களை இழந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா... தொண்டர்களை இழக்கிறதா அ.தி.மு.க..?Sponsoredஎம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத காந்த வார்த்தையாக இருந்துவருகிறது. ஆட்சி அதிகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனக்கென தனி அதிகாரத்தை நிலைநிறுத்தியபோதும்கூட, அவரும் தேர்தல் சமயத்திலாவது எம்.ஜி.ஆர் என்ற அந்த மூன்றெழுத்தை அழுத்தி உச்சரித்துதான் வெற்றிபெற்றார். அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவோம் என்று அறிவித்தார் ஜெயலலிதா. அதில், ''மக்கள் போற்றும் மகத்தான தலைவர், மக்கள் நலத் திட்டங்கள் பல தந்து, மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள பொன்மனத் தலைவர், ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வாரிவழங்கிய வள்ளல், சத்துணவுத் திட்டம் தந்த சரித்திர நாயகன், அனைத்துத் தரப்பு மக்களும் அனைத்து நலன்களும் பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள அரசு நலத் திட்டங்களைக் கடைக்கோடி மக்களுக்குக் கிடைக்கச் செய்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் மாவட்டம்தோறும் தமிழக அரசின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்'' என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

ஆனால், இந்த விழாவைக் கொண்டாட ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்துவது குறித்து மாநில அளவிலான குழு மற்றும் நூற்றாண்டு விழா மலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினை வெளியிட நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பெற்றுக்கொண்டார். நூற்றாண்டு விழா விளம்பர குறுந்தகடை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். 

கூட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநில அளவிலான விழாக்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள், அரசுத் துறை மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆரின் உயரிய லட்சியத்தையும் சிறப்பையும் நினைவுகூரும் வண்ணம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த ஜெயலலிதா ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தார். ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நாளை (30.6.2017) வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் வரை மிகச் சிறப்பாகக் கொண்டாட உள்ளது'' என்று அறிவிக்கப்பட்டது.

Sponsored


Sponsored


இப்படி, பலவாறு திட்டமிட்டு, குழு அமைத்து மாவட்டம் வாரியாகப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் விழா நடத்தினார்கள். ஒவ்வொரு விழாவிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், எம்.ஜி.ஆர் தொண்டர்கள் மகிழும் வகையில் இந்த விழாக்கள் இல்லை என்ற குறை இருந்துவந்தது. எனவே, எம்.ஜி.ஆர் ரசிகர்களையும் கட்சித் தொண்டர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகச் சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்தத் தமிழக அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதாவது, சென்னையில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 15 முதல் 30 வரை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார்.

இந்த விழாவுக்குப் பிரதமர் மோடியை அழைத்தால், அது வரலாற்று நிகழ்வாக இருக்கும். அதே நேரத்தில் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அ.தி.மு.க தரப்பில் முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இதுகுறித்து கடந்த ஆண்டு டெல்லி சென்றிருந்தபோது பிரதமரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வர அழைப்பு விடுத்தார். அப்போது அவர், ''நூற்றாண்டு நிறைவு விழாவில் சென்னையில் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். 'பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்' என்று கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். மேலும், ஜெயலலிதா உருவப்படத்தைச் சட்டமன்றத்தில் திறந்துவைக்கவும் வருகை தர வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார். ஆனாலும் மோடி, விழாவுக்கு வர இதுவரை சம்மதம் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தைத் திறந்து வைக்கும் விழாவை திடீரென்று கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திங்கள்கிழமை காலை 9.45 மணிக்கே தொடங்கி திறந்து வைத்தார் சபாநாயகர் தனபால். எந்தச் சட்டச் சிக்கலும் இல்லாமல் ஜெயலலிதா உருவப்படத்தைத் திறந்து வைத்துவிட்டார்கள்.

ஆனால், பிரதமர் வந்து இந்த விழாவைச் சிறப்பித்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கான முயற்சிகளைத் தமிழக அரசும் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளும் எடுத்தனர். அது நடக்கவில்லை. இதையடுத்து, ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதியை அழைக்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதுகுறித்து டெல்லியிலிருந்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் நேற்று தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அடுத்த மாதம் 30-ம் தேதி சென்னையில் விழா என்று தேதியை இறுதி செய்துவிட்டார்கள். ஆனால், வி.ஐ.பி யார் யார் என்பதை அறிவிக்கவில்லை.

இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ''தமிழகத்தில் கன்னியாகுமரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி முடித்துவிட்டனர். ஆனால், கன்னியாகுமரியில் அந்த விழாவை நடத்த முடியவில்லை. இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 101 வது ஆண்டில் அவருடைய நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துகிறார்கள். 22.9.18 அன்று கன்னியாகுமரியில் விழா நடக்கிறது. நிறைவு விழாவை 30.9.2018 அன்று சென்னையில் நடத்துகிறார்கள். அரசு செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி முடிக்க இருக்கிறார்கள். கட்சி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை எடுக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. ஆளும்கட்சியாக இருந்துகொண்டு, எம்.ஜி.ஆர் புகழ்பாட ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. 

திரைத்துறையில் இருந்து வந்தவர் எம்.ஜி.ஆர் அத்துறை சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து விழா எடுக்கத் தவறிவிட்டனர். எம்.ஜி.ஆர் சாதனைகளை வெளியே சொல்லாமலேயே நூற்றாண்டு விழாவை முடிக்கிறார்கள். சமாதி அருகே நூற்றாண்டு வளைவு கட்டி, அதைச் சாதனை என்று நாட்டு மக்களுக்குச் சொல்லப்போகிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவைக் காலம் காலமாகச் சொல்லும் அளவுக்குக் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கருணாநிதி கட்டினார். ஆனால், இவர்களுக்கு அதுபற்றிய அக்கறையே இல்லை. எம்.ஜி.ஆர் தொண்டர்களை, கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த இந்த விழாவைப் பயன்படுத்த அ.தி.மு.க தவறிவிட்டது'' என்று வேதனைப்பட்டார்கள்.Trending Articles

Sponsored