யார் யாரோ வர்றாங்க... கையில் கவர் தந்து போறாங்க..! - தினகரனுக்கு ஒரு கவிதை



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பாகப் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் எம்.ஜி.ஆர், கறுப்பு எம்.ஜி.ஆர் பாணியில் மூதாட்டி கை பிடித்தபடி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்தப் படத்தைப் பார்த்து சினேகன் ஸ்டைலில் கவிதை எழுதியபோது... 

Sponsored


ய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு..?
அய்யா... நீங்க வேணுமாய்யா எங்களுக்கு?

Sponsored


இமைப்பொழுதும் தூக்கமின்றிப் பிரசாரம் செஞ்சீங்க...
தொப்பியோட களமிறங்கி தொகுதிப் பக்கம் வந்தீங்க... 

Sponsored


ஃபெரா வழக்கு, பார்க்லேஸ் வழக்கு... 
லண்டன் ஹோட்டல் வழக்கு... மோசடி வழக்கு...
எத்தனையோ வழக்குகளும் காலைப் பின்னி இழுக்கையிலே
அசந்து ஓய்ஞ்சிடாம தொடர்ந்து நடந்தீங்க... 

வழக்குகளில் தப்பிக்க என்னென்னமோ பண்ணுனீங்க...
சிங்கப்பூர் குடிமகன்னு உங்களை நீங்களே சொன்னீங்க...

எப்போதும் சின்னம்மாவை மனசில நினைச்சீங்க... 
உடல்நலன் கருதாம உடம்பும்  இளைச்சீங்க... 

 அய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு..?
நீங்க வேணுமாய்யா எங்களுக்கு..?

அரசியல் போதுமுன்னு வெளிநாடு போனீங்க... 
அங்கேயும் அணைக்கட்டத் திரும்பி வந்தீங்க...

ஜெயலலிதா ஒதுக்கி வைக்க, ஓரமா நின்னீங்க... 
அந்தம்மா போனதுமே நடுமனைக்கு வந்தீங்க... 

பங்காளி, மாமன் மச்சான் அத்தனை பேரோடும் நுழைஞ்சீங்க... 
குடும்பம் எனும் மந்திரத்தால் தமிழகத்தை ஆண்டீங்க... 

எதிர்த்துப் பன்னீர் கிளம்பினாலும், தியானம் செய்யப் போனாலும்
எடப்பாடியார் குறுக்கே விழுந்தாலும், வாக்கெடுப்பு வறுத்தாலும் 
கடைசியில் நீங்க தானே வென்றீங்க... 

சின்னம்மாவுக்குப் பின்னாடி பதவியையும் பிடிச்சீங்க...
இடைத்தேர்தல் வந்ததுமே வேட்பாளரும் ஆனீங்க... 

இரட்டை இலையைப் பிடிக்க எத்தனையோ முயற்சிகள் செஞ்சீங்க... 
எப்பாடு பட்டாவது வாங்கிவிடத் துடிச்சீங்க... 

சிரிச்சதுக்கு சந்தேகப்பட்ட சின்னம்மா பின்னாடி நின்னீங்க...
சின்னம்மா போனதுமே சின்னத்தையும் இழந்தீங்க... 

ஒரு பக்கம் வழக்கு இழுக்க, மறு பக்கம் உறவு இழுக்க, 
என்ன செய்றதுனு தெரியாம விழி பிதுங்கித் தவிச்சீங்க... 

எம்.ஜி.ஆர் போலத்தான் தகதகனு ஜொலிச்சீங்க... 
தொப்பியைப் போட்டுக்கிட்டுக் களத்திலும் குதிச்சீங்க... 

ஏழைபாழைகளைச் சிரிச்ச முகத்தோடு அணைச்சீங்க... 
இது எத்தனை நாளைக்குனு நீங்களும் நினைச்சீங்க..?

யார் யாரோ வர்றாங்க... கையில் கவர் தந்து போறாங்க...
இலைக்குப் போடும் ஓட்டயெல்லாம் தொப்பிக்குக் கேட்குறாங்க... 

அய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு...
நீங்க வேணாம்யா எங்களுக்கு!

ஆர்.கே.நகரில் ஜெயிச்சு வந்தா சிங்கப்பூர் ஆகுமுனு சொல்றீங்க... 
ஏற்கெனவே ஜெயிச்ச தொகுதியையெல்லாம் என்னய்யா பண்ணுனீங்க..?

பாலாறும் தேனாறும் பாய்ஞ்சு மறுகால் ஓடும்...
ரோடு பளபளங்கும்; ஊரு மணமணக்கும்... 
கதைகதையாச் சொல்லித்தான் அறிக்கையெல்லாம் விட்டீங்க... 
ஜெயிச்சு போனாதான் எங்களை நடுத்தெருவில் விடுவீங்க..!

உங்க கட்சி செஞ்ச நலத்திட்டங்கள் உங்களுக்கே தெரியலையா..?
இல்லை... அப்படி எதுவும் செஞ்சமாதிரி யாருக்கும் நினைவில்லையா..?
பிறகெதுக்கு காசு தந்து ஓட்டுப் போடச் சொல்றீங்க..?
காலமெல்லாம் வாக்களிச்சு எங்களைக் காலம்போகச் சொல்றீங்க..?

அய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு...
நீங்க வேணாம் எங்களுக்கு!



Trending Articles

Sponsored