'கவர்னர் வரட்டும்னு காத்திருக்கோம்' - சசிகலா நேர்காணல்Sponsoredசட்டமன்ற அதிமுக  தலைவரும், பொதுச்செயலாளருமான சசிகலா தனது முதல் தொலைக்காட்சி நேர்காணலை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

அ..இ.அ.தி.மு.கவினுடைய சட்டமன்ற கட்சியினுடைய தலைவராக , அதாவது  தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்தவாரம் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இரண்டு மூன்று தினங்களுக்குள் மீண்டும் சட்டமன்ற கட்சி , எம்எல்ஏ கூட்டம் நடந்திருக்கிறது. ஒரு வார காலத்துக்குள் இரண்டு முறை கூட வேண்டிய அவசியம் என்ன?

Sponsored


திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், நேற்றைய தினம் ஒரு புது விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா சமாதியில் உட்கார்ந்து 'தியானம்' என்று சொல்லி... பிறகு அவர் அச்சுறுத்தப்பட்டு, என்னை சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது மாதிரி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல. அதற்கு எங்கள் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொதித்தெழுந்து போயஸ் இல்லம் நோக்கி வந்துவிட்டனர். அவர்களுடன் எங்கள் 25 அயிரம் கழகத் தொண்டர்களும் வீட்டு முன் வந்தனர். அதனால், ஒரு பொதுச்செயலாளராகிய நான் ' ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நம் இயக்கத்தை நல்ல வழியில் நடத்திச் செல்வேன். யாரும் கவலைப்பட வேண்டாம். அம்மா வழியில் இந்த இயக்கும் நன்றாக இருக்கும்' என்று சொல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து அவர்களின் மன உளைச்சலைப் போக்கி, அம்மாவின் அரசை நல்ல முறையில் , அம்மாவின் வழியில் நடத்தி மக்களுக்குத்  தொண்டு செய்வோம் என்பதைக் கூறிய பிறகே, அவர்கள் சென்றார்கள். அந்தச் சமயத்தில் வெளியில் இருந்த தொண்டர்களையும் சந்தித்துவிட்டு வந்தேன். எல்லோருக்கும் ஒரு அம்மாவாக ஆறுதல் சொல்லி, 'நான் இருக்கிறேன். அம்மா நம்மை வழி நடத்துவார்கள்' என்று சொன்னேன். எங்கள் கழக அலுவகத்துக்குச் சென்றேன். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வந்திருந்தார்கள். அனைவரிடமும் பேசினேன். நீங்கள்தான் எங்களை வழிநடத்தவேண்டும். இந்தப் பன்னீர் செல்வம் யார் என்று பேசினார்கள். இருக்கட்டும் பார்த்துக்கொள்வோம். காலம் பதில் சொல்லும் என்றேன். இதுதான் நடந்தது.

Sponsored


'நான் மிரட்டப்பட்டேன்' எனப் பன்னீர் செல்வம் சொல்லும் குற்றசாட்டில் உண்மை இல்லை என்கிறீர்களா?

நிச்சயமா உண்மை இல்லை. 5.2.17 அன்று மதியம் 2 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது. அந்த சமயத்தில் அவர் என்னுடன் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார். எல்லா தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். அந்த மாதிரி நிகழ்ச்சி அங்க ஒன்னும் நடக்கலை.அவர் ஏன் அப்படிச் சொன்னார்? அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம்.

அதற்கு முன்பு அவர் சொல்வது, 'சட்ட மன்றக் கூட்டதிற்கு போவதற்கு முன்னாள் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் நான் சம்மதித்தேன். மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்கிறேன் என்றேன் அதற்குக்கூட அனுமதிக்கவில்லை...'

அந்த மாதிரி எதையும் அவர் சொல்லலை. அவர் மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து எல்லோருமே தான் கழக அலுவலகத்திற்கு சென்றார்கள். இது கிட்டதட்ட 5 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி. அவர் இதைச் சொல்வது இரண்டு நாட்கள் கழித்து. இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது போகபோகத்தெரியும். 

