தள்ளிப் போகுமா இடைத்தேர்தல்? டெல்லியில் இன்று அவசர ஆலோசனை



Sponsored



ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12–ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 62 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.  இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி என்பவர் முதலில் நியமிக்கப்பட்டார். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அவர் தடுக்கவில்லை என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தவுடன் தேர்தல் அதிகாரி பத்மஜாதேவி, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோர் மாற்றப்பட்டனர். தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயரும், போலீஸ் கமி‌ஷனராக கரண் சின்காவும் நியமிக்கப்பட்டனர்.

வேட்பாளர்களின் செலவு கணக்கை கண்காணிக்கவும் பண பட்டுவாடா தொடர்பான புகார் குறித்து விசாரணை செய்யவும் அதிகாரிகள் உடனே நியமிக்கப்பட்டனர். 256 பூத்களையும் கண்காணிக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொகுதி முழுக்க சுற்றி வருகிறார்கள். தேர்தல் பொதுப் பார்வையாளராக பிரவீண் பிரகாஷ், செலவின பார்வையாளராக அபர்ணா வில்லூரி, காவல் பார்வையாளராக ஷிவ்குமார் வர்மா, சிறப்பு பார்வையாளர்களாக சமீர் டெக்ரிவால், மல்லிகார்ஜூனா உட்டாரே ஆகியோரை தேர்தல் ஆணையம் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது.

Sponsored


இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி டெல்லியில் இருந்து, துணை தேர்தல் கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா சென்னை வந்தார். அவர், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். வெள்ளிக்கிழமை அன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், தனது ஆய்வு அறிக்கையை ஏப்ரல் 1-ம் தேதி டெல்லியில் தேர்தல் கமி‌ஷனிடம் கொடுத்தார். அதற்கு பிறகுதான், ஆர்.கே.நகர் தொகுதியின் உதவி தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கூண்டோடு தூக்கி அடிக்கப்பட்டனர். இடைத்தேர்தல் புகார்கள் அடுக்கடுக்காக டெல்லிக்கு வந்து கொண்டிருந்ததால் கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  குட்டி குட்டி தெருக்களுக்குள்ளும் சென்று ஆய்வு செய்ய மைக்ரோ பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதும் அனைத்து தெருக்களிலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

Sponsored


பண பட்டுவாடாவை தடுக்க இப்படி, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து தொடர்ந்து எடுத்தாலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த கொண்டே இருக்கின்றன. சிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை 4- ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு  ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன், வருமான வரித்துறை மூத்த அதிகாரிகளூம் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்தும், பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கிறது என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம்  தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ''ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தயாராவது குறித்தும், அது தொடர்பான பிற வி‌ஷயங்களை விவாதிப்பதற்காகவும், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஆகியோரும் ஏப்ரல் 3–ம் தேதி  பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் இருந்தபடியே பங்கேற்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவால் ஆர்.கே.நககரின் கள நிலவரத்தை உளவுப் பிரிவு மூலமாகவும் பல்வேறு வழிகளிலும் மாநில அரசு அறிக்கையாக கேட்டுப் பெற்றுள்ளது.

இந்நிலையில், பணப்பட்டுவாடா, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன்வைத்து ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிப்போகுமா? என்ற விவாதமும் இப்போது எழுந்துள்ளது. கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்களை நிறுத்தி வைத்தது போல, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் நிறுத்தி வைத்துவிடுமோ என்ற அச்சமும் இந்த திடீர் கூட்டத்தால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்



Trending Articles

Sponsored