ஜெ.தீபா என்கிற குட்டியம்மாவுக்கு..! - அப்பாவித் தமிழனின் மனம்திறந்த மடல்Sponsoredளையப் புரட்சித் தலைவியாகிய ஜெ.தீபா என்ற குட்டியம்மாவுக்கு! என்னம்மா ஆச்சு உங்களுக்கு? நீங்க யாரும்மா எங்களுக்கு?  திடீர்னு அப்போலோ வாசல் முன்னால புத்தாட்டம் முளைச்சீங்க. உள்ளே விடலைனு சொல்லி மன்னார்குடியை முறைச்சீங்க! பின்னால் அறிவிப்பேன் பின்னால் அறிவிப்பேன்னு வாயால வகையா வடை சுட்டீங்க... பின்னால திரும்பிப் பார்த்து சுளுக்கு வந்ததுதான் மிச்சம். பாவம் நாங்கள்லாம்! அப்போலோ வாசல்ல கூட்டமே இல்லாம தனிமரமா நின்னீங்க.அதுக்காக இப்போ ஏன் ஆளே இல்லாத கடையில நீங்க மட்டும் டீயை ஆத்துறீங்க? என்னம்மா ஆச்சு உங்களுக்கு? நீங்க யாரும்மா எங்களுக்கு?

போரடிச்ச ஒரு ஞாயித்துக்கிழமை தி.நகர்ல இருக்குற உங்க வீட்டை கிராஸ் பண்ணப்போ அப்படியே ஷாக் ஆகிட்டேன். உங்க வீட்டுக்கு முன்னாடி நிற்கிற தொண்டர்கள் எல்லாம் ஸோம்பிக்கள் மாதிரி வினோதமா தெரியறது எனக்கு மட்டும்தானா..? நீங்க அரசியலுக்கு வாங்க... வந்தும் காணாமப் போங்க. அது இல்லைமா பிரச்னை. ஆனால், ராஜஸ்தான்ல இருந்து வட்டித் தொழில் பண்ண வந்த  பஜன்லால் சேட்டு வீட்டு ஆன்ட்டி போலவே மீடியாகிட்ட ஒரு வாய்ஸ் மாடுலேஷன்ல பேசுறீங்களே..! அது பயங்கரம்மா.  `எங்கள் உழைப்பும் நற்பணிகளும் தமிழக மக்களுக்காக மட்டுமே இருக்கும்'னு மைக் பிடிச்சு பால்கனியில நின்னுக்கிட்டு சொல்றீங்களே... அட்லீஸ்ட் பால்கனியில இருந்து கை ஆட்டுறதை மட்டுமாச்சும் நிறுத்துங்கம்மா.  என்ன கேள்வி கேட்டாலும்  'விரைவில் அறிவிப்பேன், அடுத்த வியாழக்கிழமை 6 மணிக்கு அறிவிப்பேன்'னு சொல்றதெல்லாம் ஓவர் மா. போறபோக்கைப் பார்த்தா, `வணக்கம்... எப்படி இருக்கீங்க?னு மீடியா உங்ககிட்ட கேட்டாக்கூட, `அடுத்த வாரம் மாலை 6 மணிக்குதான் அதிகாரபூர்வமா சொல்லுவேன்!'னு சொன்னாலும் சொல்வீங்க. ஆமா, காலையில பத்து மணிக்கு முன்னாடிலாம் எதையுமே சொல்ல மாட்டீங்களா?  இதுகூட ரைட்டுதாம்மா.

Sponsored


அறிவிக்கும்போது கொஞ்சமாச்சும் கூட்டத்தைக் காட்டுங்கம்மா. கூட்டத்தை ஈர்க்கிறதுனா ஜெயலலிதா போலவே ஒரே நாள்ல கெட்-அப்பை மாத்துறதுல இல்லைமா... அதைச் சின்னம்மா ஏற்கெனவே செஞ்சு சூடு பட்டு இப்போ பரப்பன அக்ரஹாரத்துல உட்கார்ந்திருக்காங்க. பேட்டினு வந்துட்டா மொக்கையா பேசுறதை தயவுசெஞ்சு நிறுத்துங்கம்மா. இப்படித்தான்மா ஒரு நிருபர் உங்ககிட்ட,`ஓ.பி.எஸ் அணிக்கிட்ட முதல்வர் வேட்பாளரா உங்களை நிறுத்தணும்னு சொன்னீங்களாமே?'ன்னு கேட்டார். நியாயமா நீங்க என்ன பதில் சொல்லி இருக்கணும். 'ஆமா', 'இல்லை'னு தானே..? நீங்க அதுக்கு என்ன பதில் சொன்னீங்கனு ஞாபகம் இருக்கா? `அதை நீங்கள்தான் ஓ.பி.எஸ்ஸிடம் கேட்க வேண்டும்'. - இப்பிடி ஒரு பதிலை எங்காவது கேட்டதுண்டா அம்மா? எப்படிம்மா இப்படி?