ஆளும் கட்சி சார்பில் அடுத்த முதலமைச்சராக, சட்டமன்ற கட்சித் தலைவராக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்ததாகவோ, அதிமுக தரப்பில் இருந்து நீங்கள் 'ஆட்சி அமைக்க அழையுங்கள்'  என உரிமை கோரி கடிதம் கொடுத்ததாகவோ இதுவரை எந்தத் தகவல்களும் பொதுவெளியில் இல்லை. என்ன நடந்தது? நீங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினீர்களா இல்லையா?

5.2.17 அன்று மதியம் 2 மணிக்கு எங்கள் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் என்னை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு உண்டான ரெக்கார்ட்ஸ் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அதன் பிறகு அன்று மாலையே கவர்னர் அலுவலகத்திற்கு சென்றோம். கவர்னர் கேம்ப் போயிருக்கிறார், ஊட்டியில் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதனால், என்னை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்ததை ஊட்டியிலுள்ள கவர்னருக்கு 'ஃபேக்ஸ்' வழியாக தெரிவித்தோம்

சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களை ஆதரித்து கையெழுத்து போட்ட கடிதத்தைப் பார்த்து ஆளுநர் என்ன சொன்னார்?

அதன் பிறகு ஆளுநர் எந்த முடிவையும் சொல்லவில்லை. பின்னர், 7.2.17 அன்று மும்பையில் இருந்த ஆளுநருக்கு நினைவூட்டுக் கடிதம் அனுப்பினோம்.

நீங்கள் அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு , ஆளுநரோ அல்லது அவருடைய அதிகாரிகளோ எதனால் இந்தத் தாமதம் என அக்னாலெஜ்மெண்ட் கொடுத்தார்களா?

இதுவரை இல்லை...

அக்னாலெஜ்மண்ட் கூட கொடுக்கலையா..!

கொடுத்திருக்காங்க.

ஃபேக்ஸ் வந்தது என்கிற அக்னாலெஜ்மெண்ட் வந்தது. அழைப்பு சார்ந்த எந்த கருத்தும் வரவில்லையா..?

வரவில்லை.

பொதுவாக, பெரும்பான்மை பெற்றிருக்கும் கட்சி யாரை தேர்ந்தெடுக்கிறதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது வழக்கமான நடைமுறை. இதில் அசாதரணமான நடைமுறை பின்பற்றி, ஆட்சி அமைக்க அழைக்காமல் இருந்ததற்கு பின்னால் அரசியல் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

அப்படி எதுவும் நினைக்கவில்லை. ஆளுநரை பொறுத்தவரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து, ஜனநாயகத்தையும் பாதுகாப்பார் என்று நினைக்கிறேன்.

ஆளுநர் சட்டப்படி நடந்துக்கொள்வார், ஜனநாயகத்தை பாதுகாப்பர் என்று பாசிட்டிவான தொனியில் சொல்கிறீர்கள். ஆனால், ஒரு பெரும்பான்மை கட்சி தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்க இந்த காரணத்தினால் தான் தாமதமாகிறது, பொறுத்துக்கொள்ளுங்கள் என இத்தனை காலம் தாமதமாக பதில் சொல்லாமல் வேறு எந்த தகவலையும் சொல்லாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதே...   

எங்களை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோனோர்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நாங்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 'முதலமைச்சர், கட்சியின் பொருளாளர் கட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் ஓ.பிஎஸ் அவர்கள் துணையாக இருந்திருக்கிறார்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அவர் திடீரென இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பார் என எதிர்பார்த்தீர்களா?

சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டதொடரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது. தி.மு.க-வை சேர்ந்த துரைமுருகன் அவர்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ' மீதமுள்ள உள்ள ஆண்டுகளுக்கும் நீங்களே முதலமைச்சராக இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் துணை நிற்போம்' என்று கூறினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் 'நாங்கள் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு உங்கள் தயவு தேவையில்லை' என்ற பதிலை சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால், அதை அவர் சொல்லவில்லை. அன்றிலிருந்துதான் உண்மையாகவே என்னை முதலமைச்சராக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.

