ஜெயலலிதா எப்படிப்பட்டவர்? - சட்டசபையில் விளக்கிய ஸ்டாலின்Sponsoredஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தில் ஜெயலலிதாவைப் பற்றி நெகிழ்ந்து பேசினார் ஸ்டாலின். ஜெயலலிதா பதவியேற்பு விழாவின்போது தனக்கு 16-வது வரிசையில் இடம் ஒதுக்கியதைப் பெருந்தன்மையோடு எடுத்துக்கூறினார் ஸ்டாலின். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து 24-ம் தேதி சட்டசபை கூடியதும் முதலமைச்சரும் அவை முன்னவருமான   ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது "அனைவரின் அன்பிற்கும், போற்றுதலுக்கும் உரியவராகவும், மாபெரும் மக்கள் இயக்கமாம் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பணியாற்றிய புரட்சித்தலைவி அம்மா யாரும் எதிர்பாராத வகையில் மறைந்தமை குறித்து இப்பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், ஆற்றொணாத் துயரத்தையும் தெரிவிப்பதோடு, தங்கநிகர் தாயின் மறைவால் வருந்தும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது." என்று பேசினார்.

Sponsoredஅதன் பின்பு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். "அரசியல் வாழ்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அவரது இடத்தைத் திறம்படத் தலைமை தாங்கியதோடு, ஆட்சிக் கட்டிலிலும் அமரும் வகையில் அ.தி.மு.கவை வெற்றி பெறச் செய்தவர். அவரது ஆட்சியில் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு உகந்தவையாக இருந்தன. 1989 -ம் ஆண்டில் ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அதே கால கட்டத்தில் நானும் சட்டப்பேரவை உறுப்பினராக காலடி எடுத்து வைத்தேன் என்பதை நினைவு கூர்கிறேன். நான் எம்.எல்.ஏவாக இருந்தபோது, அவர் எதிர்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தார் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன். தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது அதற்காக நிதி திரட்டும் வேளையில், 2005-ம் ஆண்டு முதல்முறையாக ஜெயலலிதாவைச் சந்தித்து ரூ.21 லட்சத்தை தி.மு.க சார்பில் வழங்கினேன். அப்போது அவர், கலைஞர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்ததோடு, நன்றி கூறவும் சொன்னார்.

Sponsoredஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நான் துணை முதல்வராகப் பணியாற்றியிருக்கிறேன். அவர் முதல்வராக இருந்தபோது நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறேன். 2016 -ம் ஆண்டு அ.தி.மு.க வெற்றிபெற்று, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் விழாவுக்கு அழைக்கப்பட்டேன். என்னுடன் எம்.எல்.ஏக்களும் விழாவுக்கு வந்திருந்தனர். எனக்கு 16 -வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பாக நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஆனால், ஊடகங்களில் விமர்சன செய்தி வெளியானது. அதை அறிந்த அம்மையார் ஜெயலலிதா, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவமதிக்கும் நோக்கில் அச்சம்பவம் நடைபெற வில்லை என்றும், நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


ஜெயலலிதா உடல்நலம் குன்றியிருந்தபோது, கலைஞர் அறிக்கை வெளியிட்டார். என்னையும்  மருத்துவமனைக்கு அனுப்பி உடல் நலம் விசாரிக்க உத்தரவிட்டார். ஜெயலலிதா பூரண நலம் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் மறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகள் எத்தனையோ இருந்தாலும், என்னைக் கவர்ந்த, பாராட்டப்படக்கூடிய, பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், எதற்கும்  அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றவர் ஜெயலலிதா என்பதுதான்." என ஸ்டாலின் பேசினார். 

இந்த இரங்கல்  தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பேசினார்கள். இறுதியாக  சபாநாயகர் தனபால் பேசினார். இதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பின்  ஜெயலலிதாவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள்  அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் சட்டசபை 27–ம் தேதி  அன்று காலை 10 மணிக்குக் கூடும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், மாரிமுத்து, விக்கி. Trending Articles

Sponsored