''நாங்கள் என்ன தீவிரவாதிகளா?'' - போலீஸுக்கு எதிராகப் பொங்கும் மக்கள் அதிகார அமைப்புSponsoredக்கள் அதிகார அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் தலைமையில் ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜுவை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், உளவுத்துறை போலீசார் மற்றும் மாவட்ட காவல்துறையினர் குறித்துப் புகார் கூறியிருந்தனர்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் அதிகார அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன்,“சமீபகாலமாக திருச்சி மண்டலத்தில், எங்கள் மக்கள் அதிகாரத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு காவல்துறை நெருக்கடி கொடுக்கிறது. குறிப்பாக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்டவை நடத்திட அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், எங்கள் தோழர்களின் பிரசாரத்துக்குத் தடை விதிப்பதோடு, பொதுமக்கள் மத்தியில், எங்களைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள் உளவுத்துறை போலீஸார் மற்றும் கியூ பிரிவு போலீஸார். நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல்துறை, இப்படி ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு எதிராகச் செயல்படுவது சட்டவிரோதமானது.

Sponsored


தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம். கடைசி நேரத்தில், அனுமதியை ரத்து செய்ததுடன், எங்கள் அமைப்பின் தோழர்கள் முரளி மற்றும் செல்வம் உள்ளிட்டவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இதேபோல், கடந்த 15-ம் தேதி மணப்பாறையில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரினோம். முதலில் வாய் மொழியாக அனுமதி கொடுத்தார்கள். நாங்கள் போராட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, போராட்டத்தைத் தொடங்கிய சில நிமிடங்களில், 'இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடையாது' எனக்கூறி எங்கள் அமைப்பின் 25 தோழர்களைக் கைது செய்தனர். மேலும் கரூரில் சுவரொட்டி ஒட்டியதாக இரண்டு தோழர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 17-ம் தேதி பள்ளிப் பாடப் புத்தகத்தின் அட்டையில் திருவள்ளுவர் படம் கொண்ட லேபிள் ஒட்டியதாக 5 பேரைக் கைது செய்தனர். இதுகுறித்து தெருமுனைப் பிரசாரம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை, நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லை போன்ற ஊர்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை பல்வேறு கட்சித்தலைவர்கள் நேரில் சென்று ஆதரித்துப் பேசி வருகின்றனர். சில இடங்களில் போராட்டத்திலும் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில், எங்கள் இயக்கத்தின் தோழர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.

Sponsored


ஆனால், கியூ பிரிவு போலீசார் எங்கள் தோழர்களை மட்டும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று அவதூறாகப் பேசி மக்களிடம் எங்களைப் பற்றி பீதியை உண்டாக்குகிறார்கள். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளை போலீஸார் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றுதான் திருச்சி மண்டல ஐ.ஜி-யை சந்தித்துப் புகார் தந்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
 
தொடர்ந்து போலீசார், இதேபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அடுத்தகட்டப் போராட்டங்களை அறிவிப்போம்” என்றார் காட்டமாக.
 
- சி.ய.ஆனந்தகுமார். 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்Trending Articles

Sponsored