அரசியல்வாதிகளின் அகா ஜுகா அட்ராசிட்டிகள்!Sponsoredபிரிக்க முடியாதது எது? என்று 'திருவிளையாடல்' நாகேஷ் போலக் கேள்வி கேட்டால், 'அரசியல்வாதிகளும் அவங்க அட்ராசிட்டியும்' என்று கூறிவிடலாம். எவ்வளவுதான் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் போன், லொட்டு லொசுக்கு என உலகம் பிச்சுக்கிட்டு ஓடினாலும், அதே சுதி, அதே லயம் எனத் தமிழக அரசியல்வாதிகள் டெம்போ மாறாமல் வலம் வருகிறார்கள். 

* ஆதிகாலம் தொட்டு மேடைகளில் மைக் புடிக்கும் அரசியல்வாதிகள், டி.வி நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் 'பெரியோர்களே, தாய்மார்களே' என ஆரம்பிப்பதை உலகமே அழிஞ்சுபோனாலும் விடாமல் கட்டிக்கிட்டு அழுகிறார்கள். ஏன் இளைஞர்கள், இளைஞிகள், சிறுவர், சிறுமிகள் எல்லாம் உங்க வாய்க்குள் வரவே வராதா? அதுகூடப் பரவாயில்லை. 

Sponsored


* ஏதோ ஒரு இனா ஊனா கட்சியில், வட்டச் செயலாளராகவோ, சதுரச் செயலாளராகவோ இருக்கிறதால, வெளியில் கிளம்பினாலே கஞ்சியில் முக்கியெடுத்து அயர்ன் பண்ண வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை சகிதமாதான் நடப்பேன்னு அடம்பிடிப்பார்கள். 

Sponsored


* வீட்டுல அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாட்டமா இருக்கும். ஆனால், கந்துவட்டிக்குக் கடன் வாங்கியாவது நாலைந்து ஜோடி வேட்டி, சட்டைகளை எடுத்து வெச்சுக்கிட்டு வேட்டி விளம்பரத்துல வேட்டி, சட்டையோட வரும் பிரபு கணக்காக தினமும் ஒண்ணை மாட்டிக்கிட்டு... ஏன் கோவிந்து ஏன்?.

* கட்சியில் அஞ்சாவது கட்டத் தலைவராகக்கூட இருக்க மாட்டார். ஆனால், பத்துப் பேரை அல்லக்கைகளா மாற்றிக் கூடவே கூட்டிட்டுப் போவார்கள். 'லைட் எரியலையா, குழாய்ல தண்ணி வரலையா'னு ஏரியா மக்களை அக்கறையா விசாரிப்பார்கள்தான். ஆனால், ஆறு மாசமா அவர் வீட்டுக்குப் பக்கத்துலேயே அந்தப் பிரச்னைகள் இருப்பதை தெரிந்தவருக்கு, எப்படித் தண்ணீர் கொடுக்க முடியும், லைட் எரிய வைக்க முடியும்?. எல்லாம் டக்ளுபாஸூ வேலைதான்.

* அவர் ஏரியாவில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகமோ, அரசுப்பள்ளித் திறப்பு விழாவோ நடக்கும். அதுக்கு சல்லிப்பைசா தந்திருக்க மாட்டார். ஆனால், விழாவை இவர்தான் நடத்துபவர்போல தனது பசங்களை (அதே பத்துப் பேர்தான்) ஏவிவிட்டு முக்குக்கு முக்கு ஃப்ளெக்ஸ் போர்டுகளை வெச்சு, சிங்கத்தைத் தடவிக் கொடுக்கிற மாதிரியும், ராஜநடை நடந்து வர்ற மாதிரி ஃபுல் ஸ்டாண்டிங் ஸ்டில்ஸைப் போட்டும்... கொடுக்கிற அலப்பறை இருக்கே? மிடியலை!

* தவிர, அதே ஃப்ளெக்ஸில் 'பாழடைந்த கோயிலைப் பழுது பார்த்து கும்பாபிஷேகம் பண்ணும் ஆன்மிகச் செம்மலே', 'ஏழைகளின் கல்விக்கண் திறந்த இரண்டாம் காமராஜரே' னு  பார்க்கிறவங்க கண்ணுல கண்ணீர் கரகரனு ஊத்துற அளவுக்கு அள்ளி விட்டிருப்பார். வேணாம், அழுதுருவேன்.

* 'பேங்குல லோன் கேட்டேன். துரத்தி விடுறான். நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா...' என்று இழுக்கும் நபரை, அதே பத்து பேர் இழுத்துப்போட்டு அமுக்கி, 'அண்ணனுக்கு போன்ல முடியற விஷயம் இது. ஒரு நிமிடத்துல முடிச்சுடுவார். வெயிட்டா கவனிங்க'னு காலரைத் தூக்குவார்கள். கார்ப்பரேஷன் கக்கூஸ்ல ஒண்ணுக்கு போறதுக்குக்கூட இவரோட சிபாரிசு செல்லாதுங்கிற உண்மை தெரியாமலேயே அந்த அப்பாவியும் சில பல ஆயிரம் ரூபாய்களை இழந்திருப்பார். 'கோவணம் போச்சே கோவாலு' கதைதான்! 

* ஏரியாவுல அடிச்சாம் பிடிச்சான் கேஸூ, குழாயடிச் சண்டைகள்னு போலீஸ் ஸ்டேஷன் சிபாரிசுக்குத் தலீவரை நம்பி யாராச்சும் வருவாங்க. முந்தைய விஷயத்தில் அடிமையாகச் சிக்கிய ஆசாமியைப்போல இவர்களையும் அமுக்கிப் பணத்தைப் பறிச்சு ஏப்பம் விடுவார் தங்கத் தலீவர். 'இந்தா சொல்றேன் அந்தா சொல்றேன்'னு சமாளிப்பாரே தவிர, கடைசிவரைக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு யாருக்காகவும் தலீவர் சிபாரிசுக்குப் போன சரித்திரம் இருக்காது. 

* தலீவரின் அடிபொடிகள் பெட்டிக்கடை தொடங்கி டாஸ்மாக் வரைக்கும் நீக்கமற நிறைந்து ஆக்கிரமிப்பார்கள். கடன் சொல்லியும், அடுத்து தரேன்னு சொல்லியும், காந்திக் கணக்கை ஏற்றிவிடுவாங்க. மகாபிரபு நீங்க இங்கேயுமா வந்தீங்க.

* இப்படி எக்காலமும் மாறாத அந்த அரசியல்வாதிகளின் முக்கால டேட்டாக்களையும் முழுசா சொல்ல ஆரம்பிச்சா, மகளிரணி தலைவியிடம் போனமாசம் பேட்டா செருப்பால அடிவாங்கின கதைவரை வந்து நிற்கும். ஆனால், அதையும் நம்ம கரைவேட்டி பார்ட்டிங்க, 'அது போன மாசம். இது இந்த மாசம்'னு வடிவேலு பாணியில பன்ச் பேசிட்டு, மறுபடியும் முதல்ல இருந்து வருவாங்க. 

- துரை.வேம்பையன்Trending Articles

Sponsored