அகிலேஷின் தம்பி மனைவிக்கு சீட் #UPElections2017Sponsored.பி., சட்டசபைத் தேர்தலில் போட்டியிட, முதல்வர் அகிலேஷ் யாதவின் தம்பி பிரதிக்கின் மனைவி அபர்ணா  யாதவுக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக பிப்ரவரி 11 முதல், மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. அகிலேஷ் தலைமையிலான ஆளும் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியோடு இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. உத்திரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி இதுவரை வெற்றி பெறாத தொகுதிகளில் தலைநகர் லக்னோவில் உள்ள லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியும் ஒன்று. 2012 சட்டசபை தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநில தலைவர், ரீட்டா பகுகுணா வெற்றி பெற்றார். இவர் கடந்த நவம்பரில் பா.ஜ.,வுக்குத் தாவினார். வரும் சட்டசபை தேர்தலில் இந்தத் தொகுதியில் ரீட்டா பகுகுணாவையே பா.ஜ., களம் இறக்குகிறது.

Sponsored


லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில், சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற வேண்டும் என்பது, அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் கனவு. அதற்காகவே, முலாயம் சிங் யாதவ் தன் இரண்டாவது மனைவி சாதனா குப்தா மகன், பிரத்திக்கின் மனைவி அபர்ணாவை வேட்பாளராக, ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவித்தார். அதையேற்றுத் தொகுதியில் கடந்த ஒரு வருடமாக அபர்ணா தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் 31 தொகுதிகளுக்கான நான்காவது வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின்படி, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதி வேட்பாளராக அபர்ணா உறுதிசெய்யப்பட்டுள்ளார்.

Sponsoredமுலாயமின் தம்பியும், அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவ்பால் யாதவின் ஆதரவாளராக, அபர்ணா அகிலேஷ் யாதவின் எதிரணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்,  அவருக்கு 'சீட்' கிடைக்காது என்றே லோக்கல் சமாஜ்வாதி கட்சியினர் கருதி வந்தனர். ஆனால், சில மாதங்களாக நிகழ்ந்துவந்த  குடும்ப அரசியல் போட்டியில் அபர்ணாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 


லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராகப் போட்டியிடும் ரீட்டா பகுகுணா, முன்னாள் முதல்வர் எச்.எம்.பகுகுணாவின் மகள். 25 ஆண்டு அரசியல் அனுபவம் பெற்றவர்.  அவரை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அபர்ணா, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். மாநில அரசியலில் தங்களது குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக வெற்றிக்குக் கடுமையாக உழைப்பார் அபர்ணா என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

- விக்கி 


 Trending Articles

Sponsored