`காமெடி நடிகராக இருக்கிறார்'- ஆர்.பி.உதயகுமாரை கிண்டலடித்த தினகரன்Sponsored"சினிமாவில்தான் நடிகர்கள் நடிப்பார்கள். வாழ்கையிலேயே நடிப்பவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அதுவும் காமெடி நடிகராக இருக்கிறார்" என்று டி.டி.வி.தினகரன் கிண்டலடித்தார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அவர் சமாதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  மொட்டை அடித்துக்கொண்டு பொதுச்செயலாளர் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என அம்மா பேரவை சார்பாகத் தீர்மானம்போட்டார். அப்போது, அப்படியெல்லாம் செய்யக் கூடாது என சசிகலா கண்டித்தார். சினிமாவில்தான் நடிகர்கள் நடிப்பார்கள். வாழ்கையிலேயே நடிப்பவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அதுவும்,  காமெடி நடிகராக இருக்கிறார். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஊரில் கும்பாபிஷேகத்துக்குச் சென்று சாமி கும்பிட்டால்கூட, அங்குள்ள கடவுள், தமிழக மக்களின் நலனைத்தான் பார்ப்பார். தனி நபர் வேண்டுதலை, அதுவும் துரோகம் செய்த மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறவருக்கு ஆதரவாக இருக்க மாட்டார். இறைவன் தவறானவர்களுக்கும் அரக்க குணம் கொண்டவர்களுக்கும் அழிவை உருவாக்குவார். 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு நல்லவிதமாக வரும். அதன்பிறகு நடக்கும் ஓட்டெடுப்பில், இந்த ஆட்சி முடிவுக்குவரும்.

Sponsored


Sponsored


மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு திட்டத்தால், இந்தியாவில் பல தொழில்கள் நசுங்கிவிட்டன. விவசாயிகள், ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையைப் போலவே இந்தத் திட்டமும் ஃபெயிலியர்தான். ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியைப் போலவே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றிபெறும். ஆறு, குளங்களைத் தூர் வாருவதற்கு 400 கோடி ஒதுக்கினார்கள். அந்தப் பணம் தண்ணீரோடு போய்விட்டதா எனத் தெரியவில்லை. ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தூர் வாரும் திட்டம். இதிலும் கொள்ளையடித்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், தமிழகம் காவி மயமாவதைத் தடுப்போம்; பகல் கொள்ளை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம் எனத் திடீர் ஞானோதயம் பெற்றவர்போல பேசுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி நிகழ்ச்சிக்குச் சென்றபோது, ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் தனியாக அமித் ஷாவை சந்தித்து, கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு கொடுத்தனர். அப்போது வருவதாகத் தெரிவித்த அமித் ஷா, பின்னர் மறுத்துவிட்டார். அதன் விரக்தியிலேயே, ஸ்டாலின் பி.ஜே.பி குறித்து பேசுகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, சமூக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர். இவற்றை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
 Trending Articles

Sponsored