார்கள். ராகுல் மூலமாக அதற்கு ஏற்பாடு செய்கிறேன்' எனக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் உறுதி அளித்திருப்பதுதான். 

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. 18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்புக்குப் பிறகு தி.மு.கவும் தினகரனும் கைகோர்க்கும் நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்துத்தான் அ.தி.மு.க அரசுக்கு சிக்கல் ஏற்படும். பழனிசாமி அரசைக் காப்பாற்றுவதற்குக் காங்கிரஸ் கட்சியின் தயவு இருந்தால் போதுமானது. இதை உணர்ந்துதான், 'காங்கிரஸ் கூட்டணிக்குத் தயார்' என அறிவித்தார் தினகரன். பன்னீர்செல்வமும் தேசியக் கட்சியுடன் கூட்டணி எனக் கூறிவிட்டார். தினகரனைவிடவும் எடப்பாடி பழனிசாமி ஆப்ஷனைத்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விரும்புகின்றனர்" என்றவர், 

"கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடுதான் நேற்று பேசினார் பன்னீர்செல்வம். குறிப்பாக, காங்கிரஸ் ஆப்ஷனை அவர்கள் ஓப்பன் செய்திருக்கிறார்கள். 'தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால், பெரிய ஆளாகிவிடலாம்' எனக் கணக்குப் போடுகிறார் தமிழிசை. நிர்மலா சீதாராமனோ, ரஜினியை நோக்கிச் செல்ல விரும்புகிறார். இதுநாள் வரையில் கூட்டணி தொடர்பாகப் பேசும்போதெல்லாம், 'நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறிவந்தார் எடப்பாடி பழனிசாமி. கடந்த சில வாரங்களாக அ.தி.மு.கவுக்கு எதிராக ரெய்டு அஸ்திரங்களை ஏவிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு. 'இது ஒரு ஊழல் அரசு' என வெளிப்படையாகவே விமர்சித்தார் அமித் ஷா. இதற்கு மேலும் இந்த அரசைக் காப்பாற்றுவதற்கு பா.ஜ.க தயாராக இல்லை என்பதையே ரெய்டுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அதேநேரம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், தினகரன் மற்றும் அரசுத் தரப்பின் வாதம் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆட்சிக்கு எதிரான விஷயங்கள் அணிவகுப்பதை அறிந்துதான், 'ஆட்சியைவிட கட்சியே பெரிது' என நேற்றைய செயற்குழு கூட்டத்தில் உருக்கமாகப் பேசினார் பன்னீர்செல்வம். தீர்ப்புக்குப் பிறகு, 'நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டாலும், மோடி உத்தரவிட்டதாகத்தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம். சிதம்பரம் மூலமாக எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் எங்கள் பக்கம் இழுத்துக் கொள்வோம்' என்பதை பா.ஜ.க தலைமைக்கு நேரடியாக உணர்த்தும் வேலைகளையும் அ.தி.மு.க தரப்பில் செய்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித் ஷாவோடு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் பங்கேற்க இருக்கிறார். 'தி.மு.கவை விட்டுவிடக் கூடாது' என ராகுலும் 'அ.தி.மு.கவைத் தள்ளி வைக்க வேண்டாம்' எனச் சிதம்பரமும் நினைக்கின்றனர். 'அரசியல் கணக்குகள் என்னவாகப் போகின்றன?' என்பதற்கான விடைகள், ஓரிரு வாரங்களில் தெரியக் கூடும். 



Trending Articles

Sponsored