Sponsored


`அ.தி.மு.க-வை ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்பேன்'னு நீங்க சூளுரைங்க... சூலம் எடுத்து யாரையாச்சும் குத்துங்க. ஆனால், ஒரே ஒரு கேள்வி மனசுக்குள்ள குடையுது அம்மா. நீங்க ஜெயலலிதா அம்மையாருக்கு என்ன உறவும்மா? ஆனாலும் ஒரே ஒரு ஆறுதல் பேரவைக் கொடியில் உங்கள் போட்டோவைப் போட்டுக்கொள்ளவில்லை. இல்லை என்றால் டர்ராகி டரியலாகி இருப்போம். 

அப்புறம் அடிக்கடி `என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது'னு சொல்றீங்களே. ஆமா, நீங்க எப்போ அரசியலுக்கு வந்தீங்க அம்மா? உங்க மூஞ்சியை முழுசாக்கூட நாங்க இன்னும் பார்க்கலையே... அப்புறம், அந்த சதிகாரர்கள் யாருன்னு பட்டுனு தேங்கா உடைச்ச மாதிரி ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க? அடப் போங்கம்மா! 

அடிக்கடி சில ஊடகங்கள் 'ஜெ.தீபா ஆலோசனை', 'பரபரப்பு பேட்டி'ன்னு கிளப்பி விடுறாங்க. அவங்களால பரபரப்புக்கு உண்டான மரியாதையே போச்சும்மா. எனக்கு டவுட்டு என்னன்னா உங்க பேரவையில இப்போ மொத்தமா எத்தனைப் பேர் இருக்காங்க? யார்கூடல்லாம் ஆலோசனை செய்றீங்க? `மரியாதை நிமித்தமான சந்திப்பு'னு சொல்லிட்டு ஓ.பி.எஸ்ஸை மீட் பண்ணீங்களே... இன்னும் அந்த மரியாதை அப்படியே இருக்கா? - இவ்ளோதான்மா. சொல்லுங்கம்மா சொல்லுங்க!

முக்கியமா பேரவைக்கு பேரை வைங்கம்மான்னா என்னத்தையோ ஏன்மா வெச்சீங்க? MGR-AMMA-DEEPA PERAVAI (MAD PERAVAI) 'MAD'னா முட்டாள்னு அர்த்தம் வருதுனு கூடவா யாரும் உங்ககிட்ட சொல்லலை? 

அப்புறம், உங்க வீட்டுப்பக்கம் நின்னு சுண்டல் வாங்கித் தின்னப்போ `எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை 146-வது வட்டம்'னு துண்டுப் பிரசுரம் பார்த்தேன். அவ்ளோ வட்டம்லாம் உங்க பேரவையில இருக்கா? இல்லை சும்மா டகால்டியா? நேத்துவரைக்கும் தீபானு போஸ்டரைப் பார்த்தோம். இப்ப திடீர்னு ஜெ.தீபானு போட்டு மாதவனைக் கண்டுக்காம விட்டுட்டீங்களேம்மா.

பாவம் அவருக்கே தெரியாம 'பொருப்பாளர்களை' (அப்படித்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு அறிக்கை விட்டீங்க) நியமிச்சதுல அதிருப்தியில இருக்காராம். உங்க கணவரே அதிருப்தியில இருக்கார்னா நாங்கள்லாம் எவ்ளோ கோபமா இருப்போம்னு யோசிங்கம்மா. யோசிச்சு நல்ல முடிவா எடுங்கம்மா!

இப்படிக்கு,
அப்பாவித் தமிழன். Trending Articles

Sponsored