"யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ அவர்கள் எல்லாம் இன்று இனிப்பு கொடுக்கிறார்கள்." - இது ஸ்டாலின் பஞ்ச்.Sponsoredதமிழக எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் , கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசும்போது, "சசிகலாதான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஒரு அணி சொல்லிக் கொண்டிருந்தது. இன்று அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக குற்றவாளிகளைத்தான் முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வருகிறது. நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த வரலாற்று சிறப்புக்குரிய தீர்ப்பு நியாயமானது தான் என்று தீர்ப்பாகி, கடந்த 21 வருடங்களாக நடந்த வழக்கு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியான போது அதனை திமுகவின் சதி என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, காவடி எடுத்தார்கள், அலகு குத்திக்கொண்டு, மொட்டையடித்து, தாடி வளர்த்துக் கொண்டு, திமுக மீதும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்று  யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிப்பு கொடுக்கிறார்கள். பட்டாசு வெடிக்கிறார்கள். வழக்கு போட்டது இப்போது எதிர் கட்சியாக உள்ள திமுக. இந்த தீர்ப்பில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் கூட அதை கொண்டாடவில்லை. ஆனால் அ.தி.மு.கவினர் இதை பெரிதாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதுதான் வேடிக்கையாக உள்ளது" என்றவர் கூவத்தூரில் போடப்பட்ட 144 தடை உத்தரவின் மீதும் தனது கருத்தைச்  சொன்னார்.  மேலும், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெறும் அறிவிப்புகள் மட்டும் தான் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்சியில் கூவத்தூர் பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டு, இதுவே வாடிக்கையாகி விட்டது. இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored