'ஒரு பக்கம் சசிகலா... மறு பக்கம் மத்திய அரசு...'ஓ.பன்னீர்செல்வம் குறித்து மு.க.ஸ்டாலின் 'கவலை'!



Sponsored



கோவை : "ஓ.பி.எஸ். என்ன செய்வார் பாவம். சசிகலாவையும் பகைக்க முடியவில்லை. மாநில அரசின் உரிமைக்காக மத்திய அரசிடமும் போராட முடியவில்லை. இந்த சூழ்நிலையிலே இப்படி ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்பதைத்தான் இன்றைக்கு வேதனையோடு பார்க்கிறோம்," என கோவையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோவை - சிவானந்தா காலனியில் நேற்று மாலை நடைபெற்ற, மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,

Sponsored


“1965ம் ஆண்டு இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம், மொழியை காப்பாற்ற, நம்முடைய இனத்தை காப்பாற்ற நடைபெற்ற போராட்டம். ஆனால், ஒரு வார காலத்திற்கு முன்பு தமிழர்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் காப்பாற்றுவதற்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டை முன்வைத்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தி, அதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆகவே, என்னைப் பொறுத்தவரையில் மொழிக்காக தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற அதே நேரத்தில், நம் கலாசாரத்தை காப்பாற்றியிருக்கின்ற இந்த இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sponsored


அன்றைக்கு தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்டத்தில் ஏறக்குறைய 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிர் நீத்தார்கள். இன்றைக்கு நமது கலாசாரத்தை, பண்பாட்டை, தமிழ் உணர்வைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது தேவைதானா? போராட்டம் தொடங்கிய நேரத்தில், பக்கபலமாக இருந்த காவல்துறையினர், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசாங்கம், திடீரென்று ஒரு நாள் தடியடிப் பிரயோகத்தை நடத்தி, கலவரத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் எல்லாம் தாக்கப்பட்டார்கள். கைக் குழந்தைகளோடு இருந்த தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், இளைஞர்கள் என எல்லோரும் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு வாரம் அந்தப் போராட்டம் அமைதியாக நடந்தது, போராட்டத்தின் விளைவாக வெற்றியும் பெற்ற நேரத்தில் தடியடி பிரயோகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அறவழியில் போராடுவதாக முதல்வர் பன்னீர்செல்வமே மாணவர்களை பாரட்டவில்லையா?. “தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் அமைதியாக இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள், அறவழியில் நடத்தி இருக்கிறார்கள். ஆகவே, அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கையாக, பேட்டியாக வெளியிடுகிறார்.

முதல்வர் இப்படி சொன்ன அடுத்தநாளே தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசி போலீஸார் தாக்குதல் நடத்துகிறார்கள். இதை கண்டித்ததோடு, சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. அதனால் ஆளுநரை சந்தித்து பிரச்னைகளை விளக்கினோம். போலீஸார் நடத்திய தாக்குதல் காட்சி வீடியோக்களை காட்டினோம். போலீஸாரே தீ வைக்கும் காட்சியை கண்டு அவர் அதிர்ந்து போனார்.

தமிழக காவல்துறையினர் இதில் பலிகடாவாக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றதென்ற செய்தி வெளியில் வரக்கூடாது. ஆகவே அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள், சமூக விரோதிகள், தேச விரோதிகள் எல்லாம் உள்ளே புகுந்தார்கள் என்ற செய்தியை பரப்பவே இப்படி ஒரு நாடகத்தை போலீஸாரை கொண்டு நடத்தி இருக்கிறார்கள். அவசரச்சட்டம் நிறைவேற்றப்படும் என சொன்ன பின்னரும் மாணவர்கள் கலைந்து போகாததற்கு காரணம் அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள்தான். 

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 3 ஆண்டு காலமாக தமிழர்களின் வீர விளையாட்டாக பண்பாட்டு அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டினை நடத்த முடியவில்லை. 3 ஆண்டுகாலமாக அதற்கான முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபடவில்லை. இன்றைக்கு 3 நாளில் அவசர சட்டத்தை கொண்டு வரும் அறிவிப்பை வெளியிட்ட அ.தி.மு.க. 3 ஆண்டில் செய்யாமல் இருந்ததால்தான் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இதே உச்சநீதிமன்றம் தடைபோட்டது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம் தடை போட்டிருந்தாலும், அந்த தடையை தகர்த்தெறிந்து தி.மு.க. ஆட்சி காலம் இருந்தவரை ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினோமா இல்லையா?

இப்போது மத்திய அமைச்சர் எங்களை குறை சொல்கிறார். ஆனால் 'தடை இருந்தாலும் தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது’ என்ற உண்மையையும் அவர் சொல்லியிருக்க வேண்டாமா? அங்கேதான் அவர்களுக்கு அரசியல் வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றவே முடியாது. எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டிலே பா.ஜ.க. காலூன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இன்றைக்கு அவர்கள் உணர்ந்துகொண்டிருகிறார்கள். அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு இப்படியெல்லாம் பேசக்கூடிய நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

அவரசச் சட்டத்தை, சட்டமன்றத்தில் நிறைவேற்ற போகிறோம் என்று டெல்லியில் சொன்ன முதலமைச்சர், சென்னை வந்ததும் நேராக மெரினாவுக்கு சென்று அங்கிருக்கக் கூடிய மாணவர்களை அழைத்து சொல்லியிருக்க வேண்டும். அவர்களுடைய பிரச்னைகள், சில சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தை இவர் சொல்லியிருந்தால் முழு மனதோடு ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால், அதை செய்யாமல் மறுநாள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி, அதில் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்செல்லாம் நடத்தி நிலைமை மோசமானவுடன், சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள். தேச விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலே, அமைதியாக ஒரு போராட்டம் நடந்தது என்று  சொன்னால் நம் தமிழ்நாட்டிலே மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய அறப்போராட்டம்தான். இந்தியாவில் எந்த மாநிலமும் இந்த நிலையினைக் கண்டிருக்க முடியாது. ஆனால், அப்படிப்பட்ட மாணவர்களை வாய் கூசாமல் சமூக விரோதிகள் என்று சொல்கிறார்களே?

ஓ.பி.எஸ். முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் மீது நான் மிகுந்த மரியாதை  கொண்டவன். ஜெயலலிதா மறைந்த உடன், கவர்னர் முன்னிலையில் பதவியேற்பு நடந்தது. ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் என்று சொல்லி அதன்பிறகு எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பதவி ஏற்ற அடுத்த நாள் எங்களுக்கு முதல்வர் இவரல்ல அவங்கதான் என்று கூறுவதை என்னவென்று சொல்வது? ஓ.பி.எஸ். என்ன செய்வார் பாவம். சசிகலாவையும் பகைக்க முடியவில்லை. மாநில அரசின் உரிமைக்காக மத்திய அரசிடமும் போராட முடியவில்லை. இந்த சூழ்நிலையிலே இப்படி ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்பதைத்தான் இன்றைக்கு வேதனையோடு பார்க்கிறோம்.

ஜல்லிக்கட்டுக்காக என்னுடைய தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மெரினாவில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் பலர் வந்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, "மாணவர்கள் போராட்டத்தை நினைவு கூறும் வகையிலும்,  ஜல்லிக்கட்டினுடைய நினைவாகவும் ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை சொன்னார்கள். நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் செய்ய வேண்டிய வேலை இது. எனவே, நீங்கள், எடுத்துவைத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலே நிச்சயமாக இந்த ஆட்சியாளர்களுக்கு நான் சுட்டிக்காட்டி அந்த  பிரச்சனையை எடுத்துச் சொல்வேன்," என்றேன்.

எனவே ஆட்சியாளர்கள் உடனடியாக அந்த நினைவுச் சின்னத்தை அதே மெரினாவிலே வைக்க வேண்டும். நீங்கள் வைக்கத் தவறினால் மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உருவாகிற நேரத்தில் அந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

- ச.ஜெ.ரவி.

படங்கள் : தி.விஜய்



Trending Articles

Sponsored