அதிகாரம் ஆளுநருக்கா... அமைச்சரவைக்கா? புதுவை மாநிலமும் புதுப்புது சண்டைகளும்!Sponsoredபுதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்குமான மோதல் இப்போது வெடிக்கத்துவங்கியுள்ளது. அதிகார மோதல் காரணமாக எழுந்து வரும் புதுப்புது சண்டைகள் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக இந்திய மாநிலங்களில் ஆளுநர்கள் என்பவர்கள் ஆளும் கட்சியின் கைப்பாவையாகவே இருக்கிறார்கள். இதனால் தான் ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவை தானா? என கேள்வி எழுப்பினார். ஆனால் டெல்லி, புதுவை போன்ற யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களால் அங்கு ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் பிரச்னை வெடித்து வருகிறது. டெல்லியைத்தொடர்ந்து இப்போது புதுவையில் விஸ்வரூபமெடுத்து வருகிறது அதிகார மோதம்.

Sponsored


புதுவை மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து, புதிய அரசு பொறுப்பேற்கும் சூழலில் புதுவை மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் கிரண் பேடி. ஆளுநராக பதவியேற்க்கும் முன்னரே அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் என சொல்லப்பட அப்போதே புகைய ஆரம்பித்தது.தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் ஆய்வுகள், துறை வாரியாக அதிகாரிகள், பணியாளர்கள் கூட்டங்கள் என கிரண் பேடி, வந்த வேகத்தில் தீவிரம் காட்ட...  முதல்வரும், துறை சார்ந்த அமைச்சர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

Sponsored


தேர்தலிலேயே நிற்காமல் முதல்வரான நாராயணசாமி, தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் வரை எதுவும் பேசிவிடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ, எதையும் பேசவில்லை. ஆனால் கிரண் பேடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

மறுபுறம் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து வாய்க்கால்களை சுத்தம் செய்யத் துவங்கினார். வார விடுமுறை நாட்களில் எப்படி வேலை செய்வது என்று அரசு அதிகாரிகளும், இதர பணியாளர்களும் அமைச்சர்களிடம் முறையிட்டனர். இவை எல்லாம் அமைச்சரவைக்கும், ஆளுநருக்குமிடையே பனிப்போரை ஏற்படுத்தியது.

இடைத்தேர்தல் நடத்தி அதில் வென்று முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்ட நாராயணசாமி,  தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்து துறை உயர் அதிகாரிகளின் கூட்டமொன்றில் கொஞ்சம் ஆவேசம் காட்டினார். “அமைச்சரவைக்குத் தெரியாமல் எந்த கோப்புகளும் கவர்னருக்கு செல்லக் கூடாது” என்று வாய்மொழியாக அவர் உத்தரவிட்டார். மறுபுறம் கடும் நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடும் புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையோடு, தனித்தனியாக டெல்லிக்கு சென்று முறையிட்டனர் முதல்வரும், கவர்னரும்.

இதுவரை பனிப்போராக இருந்தவை இப்போது நீயா நானா போட்டியாக மாறியுள்ளது. கடந்த 14-ம் தேதி காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் கந்தசாமி, “அனைத்து துறைகளிலும் பொதுமக்களுக்கான பகுதியை அமைச்சர்கள் ஆய்வு செய்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கவர்னர் கூறுகிறார். நிதி இல்லாமல் ஆய்வு செய்து என்ன பயன் ? மத்திய அரசில் உள்ள 23 அமைச்சர்களையும் சந்தித்து புதுச்சேரிக்கான நிதியை அளிக்க வற்புறுத்தியதாகக் கூறுகிறார் கவர்னர். ஆனால் இதுவரை புதுச்சேரிக்கு நிதி கிடைத்தபாடில்லை. மத்தியிலிருந்து நீங்கள் குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாயாவது பெற்று வாருங்கள். அப்போது கவர்னர் நினைப்பது போன்று பொதுமக்கள் சேவையும், மாநில வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு பேசிய கவர்னர் கிரண்பேடி, “நமக்கு வர வேண்டிய நிதி கண்டிப்பாக வரும். ஆனால் நமக்குள்ள நிதியை சரியாகவும் அதேசமயம் நேர்மையாகவும் தான் செலவு செலவு செய்கிறோமா என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். அரசு நிர்வாகம் தேவையில்லாமல் அரசுத் துறைகளில் ஆட்களை நியமிக்கக் கூடாது. தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்ய வேண்டுமே தவிர அனைவருக்கும் அனைத்து சேவைகளும் இலவசம் என்ற நிலைமை இருக்கக் கூடாது. கடன் வாங்கி செலவு செய்ய முடியாது என்பதால் அரசு, நிதியை சேமிக்கவும் நிதியை உருவாக்கவும் வேண்டும்” என்று பதிலளித்தார்.

ஆளுநரும், அமைச்சரும் ஒரே மேடையில் இப்படி பேசிக் கொண்ட பரபரப்பு அடங்குவதற்குள் புதுச்சேரி துறைமுகத்தின் முகத்துவாரத்தில் நடந்த தூர்வாரும் பணியைப் பார்வையிட சென்ற அமைச்சர் கந்தசாமி, “4 மாதங்களாக துறைமுகம் தூர் வாராமல் இருப்பதற்கும், இதனால் ஏற்பட்ட 25 கோடி வருவாய் இழப்பிற்கும் கவர்னர்தான் காரணம். மத்திய அரசின் ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் மூலமாகத்தான் துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டதால் அரசிடம் பணம் இருந்தும் நான்கு மாதங்களாக மாநில அரசால் தூர் வாரும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இந்த பணியை மத்திய அரசு நிறுவனம் மூலம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அமைச்சர்களுடன் கலந்து பேசி இருந்தால் 25 கோடி இழப்பைத் தவிர்த்து இருக்கலாம். அமைச்சர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்களுடன் கலந்து பேசி செயல்படுவதுதான் ஜனநாயகம்” என்று காட்டமாகப் பேசி இருக்கிறார்.

ஆளுநருக்கும், அமைச்சர்களுக்குமிடையேயான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

- ஜெ.முருகன்,

படங்கள்: அ.குரூஸ்தனம்Trending Articles

Sponsored