துரைமுருகன் அவர்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர். தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இணக்கமான சூழ்நிலை இருக்கவேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் பகைமைய பாராட்ட வேண்டாம், ஆக்கபூர்வாமாக பொதுவான பிரச்னைகளில் இணைந்து செயல்படலாம் என்ற நோக்கத்தில் சொல்லியிருக்கமாட்டாரா; ஏதோ அரசியல் நோக்கத்தோடு தான் சொல்லியிருப்பார் என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்?

திமுகவின் நிலைப்பாடு எப்போதுமே அதிமுகவை எதிர்ப்பது தான். ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த அம்மா அவர்களை சேலையை பிடித்து இழுத்தவர்கள் தான் இவர்கள். அவர்கள் எங்களுடைய எதிரிகட்சி தான். அவர்கள் இப்படி திடீரென ஒரு முடிவுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?  தேவையில்லையே. 

பன்னீர்செல்வத்தின் இந்த முடிவுக்கு பின்னால் திமுக தான் இருக்கிறது என்ற கருத்தை சொல்கிறீர்கள் அது சரியா? உங்கள் கட்சியில் நடக்கும் ஒரு பிரச்னைக்கு எதிர்கட்சியை குற்றம் சாட்டுவது, பழிசுமத்துவது என்பது எந்த வகையில் நியாயம்? 

ஸ்டாலின் அவர்கள் சொன்னதிலேயே நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் "ஓ.பி.எஸ். திரும்பவும் ஆட்சிக்கு வருவார் " என்ற தொணியில் பேசுகிறார். தி.மு.கவினருடையே போக்கே இவர் அ.இ.அ.தி.மு.க-விலுள்ள ஒரு முதலமைச்சர் என்றே அவர்கள் நினைக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையிலும் என்ன சொல்கிறார்கள்... 'உங்களை நாங்கள் ஆதரிப்போம்' என்று சொல்வதிலிருந்தே அவர்கள் தான் பன்னீர் செல்வத்தின் பின் நிற்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

திமுக இதில் என்ன முடிவு எடுக்கிறது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வது ஒருபக்கம். திரு.பன்னீர் செல்வம் அவர்கள் தன்னை அதிமுக முதலமைச்சராக பாவித்துக்கொண்டாரா என்பதை தான் நீங்கள் அடிப்படை அளவுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர் அப்படி இல்லை எனும் முடிவுக்கு ஏன் வருகிறீர்கள்?

ஒரு முதலமைச்சராக செயல்படுவது என்பதை சட்டமன்றத்தில் நடந்துக்கொள்ளும் விதத்திலிருந்தே நாம் புரிந்துக்கொள்ள முடியும். அம்மா முதலமைச்சராக இருந்தபோதும் பார்த்திருக்கிறேன். அவர் எப்படி நடந்துக்கொண்டார் என்பது நமக்கு தெரியும். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை, இந்த நான்கு நாட்கள் நடந்த கூட்டத்தில் இல்லை.

நீங்கள் முதலமைச்சராகும்போது சட்டமன்றம் எப்படி இருக்கும்?

நிச்சயமா அம்மா எப்படி செயல்பட்டாரோ, அதே வழியில் தான் நான் தொடர்வேன்.

திமுக, அதிமுக இரண்டும் காரசாரமான எதிர்கட்சிகள் என்ற நிலையே தொடரும் என்கிறீர்களா?

நிச்சயமாக...

ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் ஆக்கப்பூர்வமான இணக்கம் வேண்டுமென தமிழ்நாட்டில் சிலர் சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?

