முதல்வர் பதவியில் சசிகலா அமர்வது தள்ளிப்போவது ஏன்?Sponsored                        

ந்தா...அந்தா...என்று எதிர்பார்க்கப்பட்ட விஷயம் அது! ஆனால், இப்போது, கிணற்றில் போடப்பட்ட கல்லாக கிடக்கிறது. 

முதல்வர் பதவியில் சசிகலா என்கிற பேச்சே அ.தி.மு.கழக பிரமுகர்கள் மத்தியில் இப்போது ஒலிக்கக்காணோம்.சசிகலாவின் கணவர் எம். நடராஜன், 'ஓ.பன்னீர் செல்வம் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்' என்று சர்டிபிகேட் தருகிறார். தேவையில்லாமல், போயஸ்கார்டன் பக்கம் ஓ.பன்னீர் செல்வம் போவதையும் குறைத்துக்கொண்டார்.  அவரது பிறந்தநாள் ஜனவரி 14ம் தேதி வந்தது. அன்று அவரது சொந்த ஊருக்குப் போய்விட்டார். போயஸ்கார்டனுக்கு போய் சசிகலாவிடம் ஆசி வாங்குவார் என்று சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,பன்னீர்செல்வம் போகவில்லை. இப்படியாக...தனது முதல்வர் பதவிக்கான தனித்தன்மையை உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்தும்வகையில் செயல்பட ஆரம்பித்துவிட்டார். 

Sponsored


முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கிராஃப் ஏறுமுகமாக இருக்கிற இந்தச் சூழ்நிலையில்,முதல்வர் பதவியில் இருந்து அவரை இறக்கிவிட்டு,அந்த இடத்தில் சசிகலா அமர்வதைக்  கட்சியின் சீனியர்களில் பலர் விரும்பவில்லை.எதிர்ப்புதான் அதிகம் கிளம்பும் என்று உளவுத்துறையினரும் சசிகலாவிடம் எச்சரித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு பொதுமக்கள் மத்தியிலும், சசிகலாவின் அதிருப்தியாளர்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு திரண்டு வருகிறது. இதையெல்லாம் எடைபோட்டு, கட்சியில் "வெர்டிக்கல் ஸ்பிலிட் வரும்"என்கிற வார்த்தையையையும் உளவுத்துறை உயர் அதிகாரி உச்சரித்தாராம்.

Sponsored


இதற்கு உதாரணமாக அமைந்தது...சசிகலாவின் தம்பி திவாகரன் பேச்சை முன்னாள் அமைச்சர் முனுசாமி கண்டித்து பேட்டி கொடுத்தது. அதன் விளைவுதான்... சசிகலா சைலண்ட் ஆகிவிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெகு விரைவாக அ.இ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.அதன் தொடர்ச்சியாகத் தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பொங்கலுக்கு முன்பே அவர் முதல்வராக வருவதற்கான அரசியல் சூழல்கள் தமிழகத்தில் கனிந்த நிலையில் அது தள்ளிவைக்கப்பட்டது.நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் சசிகலா முதல்வராக  வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார்.ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு ஏற்க சசிகலா காட்டிய ஆர்வத்தை, ஏன் முதல்வர் பதவியில் காட்டவில்லை என்பதை அக்கட்சியினர் உட்பட எல்லா அரசியல் கட்சியினரும் தங்களுக்குள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.இந்த நிலையில் முதல்வராவதில் சசிகலாவுக்கு அப்படி என்னதான் சிக்கல் என்று போயஸ் கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம்.'பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது...டெல்லி நீதிமன்றத்தில் நடக்கும் சொத்து வழக்குதான் காரணம்'என்று பளிச்சென சொன்னார்கள் கார்டன் உறவுகள்.

அவர்கள் மேலும் கூறுகையில்,"சின்னம்மாவைப் பொறுத்தவரை அம்மாவுக்குப் பிறகு அவரின் இடத்தை கட்சியிலும்,தமிழக அரசியலிலும்,தமிழக அரசிலும் நிரப்பவேண்டும் என்பதுதான் இலக்கு.இதற்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அதனை மிக விரைவாகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் பொதுக்குழு செயற்குழு கூட்டி பொதுச் செயலாளர் ஆனார்"என்றனர்.

அதிமுகவில் உள்ள சீனியர்கள் யாருக்கும் தன் மீது கடுகளவும் அதிருப்தி உண்டாகிட கூடாது என்றுதான் சென்னை தொடங்கி மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஏகோபித்த ஆதரவு இருப்பதைப்போன்ற பிரமையை சசிகலா ஏற்படுத்தினார். 

