'ஸ்டாலின் புகார் எதிரொலி'!காங்.தலைவர் திருநாவுக்கரசர் மாற்றம்?               

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்து வலுவான புகார் அளித்துள்ளார்.இதனால் அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Sponsored


இது குறித்து சத்திய மூர்த்தி பவன் தரப்பினர் நம்மிடம் கூறுகையில்,"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட நாள் முதலே அவரின் அ.தி.மு.க. சார்பு நிலை தெளிவாகத் தெரிந்தது.அப்போதே கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமையிடம் தெரிவித்தார்கள்.ஆனால் அது எடுபடவில்லை.இந்த நிலையில்,ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியல் சூழல் குழப்பமான நிலையில் இருந்தது.அது இப்போதும் தொடருகிறது.இந்த நேரங்களில் தற்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவில்லை.

Sponsored


மாறாக முந்தைய தலைவர்கள் நியமித்த மாவட்ட தலைவர்களை மாற்றுவதிலும், அ.தி.மு.க.சார்பை அடிக்கடி வெளிப்படுத்துவதிலும் நோக்கமாக இருக்கிறார்.இந்த நிலையில்,கடந்த 3 நாட்களாக  அவர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.தலைவர் சோனியா காந்தியையும்,துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.ஆனால் அது கிடைக்கவில்லை.அதனையடுத்துத் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். ஆனால் எந்த முக்கிய முடிவும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் அறிவிக்க முடியும் என்று முகுல் வாஸ்னிக் அவரிடம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.

Sponsored


                  

அதே நேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,தலைவர் சோனியாவையும் துணைத் தலைவர் ராகுலையும் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக காங்கிரஸ் நிலையை அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசர் அ.தி.மு.க. சார்பாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து எப்படி தேர்தல்களைச் சந்திப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.அதனை அவர்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும்,ஸ்டாலின் திருநாவுக்கரசர் அண்மைக்காலமாக வெளியிட்ட அறிக்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு புத்தக வடிவில்,டெல்லி தலைமையிடம் அளித்துள்ளார்.உ.பி. மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகக் காங்கிரஸ் தலைவராக,முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,தங்கபாலு உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பட்டியலில் உள்ளன என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

- சி.தேவராஜன்.  Trending Articles

Sponsored