ஒரு கட்சி, இன்னொரு கட்சி என சொல்வதை விட, ஒரு கட்சி நம்மை நம்பி ஓட்டுபோட்ட பொதுமக்களுக்கு என்ன செய்கிறோம் என்பது தான். இதுவரையிலும் பார்த்தீர்கள் என்றால் காவிரி பிரச்னையாகட்டும், கெயில் பிரச்னையாகட்டும், கச்சதீவு பிரச்னையாகட்டும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதில் அழுத்தம் திருத்தமாக நின்றது அம்மாவின் அரசு. அதிமுக தான் அதை செய்திருக்கிறது. திமுகவை பொறுத்தவரை அது மாதிரி எதையுமே சொல்லமுடியாது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது மக்களுக்காக செயல்படும் அரசு ' தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் தோள் கொடுத்து நிற்கும் அரசு அதிமுக தான். அதன் அடிப்படையில் திமுகவை வெறுக்கிறோம். அம்மாவே பலமுறை என்னிடம் சொல்லியிருக்காங்க , 'பல முக்கியமான விசயத்தில் திமுக அட்சியில் இருந்தபோது மக்களுக்கு விரோதமான விஷயங்களை எதை பற்றியும் கவலைபடாம உள்ளே இருந்து செய்திருக்கிறார்கள். நான் அப்படி இல்லை.' என ஒவ்வொரு காலக்கட்டத்திலேயும் சட்டசபைக்கு போய் வரும்போதும்  என்னிடம் சொல்வாங்க. அப்போ, நாங்க எப்படி திமுகவை தோழமையா நினைப்போம். நினைக்கமுடியாதே... எங்களுடைய வியூவே வேறையா இருக்கு. அது தான் காரணம். இணக்கம்ங்கிறதுக்கு இங்கே வேலையே இல்லை. மக்களுக்கு செய்யகூடிய இடத்தில் இருக்கும்போது நாங்களே செய்கிறோம். இவர்களே தேவையே இல்லையே. இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு எதுவும் செய்தார்களா? அதை தான் நீங்கள் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் மனதில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் பேசப்படுவது மறைந்த முதல்மைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் பற்றி தான் . அது தொடர்பாக சமூக வலைதலங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்கள்,கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரிச்சர்ட் பீலே மற்றும் அவர்கள் குழுவை சேர்ந்தவர்கள் சிலர் விளக்கங்களை தந்திருக்கிறார்கள். அது எந்தளவு மக்களை திருப்தி படுத்தியிருக்குனு தெரியலை, இந்த நிலையில் 'இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.சிகிச்சை சமயத்தில் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்று  ஓ.பிஎஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாக உங்களது பதில் என்ன?

அம்மாவுடன் 33 ஆண்டுகளாக இந்த வீட்டில் இருந்திருக்கிறேன். அவரை எப்படி பார்த்துக்கொள்வேன் என்பது எங்கள் வீட்டில் உள்ள வேலையாட்களுக்கு தெரியும், தொண்டர்களுக்கும் தெரியும். இந்த சமயத்தில் இந்த மாதிரி கருத்துகள் வெளியில் வருவதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான கருத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு உள்ளனர். என்னை பொறுத்தவரை 75 நாட்கள் மருத்துவமனையில் நான் இருந்தபோது, நான் எப்படி பார்த்துக்கொண்டேன் என்பது அங்குள்ள மருத்துவர்கள், வேலை செய்த செவிலியர்கள் எல்லோருக்கும் தெரியும். வெளியில் சொல்வதை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. என் மனசாட்சிபடி.. எனக்கு தெரியும். அவரை பிரிந்து அந்த வேதனை அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஒவ்வொரு நிமிடமும் ( கண் கலங்குகிறார்... ) எப்படி பார்த்துக்கிட்டேன் என்பதை நான் வெளியே சொல்லவேண்டும் என்பதை நினைக்கவில்லை. எனக்கு திமுக காரர்கள் பரப்பிவிடும் செய்திகளை பற்றி கவலையில்லை. இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பி.எஸ் விசாரணை கமிஷன் போடவேண்டும் என சொல்கிறார். அதை நினைத்து தான் நான் வருத்தப்பட்டேன். இவ்வளவு பச்சை துரோகியா இருந்திருக்கிறாரே! என்று நினத்து வருத்தப்பட்டேனே தவிர, அம்மாவினுடைய ட்ரீட்மெண்ட் பொறுத்தவரைக்கும் அது ஒரு திறந்த புத்தகம் மாதிரி தான்.  அங்கு ஒரு டாக்டர் இரண்டு டாக்டர் இல்லை... எய்மிஸில் இருந்து வந்திருந்தார்கள் அது மத்திய அரசு கன்ட்ரோலில் உள்ள மருத்துவமனை. எங்களுக்கு மனதில் பயமில்லை. அதனால், அங்கிருந்தே நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம். லண்டன் டாக்டர் வந்தார், சிங்கப்பூரில் இருந்து பிசியோ தெரபிஸ்ட் வந்தார்கள். அன்று மதியம் கூட தொடர்ந்து பிசியோதெரபி கொடுத்தோம். அப்போது டிவி கூட பார்ப்பார்கள். ஹனுமான் சீரியல், பழைய பாடல்கள் சிடி போட்டு காமிச்சுட்டு தான் இருக்கோம், பார்த்துட்டு தான் இருந்தாங்க. அந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டிற்கு அழைத்துவந்து விடலாம் என்று தான் இருந்தேன். இந்த மாதிரி இருக்கும்போது திடீர்னு ஒருத்தர்  சொல்லும்போது இவர் அரசியலில் விலை போயிட்டார் என்பதை நினைத்து தான் வருத்தப்பட்டேன். அம்மா இறப்புக்கு பிறகு அவர் கட்சியை, அதனால் அடையாளம் காட்டபட்ட ஓ.பிஎஸ் கொச்சை படுத்துறாரே, அது அம்மாவுக்கு செய்யும் துரோகம் இல்லையா. அந்த மனவேதனை தான் எனக்கு.

