'நாட்டு மாடுகளைப் பாதுகாக்க அரசு உறுதி' : பட்ஜெட்டில் எதிரொலித்த ஜல்லிக்கட்டு போராட்டம் Sponsored                  

ல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், பெண்கள் நடத்திய தொடர் போராட்டம் தமிழக அரசியலில் பெரிய அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் அதிர்வலைகளை தமிழக சட்டசபையில் நேற்று (வியாழன்) மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையிலும் காண முடிந்தது.

தமிழகத்தில் உள்ள நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் அதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் 2017-2018-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sponsored


அமைச்சர் ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையில்,"தமிழகத்தில் உள்ள நாட்டு மரபின மாடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி ஆகிய இன மாடுகளுக்கான இனப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசு கூடுதலாக நிதிஉதவி வழங்குவதுடன், புலிகுளம், ஆலம்பாடி போன்ற இதர உள்ளூர் இனங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

Sponsored


2017-18-ம் ஆண்டில் 25 கால்நடை கிளை மையங்கள் தரம் உயர்த்தப்படும். புதியதாக 25 கால்நடை கிளை மையங்களும் அமைக்கப்படும். மதுரையில், 40 கோடி செலவில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுத் திறன் கொண்ட நறுமண பால் தயாரிக்கும் மற்றும் புதிய உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

நாட்டு மாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், அவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கார்த்திக்கேய சிவசேனாதிபதியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "நிச்சயமாக வரவேற்கிறோம். இதை முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழக அரசு சார்பில் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த அறிவிப்பை மாணவர்களின் போராட்டத்துக்கு சமர்ப்பிக்கிறோம். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கும் நாட்டு மாடுகளைக் காக்கவும் போராடியதன் விளைவே அரசின் இந்த அறிவிப்புக்கு காரணம். இது விவசாயிகளின் பிரச்னையாக இருந்தது. அதை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்கள் பிரச்னையாக மாறி, நாட்டு மாடுகளைப் பாதுகாக்க போராடினால் அரசு உட்பட எல்லோரின் ஆதரவும் கிடைக்கும் என்ற நிலை உருவாகியது. அதனால் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

                      

பட்ஜெட் அறிவிப்போடு நிற்காமல் தமிழக அரசு நாட்டு மாடுகளின் சாணம், கோமியத்தைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் அளவில் மாநில அரசு 'ஆர்கானிக் பார்மிங்' திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வரவேண்டும். உம்பளச்சேரி நாட்டு மாடு இனத்துக்கு நாகப்பட்டின மாவட்டத்தில் கொற்கை என்ற இடத்தில் தனியாக இனவிருத்தி மையம் இருக்கிறது. பர்கூர் நாட்டு மாடு செம்மரை இனத்துக்கு அந்தியூர் அருகே பர்கூர் மலை மேலே இனவிருத்தி மையம் அமைத்து அதற்கானப் பணிகளை அரசு செய்து வருகிறது. அதேபோல காங்கேயம் இனத்துக்கு,காங்கேயம் பகுதியிலேயே ஒரு பண்ணை அரசு சார்பில் அமைக்கப்படவேண்டும்.

இப்போது உள்ள நிலையில், காங்கேயம் இன மாடுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள மலைகளில்தான் இருக்கின்றன. சுமார் 500க்கும் மேற்பட்ட மாடுகள் அங்கே அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் திரிகின்றன. அவை நல்ல நிலையிலும் இல்லை. மோசமான நிலையில் உள்ளன. ஆனால் அவை அருமையான இனம். அதனால் அவற்றை உடனடியாகப் பிடித்து குரூப் குரூப்பாக பிரித்து, அறிவியல் ரீதியாக இனவிருத்தி செய்து, காங்கேயம் அருகே அமைக்கப்படவுள்ள பண்ணைக்குக் கொண்டு வரவேண்டும். இதன் மூலமாகத் தான் அந்த அரிய காங்கேய இனம் அழியாமல் பாதுகாக்க முடியும்.1970களில் கிராமப்புற விவசாயிகளை ஆதரிக்கும் நோக்கில், கிராமப்புற கால்நடைகளை ஆதரிக்கும் திட்டம் அரசிடம் இருந்தது. அந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கன்றுக்கு மாதம் 10 ரூபாய் வீதம் பத்து மாதத்துக்கு அரசு கால்நடைத்துறை, விவசாயிக்கு வழங்கும். அதேபோல இப்போதும் நாட்டு இன மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, கன்று ஒன்றுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கவேண்டும்.

இது நேரடியாக, வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குச் சென்று சேரும் வகையில் செயல்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக திட்டம் வைத்துள்ளோம், வைக்கோல் கொடுக்கிறோம் என்று இல்லாமல் நேரடியாக கால்நடைத்துறை, பணத்தை வாங்கிவிட்டால் விவசாயிகள் பார்த்துக் கொள்வார்கள். நன்றாகவும் மாடுகளை வளர்ப்பார்கள். அதனால் அரசு வைக்கோல், தீவனம் கொடுக்கும் வேலைக்குப் போகவேண்டியது இல்லை. அதில் நடக்கும் மிடில் மேன், டெண்டர் முறைகேடுகள் எல்லாம் தடுக்கப்படும்.

                    

உம்பளச்சேரி கால்நடைப்பண்ணை நல்ல நிலையில் இல்லை. அதற்கு ஆர்வம் உள்ள கால்நடை மருத்துவர்களை அங்கு நியமிக்க வேண்டும். அதற்கு உரிய ஊக்கத் தொகையும் சரியாக வழங்கிட வேண்டும். அப்படி செய்தால் தமிழகத்தின் எந்த மாட்டினமும் அழியாது. அவற்றை அதிகம் பால் கொடுக்கும் இனமான மாடாகவும் மாற்றிட முடியும். ஏனெனில் வெளிநாடு, வெளிமாநில மாடுகளின் பெருக்கம் இதற்காகத்தான் தமிழகத்தில் அதிகரித்தது. நமது மாடுகளையே பையோ டெக்னாலஜியை பயன்படுத்தி அதிகம் பால் கொடுக்கும் இனமாக மாற்றிட முடியும். இதில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்திட வேண்டும். அப்போதுதான் பாலும் கொடுக்கும், வேலையும் செய்யும் என்ற நிலையில் நாட்டு மாடுகள் மாறும்.

முதல் தடவையாக பட்ஜெட்டில் மரபின நாட்டு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம்.அதற்காக தமிழக அரசை தமிழக  கால்நடை வளர்ப்போர் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்" என்றார் மன நிறைவோடு.       

- சி.தேவராஜன்                                                                            Trending Articles

Sponsored