'தமிழக அரசியல் குறித்து அமைதி காப்பேன்' - மார்கண்டேய கட்ஜூமுன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ "தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக சசிகலாவை அனுமதிக்க வேண்டும்" என சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து, மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் எனது வாழ்க்கையைப் பெரும்பாலும் உத்திரபிரதேசத்தில் கழித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் எனது தாய்வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களில் ஒருவனாக என்னை அங்கீகரித்துள்ளனர். அவர்கள் என் மீது வைத்துள்ள பாசம் எவ்வகையிலும் நீர்த்துப் போவது எனக்கு வேதனையைத்தான் தரும். அதனால், தமிழக மக்கள் மத்தியில் தவறான புரிதலுக்கு வாய்ப்பளித்து விடக்கூடும் என்பதால் தமிழ் நாட்டின் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இனி கருத்து சொல்வதில்லை என தீர்மானித்திருக்கிறேன். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில், "சசிகலா ஆட்சி அமைக்க வாய்ப்பளித்து, ஆறுமாத காலம் கழித்து தான் அவர் மீதான அதிருப்தியையும், விமர்சனங்களையும் தமிழக மக்கள் சொல்ல வேண்டும் என நான் சொன்னேன். இதே போன்ற கருத்தை உத்திரப்பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி ஏற்பது தொடர்பான சர்ச்சையின் போதும் நான் சொல்லியிருந்தேன். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் குறித்து நான் தெரிவித்த கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டு என்னை சசிகலாவின் ஆதரவாளர் என விமர்சித்தனர். ஆனால், உண்மையிலேயே சசிகலாவை எனக்கு தெரியாது, அவரை நான் சந்தித்ததும் இல்லை. வேறு யாராவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவதாக இருந்தாலும் இதே ஆலோசனையைதான் சொல்லியிருப்பேன். எனவே, தமிழக அரசியல் தொடர்பாக நான் தெரிவிக்கும் கருத்து தமிழர்களால் தவறாக ஏற்று கொள்ளப்படும் என்பதை அறிந்து இனி தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமைதி காப்பது என முடிவு எடுத்துள்ளேன்" என தனது முகநூல் பக்கத்தில் மார்கண்டேய கட்ஜூ உருக்கமாக தெரிவித்துள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored