'சமுதாய பலத்தைக் கூட்டுங்கள்!' டி.டி.வி.தினகரனின் வியூகம்Sponsored                            

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா என்ற மிகப்பெரும் தலைமைகளின் காலத்திற்குப் பிறகு கடும் சரிவையும் நெருக்கடியையும் சந்தித்துள்ள அ.தி.மு.கவில்,கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும்போதே மூன்று முறை முதல்வர்கள் மாறியுள்ளதை மிகுந்த கவலையோடு அக்கட்சியின் சீனியர்கள் கவனித்து வருகிறார்கள்.ஜெயலலிதா மறைவு பெரும் இழப்பு என்றாலும் அடுத்தடுத்து கட்சியில் நடந்த பிளவு, பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்குள் சென்றது, சட்டசபையில் முதல்வரின் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பு என்று பலகட்ட திருப்பங்கள் கட்சிக்கு ஆரோக்கியமானதா அல்லது எதிர்விளைவுகளை ஏற்படுத்துமா என்று, கட்சியினர் தங்களுக்குள் விவாதங்கள் நடத்தி வருகிறார்கள்.

Sponsored


இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு போயஸ் கார்டன் வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் நூற்றுக்கணக்கானோர் பூச்செண்டு கொடுத்து முதல்வருக்கும்,தினகரனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Sponsored


மாலை 4.50 மணிக்குத் தொடங்கிய இந்த வாழ்த்துப் படலம் ஏழு மணிவரை நீண்டது.முதல்வர் 6 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து தமது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகும் தினகரனைச் சந்தித்து வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டிருந்தனர் அ.தி.மு.க. பிரமுகர்கள்.

ஜெயலலிதா இல்லாத, அவரின் உடன்பிறவா சகோதரி சசிகலா இல்லாத போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் பழனிசாமி, தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் என்னதான் பேசப்பட்டது, இறுதி முடிவு எடுக்கப்பட்டது என்று உள்ளே இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழனிடம் விசாரித்தோம்.

                 

அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் விருப்பப்படி தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் ஏகப்பட்ட உள்ளடிகள் நடந்து வந்தன. அதெல்லாம் இன்றோடு முடிந்து விட்டது. இந்த நேரத்தில் லாபம் அடைய நினைத்த தி.மு.க.தோல்வியையே சந்தித்துள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பேசியதன் மூலம் அவர் தி.மு.க. விடம் விலைபோய்விட்டார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரே அவரின் நிலையைத் தாழ்த்திக்கொண்டார். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான். கட்சிக்கு தி.மு.க. செய்த துரோகங்களை, மக்களிடம் கொண்டுசெல்வோம். அதை எப்படி செய்யவேண்டும் என்பதை தலைமை சொல்லும். இது தொடர்பாகத்தான் ஆலோசிக்கப்பட்டுள்ளது."என்று தெரிவித்தார்.

கார்டனின் அடுத்தக்கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்று அங்கிருந்த பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிமுத்துவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "தென் மாவட்டத்தில் அ.தி.மு.க. பலத்தைப் பெருக்குவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதில் எங்களைப் போன்ற கூட்டணிக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவர் சமுதாய மக்களின் முழு ஆதரவையும் அ.தி.மு.க.பெற்று அடுத்து வரும் தேர்தல்களிலும் வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

                

ஓ.பி.எஸ்.இல்லாத நிலையில், முக்குலத்தோர் ஆதரவு முழுமையாக அ.தி.மு.கவுக்கு வந்துவிட வேண்டும் என்றும் அதில் குறைவு வந்துவிடக் கூடாது என்றும் டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செயல்படவுள்ளோம். வரும் திங்கள் அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க செல்கிறோம். அவருடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம். அதன் பிறகு களத்தில் இறங்குவோம்."என்றார் உறுதியாக.

- சி.தேவராஜன் Trending Articles

Sponsored