"ஓ.பி.எஸ் போல் ஒருவரை நான் பார்த்ததில்லை" - இல.கணேசன்



Sponsored



மத்தியப்பிரதேசத்தின் எம்.பியாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடித்து வந்துள்ளார் பா.ஜ.க -வை சேர்ந்த இல.கணேசன். மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 'cashless economy' முதல், ஜல்லிக்கட்டு, ராகுல் காந்தி, ஓ.பி.எஸ் என பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். 


நாடாளுமன்ற கூட்டத் தொடர் பற்றி அவர் கூறுகையில் "சபை நடவடிக்கைகள் எதிர் கட்சிகளின் கூச்சல் குழப்பம் காரணமாக சரியான முறையில் நடைபெறவில்லை. நாங்கள் விவாதத்துக்கு எப்பொழுதும் தயார்,  ஆனால் எதிர்கட்சிகள் எங்களின் சரியான பதில்களை எதிர்கொள்ள முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றன. அவர்களிடம் எதிர்த்து பேச போதிய விஷயங்கள் இல்லாததே அதற்கு காரணம்.

Sponsored


சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை போராடி பெற்றது பா.ஜ. அரசு. நீதிமன்றம் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த பட்டியலை அருண் ஜெட்லி அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டார். இனி அந்த பட்டியலை வெளியிடுவது நீதிமன்றத்தின் பொறுப்பு. சுவிஸ் வங்கியில் நேர்மையான முறையில் பணம் வைத்திருப்பவர்களும் உண்டு, அதனால் சுவிஸ் வங்கியில் பணம் வைத்து இருப்பவர்கள் அனைவரும் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று கருதுவது தவறு. இதனை எதிர் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Sponsored


இரங்கல் தெரிவிக்கும் பொழுது மட்டுமே சபையினர் அமைதி காக்கின்றனர் என்று துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி வருந்தும் அளவுக்கு நாடாளுமன்றம் நடந்தது வேதனையானது" என்றார்.

பணமில்லா பொருளாதாரம் பற்றி அவர் கூறுகையில் " cashless economy என்ற வார்த்தையை நாம் தவறாக பணமில்லா பொருளாதாரம் என்று அர்த்தப்படுத்தி கொள்கிறோம் cashless economy என்பது பணம் குறைவான பொருளாதாரம் என்பதே சரியான பொருள், பிரதமர் மோடியின் கொள்கை அடிப்படையில் நாம் மின்னணு பரிமாற்றம் மேற்கொள்ள ஆரம்பித்தால் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்படும், கடந்த ஒரு மாததில் மின்னணு பரிமாற்றத்தை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு இதுவே சான்று. கருப்பு பணம் பதுக்கிய பண முதலைகள்தான் இந்த திட்டத்தை குறை கூறி வருகிறார்கள், மேலும்  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தான் ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை பற்றி பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்று கூறுகிறார், அவர் பேசவே வேண்டாம் அகஸ்தா ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ளவர்கள் உண்மையை கூறினாலே பூகம்பம் வெடிக்கும்" என்று இல.கணேசன் கூறினார்.

ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறுமா என்ற கேள்விக்கு " கொள்கை ரீதியாக பா.ஜ.க ஜல்லிக்கட்டை முழுமையாக ஆதரிகின்றது. நான் பிரதமர் மோடியை சந்தித்த பொழுது ஜல்லிகட்டு இல்லாமல் பொங்கல் திருவிழா முழுமையடையாது என்று கூறினேன், மத்திய அரசு ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறது ஆனால் சில நேரங்களில் சில ஊடகங்களும், நீதிமன்றமும் அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுகட்டையாக அமைந்து விடுகிறது. நீதிமன்றம் என்பது அரசு தடம் மாறி செல்லும்பொழுது பாதுகாக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை நகரவே விடாத தடையாக இருகக் கூடாது. விரைவில் ஜல்லிகட்டு தீர்ப்பு  வரவிருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிலையை பற்றிய கேள்விக்கு இல.கணேசன் பதில் கூறுகையில் " அ.தி.மு.கவிற்கு மக்கள் கொடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியை அவர்கள் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை போன்ற வேறு ஒரு மனிதரை நான் இதுவரை கண்டதில்லை. அவரிடம் உள்ள அடக்கம் அவருக்கு இயல்பாக வந்த ஒன்றா அல்லது அவர் வளர்த்துக் கொண்டதா என்று தெரியவில்லை. அவர் சிறப்பாக ஆட்சி புரிய என் வாழ்த்துகள்"

இறுதியாக அவர் கூறுகையில் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மோடியின் மதிப்பு மக்களிடையே  உயர்ந்துள்ளது, அந்த நம்பிக்கையின் பலன் அடுத்த தேர்தலில் தெரியும்" என்று கூறினார்.

க.விக்னேஸ்வரன்
மாணவப் பத்திரிகையாளர்
படங்கள்- ஈ.ஜெ.நந்தகுமார்



Trending Articles

Sponsored