ஜெயலலிதா அவர்களுடைய மரணம், மரணத்துக்கு முந்தைய சிகிச்சைகள். அவர்களது பிரிவு எந்தளவு துயரத்தை தந்தது என்பதை சொல்கிறீர்கள். மக்கள் மனதில் உள்ள சந்தேகத்தை போக்கவேண்டும், கட்சிகாரர்களுக்கு இதுபற்றிய விளக்கத்தை தரவேண்டும் என்றார் முழுமையாக சொல்லக்கூடிய ஒருவர் நீங்களாக தான் இருக்க முடியம். ஜெயலலிதா அவர்கள் தாமதமாக அட்மிட் செய்யபட்டார்கள் என்பதிலிருந்து தொடங்கி...

( கேள்வியை முடிப்பதற்குள்.. ) இல்லை...அது தவறான செய்தி. அங்கே இருந்த டி.எஸ்.பியை தான் நான் முதலில் கூப்பிட்டேன். உதவி பண்ணுங்க என்றேன். அங்கே இருந்த மருத்துவர்கள் எல்லோரும் 'ரொம்ப சீக்கிரம் கொண்டுவந்துட்டீங்க...' என்றார்கள். 'சரியான நேரத்தில் கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டீங்க. லேட் பண்ணாம வந்துட்டீங்க.  அதனால பிரச்னை இல்லை' என்றனர். 

எந்த விசாரணைக்கும் தயார் என்கிறீர்கள்..?

எந்த கவலையும் இல்லை. என்னை பொறுத்தவரை என்னுடைய சகோதரிக்கு நான் ( மறுபடியும் கண் கலங்குகிறார் )... அவர்களுக்கு தெரியும். நான் அவரை எப்படி பார்த்துக்கொண்டேன் என்பது அவருக்கு தெரியும். அங்கிருந்த மருத்துவர்களுக்கு தெரியும்.

தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள, உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழல் இப்போது உள்ளது. ஒருவார காலத்திற்குள் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது, தீர்ப்புக்கும் பதவியேற்பு தேதி தள்ளிப்போவதற்கும் முடிச்சு இருப்பதாக பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இந்த தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

நீதிமன்றஙளை மதிக்கிறேன். ஒரு வழக்கு நிலுவையில் உள்ள சமயத்தில் அதை பற்றி கருத்து சொல்வது சரியில்லை என நினைக்கிறேன்.

பழைய பல நெருக்கடிகள் உங்களை சூழ்ந்திருப்பது தெரிகிறது. பல சவால்கள் உங்களை காத்திருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்பேன். வி.கே.சசிகலா எனும் நான்... என ஆளுநரால் உச்சரிக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்பேன் என உங்களால் சொல்லமுடியுமா?

உறுதியாக சொல்வேன். நிச்சயமாக முதலமைச்சராக பதவியேற்பேன். அம்மாவின் ஆசியோடு அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென நினைத்தாரோ அந்த வழியில் நான் செயல்படுவேன்.Trending Articles

Sponsored