முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது சோடா பாட்டில் வீச்சு



விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் தி.மு.க பொதுக்கூட்ட மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது சோடா பாட்டில் மற்றும் கற்கள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sponsored


தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளை தமிழகம் முழுக்க அதன் தொண்டர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் ‘இளைஞர் எழுச்சிநாள்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழா மேடையில் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை முருகன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ ராதாமணி அமர்ந்திருக்க, கட்சி நிர்வாகிகள் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.

Sponsored


இரவு 9 மணியளவில் மேடைக்கு அருகில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வந்த வாலிபர் தன் கையில் வைத்திருந்த கல்லை முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வீசினார். அந்தக் கல் பொன்முடிக்கு அருகில் நின்று கொண்டிருந்த கட்சியின் நிர்வாகி பூபதி என்பவரின் முகத்தில் பட்டதால் அவரது பற்கள் உடைந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்ததும் மேடையில் அமர்ந்திருந்த துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் மீண்டும் அந்த வாலிபர் தன் கையில் வைத்திருந்த சோடா பாட்டிலை வீசி எறிந்தார். பொன்முடி சுதாரித்ததால் அந்த பாட்டில் அவரது காலுக்கு அருகில் சென்று விழுந்தது.

Sponsored


அதற்குள் அங்கிருந்த தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை கைது செய்த காவல்துறை அவர் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்ததோடு, படுகாயமடைந்த கட்சி நிர்வாகி பூபதி  மருத்துமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது என்று தெரிவித்தார்கள்.

- ஜெ.முருகன்



Trending Articles

Sponsored