ஓ.பன்னீர்செல்வம் பத்திலாம் கேக்காதீங்க... சின்னம்மா முதல்வராகணும்... அவ்வளவுதான்!' தம்பிதுரை கொதிகொதி பேட்டிSponsoredகோவை : "ஓ.பன்னீர்செல்வம் பத்தி எல்லாம் கேக்காதீங்க. கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒருத்தர் கிட்ட இருக்கணும். அதுக்கு சின்னம்மா முதல்வராகணும். அவ்வளவுதான்" என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே, தற்போதைய முதல்வருக்கு பதில் இன்னொருவர் முதல்வர் ஆவார் என்கிறார். அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு, எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மாற்றாக இன்னொருவரை முதல்வராக வேண்டும் என கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரே பேட்டியும், அறிக்கையும் கொடுக்கிறார். சிலர் மட்டுமே இதை பேசுகிறார்கள். ஆனால் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கே புரியவில்லை.

Sponsored


Sponsored


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என திடீரென ஒரு கோரிக்கை கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் மத்தியில் திரும்பத் திரும்ப அந்த குரல் ஒலித்தது. இப்போது சசிகலா பொதுச்செயலாளராகி விட்டார். இப்போது முதல்வராக வேண்டும் என்ற குரல் ஒலிக்கத்துவங்கியுள்ளது. இதையும் அதே சிலர் தான் பேசுகிறார்கள். இப்போது சசிகலா முதல்வராக வேண்டும் என்ற குரல் வலுவாக ஒலிக்கத்துவங்கியுள்ளது.

அமைச்சர் உதயகுமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை என ஓரிருவர் மட்டுமே இது போன்ற கோரிக்கைகளை பேசுகிறார்கள். அல்லது பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இப்போது சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என பேசி அழுத்தம் கொடுக்கத்துவங்கியிருக்கிறார் தம்பிதுரை. கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள சசிகலாவே, முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அறிக்கை, பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை.

கோவை வந்த தம்பிதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சின்னம்மா உடனடியாக முதல்வர் பதவியை ஏற்று செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தொண்டர்களின் வேண்டுகோள். இதை நிறைவேற்றித்தர வேண்டுமென்பதும், அம்மா ஆட்சியை சின்னம்மா எடுத்து நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதை தான் நான் அறிக்கையாக கொடுத்திருக்கிறேன்.

இதை அமைச்சர்கள் ஆதரவுடன் தெரிவிக்க வேண்டியதில்லை. இது என்னுடைய கருத்து. ஆட்சியும், கட்சித் தலைமையும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். இது தான் அரசியலில் நாம் கற்ற பாடம். உத்திரப்பிரதேசத்தில் தந்தை கட்சித்தலைவராகவும், மகனிடத்தில் ஆட்சியும் இருப்பதால், இருவரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அப்பா, மகனிடமே மோதல் நடக்கிறது. அதனால் தான் கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையில் இருக்க வேண்டும் என்கிறேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா... அவ்வளவு ஏன் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட உலகத்தின் பல தலைவர்கள் இதை தான் பின்பற்றினார்கள். இது தான் நடைமுறை. சின்னம்மா இப்போது கட்சித்தலைமையேற்று இருக்கிறார். அவரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும்," என்றார்.

அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என அவரிடம் கேட்டபோது, "அதைப்பத்தி எல்லாம் நான் எதுவும் சொல்ல விரும்பலை. நான் சொல்ல வர்றது கட்சியும், ஆட்சியும் ஒண்ணா இருக்கணும். அதுக்கு சின்னம்மா முதல்வராகணும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மக்கள் யாருக்கு ஓட்டு போடுறாங்க? கட்சிக்கு தானே? எனக்கா மக்கள் வாக்களித்தார்கள். கட்சிக்குத்தானே வாக்களித்தார்கள். எனவே கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அது தான் நல்லது," என்றார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மீதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து விட்டுச் சென்றார் தம்பிதுரை.

- கே.சின்னதுரைTrending Articles

Sponsored