சசிகலாவை எதிர்த்து அறிக்கை, பேட்டி... அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்!Sponsoredதிருச்சி : சசிகலாவுக்கு எதிராக அறிக்கை விட்டதாலும், பேட்டி கொடுத்ததாலும் எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையிலும் அவர் புகார் அளித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது? சசிகலா கட்சி தலைமை பொறுப்புக்கு வந்தால் அதிமுக சிதைந்து விடும் என அறிக்கை வெளியிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார் அ.தி.மு.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், திருச்சி தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தவருமான கே.சவுந்திரராஜன்.

Sponsored


ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை தீர்க்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணம் வரை நடந்தவற்றை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Sponsored


இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதில் இருந்து தனக்கு தொடர்ச்சியாக கொலைமிரட்டல் வருவதாக சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனுவையும் சவுந்திரராஜன் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சவுந்திரராஜனிடம் பேசினோம். “எம்.ஜி.ஆர். காலத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக இருந்தேன். கட்சி உடைந்தபோதும் அம்மாவின் பின்னால் நின்றதுடன், இன்று வரை அ.தி.மு.க.விலேயே இருந்து வருகிறேன். தலைவர் கட்சியை ஆரம்பித்த போது அவர் உடனிருந்த 7 பேரில் நானும் ஒருவன். அந்த தகுதியில்தான், அம்மாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றும், வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டேன்.

அம்மாவுக்குப் பிறகு சசிகலா என அமைச்சர்கள் சொல்கிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பதவியை தக்கவைத்துக்கொண்டு கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அம்மாவுக்குப் பிறகு சசிகலா என்கிறார்கள். அவர் கட்சிக்குத் தலைமை பொறுப்புக்கு வரவேண்டுமானால் தொடர்ந்து 5 வருடம் கட்சியின் உறுப்பினராக இருக்கவேண்டும். ஆனால் கட்சியின் விதிமுறைகளை சசிகலாவுக்காக மாற்றிக்கொள்ளவும் தயாராக உள்ளார்கள்.

அம்மாவுக்குப் பின் சசிகலா என்பதை ஏற்க முடியாது. ஜனநாயகப்படி நல்ல தலைமையை தேர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இதைத்தான் நான் அறிக்கையாகவும், பேட்டியாகவும் கொடுத்தேன். சசிகலா தான் கட்சியை தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூடி முக்கிய முடிவெடுப்பார்கள் என்று நான் சொன்னேன்.

இந்த அறிக்கை, பேட்டி வெளிவந்த உடனே எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் வந்தன. கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். தொடர்ச்சியாக இந்த மிரட்டல் வருகிறது. இது குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் கொடுக்க உள்ளேன்.

அ.தி.மு.க. என்ற பேரியக்கத்தைக் காக்கவும், அதற்கு ஆதரவாகவும் தான் நான் பேசுகிறேன். சசிகலாவிடம் கட்சி சென்றால் கட்சி அழிவது உறுதி. நான் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் கட்சிக்கு வந்தேன். இந்த மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன்”  என்றார்.

கட்சியில் சசிகலாவுக்கு வரவேற்புக்கு இணையாக எதிர்ப்பும் இருக்கிறது.
 
- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்Trending Articles

Sponsored