                        

பொதுச்செயலாளர் பதவியிலும் அமர்ந்த உடன், மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து முடித்துவிட்டார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்... முதல்வர் பதவியில் அமர்வதற்கு  வேறு என்ன சிக்கல் என்றும் அவர் கார்டனில் ஆலோசனை நடத்தினார். அதில் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.அந்தக் கூட்ட முடிவில், 'உச்ச நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.அதில் என்ன முடிவு கிடைக்கவுள்ளது என்பதைக் கவனித்து அதன் பிறகு முதல்வர் பதவியில் அமரலாம்' என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.இதன் வெளிப்பாடாகவே  தற்போதைக்கு, போஸ்டர் உள்ளிட்ட விளம்பரங்களில் முதல்வர் சசிகலா என்கிற கோணத்தில் யாரும் குறிப்பிடவேண்டாம் என்று சசிகலா அ.தி.மு.கவினருக்கு உத்தரவிட்டார்.

காத்திருக்கும் ஓபிஎஸ்!

முன்புபோல அடிக்கடி போயஸ் கார்டன் சென்று ஆலோசனைகளைப் பெறுவதில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை.'தேவையான உத்தரவுகளை,அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மூலம் அவருக்கு சசிகலா அல்லது டிடிவி அனுப்பிவிடுகிறார்கள்.அதன்படி முதல்வர் நடக்கிறார்' என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.

மேலும் அவர்கள் நம்மிடம் பேசுகையில்,"சசிகலாவுக்கு முதல்வருக்கும் கருத்து வேறுபாடெல்லாம் ஒன்றுமில்லை.என்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு போல நேரில் சந்திப்பதில்லை. அவ்வளவுதான். ஆனால் அதே நேரத்தில் 'மத்திய அரசு தன்னிடம் இணக்கமாக இருக்கிறது. மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை பிரதமரிடமும் மத்திய அமைச்சர்களிடமும் உடனுக்குடன் நேரிலோ அல்லது துறை சார்ந்த செயலாளர்கள் மூலமோ தம்மால் தெரிவித்து அதற்கு நடவடிக்கை எடுக்க வைக்கவும் முடிகிறது. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செயலாற்றுவோம்' என்ற எண்ணத்தில் முதல்வர் இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதைப் பொறுத்து தமது செயல்பாடுகளைத் திட்டமிட்டுக்கொள்ளலாம் என்று ஓபிஎஸ் காத்திருக்கிறார்"என்று தெரிவித்தனர்.

மன்னார்குடியில் 'போயஸ் கார்டன்' பிரான்ஞ்ச்

அரசு நிர்வாகத்திலும்,அதிமுகவிலும் நடராஜனும் திவாகரனும் தங்களின் ஆதிக்கத்தை அண்மைக்காலமாக  வகை தொகையில்லாமல் வெளிப்படுத்தி வருகின்றனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்வரை போயஸ்கார்டன் பக்கம் செல்வது குறித்து கனவிலும் நினைக்காத இவர்கள் இப்போது கார்டனையே தங்களின் தலைமைச் செயலகமாக மாற்றிக் கொண்டனர்.அதனால் முதலில் அதிர்ச்சிக்கு ஆளானவர் சசிகலாதான். 

                              

கட்சியில் இந்த இரண்டுபேரின் செயல்பாடுகள் சீனியர்கள் பலருக்கும் அதிருப்தியை உருவாக்கியுள்ளன.அது தொடர்பாக அவர்கள் சசிகலாவிடமும் புகார்கள் தெரிவித்துள்ளனர்.அதனை டிடிவியிடமும் விசாரிக்க சொல்லி அவர் உறுதிப்படுத்திக்கொண்டார்.அதன்பின்னரே இருவரையும் சசிகலா தஞ்சை அனுப்பியுள்ளார்.ஆனால் அங்கே போன அவர்கள் ஒரு கிளை போயஸ் கார்டனை உருவாக்கிக்கொண்டுள்ளனர்.அதிமுகவின் எம்.எல்.ஏக்களில் சுமார் 80 சதவீதம் பேர் திவாகரனின் தேர்வுதான் என்பதால் அவரைப் பார்க்கவும்,எம்.என். நட்பைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் மன்னார்குடிக்குப் பயணமாகிறார்கள்.இது இன்னொரு போயஸ் கார்டன் என்கிறார்கள் மன்னார்குடி அதிமுகவில்.

அண்மையில் நடந்த பொங்கல் விழாவில் 'நாங்கதான் அதிமுகவை சோதனை கட்டத்தில் காப்பாற்றினோம்' என்று திவாகரன் மார்தட்ட, அது கிருஷ்ணகிரியில் கொந்தளிப்பைக் கொண்டுவந்தது.முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திவாகரனை கடுமையாகக் கண்டித்துப்பேசினார்.அ.தி.மு.கவுக்கும் திவாகரனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு மன்னார்குடி உறவுகளை அதிர்ச்சியடையவைத்தார்.ஆனால் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பவர் சென்டர் ஆகவே வெற்றிநடை போட்டுவருகிறார்கள். இவர்களை அடக்கி வைக்காமல் வேடிக்கை பார்க்கிறார் சசிகலா. இதுதான் பெரிய மைனஸ் பாயிண்டாக ஆக அ.தி.மு.கழக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

- சி.தேவராஜன். Trending Articles

Sponsored