'அம்மா'வின் அம்மா சந்தியாவையே மிஞ்சியவர் சின்னம்மா!’ - அமைச்சர்களின் 'அடடே' விளக்கம்Sponsored
திருச்சி  :  "அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அவருக்கே கட்சித் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி இருக்கிறது," என திருச்சியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பேசினர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திய ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி கட்சி, சார்பு அமைப்புகள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

Sponsored


அதன்படி திருச்சியில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் உதயகுமார், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராஜேந்திரம், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Sponsored


இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் முழு உருவச் சிலை வைக்க வேண்டும், இந்தியாவில் உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், "1982-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை மறைந்த அம்மாவுக்கு எல்லாமுமாக விளங்கியவர் நம் சின்னம்மா தான். ஒரு தாயைப்போல் எனக்கு இருக்கிறார்  என பல முறை அம்மாவே சின்னம்மா பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் 'அம்மாவிற்கே தாயாக வாழ்ந்தவர் சின்னம்மா சசிகலா. அவர்தான் அம்மாவின் அரசியல் வாரிசு, இதுதான் 1½ கோடி தொண்டர்களின் விருப்பம். இதனை ஏற்று கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்," என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “மறைந்த முதல்வர் அம்மா, கடந்த சில வருடங்களாகவே தவ வாழ்க்கை வாழ்கிறேன், எனக்கென்று யாரும் இல்லை. குடும்பங்கள் இல்லை தமிழக மக்களே எனக்கு உறவுகள், தமிழகமே எனது குடும்பம் என பேசினார். இந்தத் தவவாழ்க்கையில் அவருடன் 36 வருடங்கள் வாழ்ந்தவர் சின்னம்மா, அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை அற்புதமாக வழிநடத்தும் வல்லமை உடையவர் சின்னம்மா மட்டுமே” என்றார்.

இறுதியாகப் பேசிய அமைச்சர் உதயகுமார்,  “கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது 2 மணிநேரம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்து மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும், எனக்குப் பிறகும் இந்த இயக்கம் நிலைத்து நிற்கும் என முழங்கினார்.

அன்று அவர் கூறியது தெய்வ வாக்கு. தாயை இழந்த எங்களுக்கு முகவரியாய் சின்னம்மா இருக்கிறார். அவருக்கு அந்தத் தகுதியில்லை என பலர் விமர்சிக்கிறார்கள். 36 ஆண்டுகள் தவயோகியாக வாழ்ந்த அம்மாவின் தவ வாழ்க்கையில் அவரது அம்மா சந்தியாவை விட அதிகமாக வாழ்ந்தவர் சின்னம்மாதான். அம்மாவையும் அவர் அரசியலையும் அதிகம் உள்வாங்கிய ஒருவர் இவர் மட்டும்தான். அவருக்கு மட்டுமே இந்த இயக்கத்தை வழிநடத்தும் ஆற்றலும், உரிமையும் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க முடியும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு தெய்வம் தந்த கொடையாக அம்மா வந்தார். அடுத்து அம்மாவுக்கு பிறகு காலத்தின் தீர்ப்பாக, தாய் தந்த வரமா சின்னம்மாதான் இயக்கத்தை வழிநடத்த வேண்டும்," என்றார்.

கூட்டத்தின் தீர்மான புத்தகத்தில் 'தாய் தந்த வரம்' என குறிப்பிடப்பட்டு, ஜெயலலிதாவும் அருகில் சசிகலா படமும் இடம்பெற்றிருந்தது. முழுக்க முழுக்க ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய கூட்டங்கள், சசிகலாவை முன்னிறுத்தும் கூட்டமாக மாறிப்போனது தான் பரிதாபம்.

- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்Trending Articles

Sponsored