உண்மையான ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியா?Sponsoredமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், எதிர்பார்த்தபடியே ஆளும் அ.இ.அ.தி-மு.க வெற்றி பெற்றுள்ளது.இது உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் ஏ.கே. போஸ், தஞ்சையில் ரெங்கசாமி ஆகியோர், தி.மு.க வேட்பாளர்களை விடவும் பல ஆயிரம் வாக்குகள் (?) அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.

Sponsored


அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன், வாக்காளர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், தான் உடல் நலம் தேறி வருவதாகவும், வெகுவிரைவில் அரசுப் பணிகளைக் கவனிப்பேன் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

Sponsored


1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தவாறே, மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதுபோல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியிலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் தற்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தவாறே வெற்றிபெற்றுள்ளார்.

அ.தி.மு.க-வின் இந்த வெற்றியை அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், 3 தொகுதிகளில் குறைந்தது 2 தொகுதிகளிலாவது எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என தி.மு.க-வும் கடுமையான பிரயத்தனத்தில் ஈடுபட்டது. தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின், 3 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். என்றாலும், அக்கட்சி இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஜனநாயக தீர்ப்பை எப்போதும் தங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும், வெற்றி, தோல்வியை ஏற்பது வழக்கம் என்றும் கூறியுள்ளார். தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் அக்கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. தி.மு.க-வில் தற்போது உள்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளதால், அக்கட்சியால் இத்தேர்தலில் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியாமல் போனது. மதுரை திருப்பரங்குன்றத்தில் மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஸ்டாலின் அரவணைத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாகவே கட்சியில் இருந்து வருகிறது. தஞ்சாவூரைப் பொருத்தவரை பழனி மாணிக்கம், தி.மு.க-வின் வெற்றிக்காக முழுவீச்சில் உழைக்கவில்லை என்றும், அவரை ஸ்டாலின் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்றும் பரவலாக தி.மு.க-வினர் தெரிவிக்கிறார்கள்.ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொண்டார்களோ?

இந்த 3 தொகுதிகளிலும் பெரிய அளவில் வாக்குகளைப் பெறாவிட்டாலும், பாரதிய ஜனதா 3-வது இடத்தில் வந்ததை அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதத்துடன் (?) குறிப்பிட்டுள்ளார்.வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். ஓரிரு ஆயிரங்களில் வாக்குகளைப் பெற்று விட்டு, தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு பெருகி வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்று, எந்தவொரு தொகுதியிலும் வெற்றிபெறாத தே,மு.தி.க, தற்போது நடைபெற்ற 3 தொகுதிகளிலும் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. வாங்கிய வாக்குகள் என்னவோ சில ஆயிரங்கள் மட்டுமே. தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு மாற்று என்று இதுவரை மார்தட்டிக் கொண்டிருந்த விஜயகாந்த், இந்தமுறை மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார். ஜனநாயக ரீதியில் கிடைத்த வெற்றியா இது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ எதிர்காலத்தில் உண்மையான ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும்; ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ அல்லது சுயேச்சையோ, தொகுதிக்கு நல்லது செய்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

- சி. வெங்கட சேதுTrending Articles

Sponsored